பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்! (மகளிர் பக்கம்)
கொரோனாவிற்கு பிறகு பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறிட்டாங்க. காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம். சரியாக இல்லை என்றாலும் ஆன்லைன் முறையிலேயே மாற்றிக் கொள்ளலாம். இப்படி பல வசதிகள் இருப்பதால், இன்றைய தலைமுறையினர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதல் ஆடைகள், செருப்பு, அழகு சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கி வருகிறார்கள். இவர்களின் பல்சினை புரிந்து கொண்ட ராஷ்மி பெண்களுக்காகவே ஒரு ஷாப்பிங் இணையத்தை துவங்கியுள்ளார். ஃபேப்லி என்று அழைக்கப்படும் இந்த இணையத்தில் விற்பனையாளர்களும் பெண்களே என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
‘‘நான் மதுரைக்கார பெண். படிச்சது எல்லாம் அங்கதான். பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சிட்டு பெங்களூரில் வேலைக்காக வந்தேன். இது ஐ.டி நகரம் என்பதால் இங்கேயே செட்டிலாயிட்டேன். நிறுவனத்தில் சில காலம் வேலைப் பார்த்த நான் தனிப்பட்ட முறையில் ஒரு ஐ.டி நிறுவனம் துவங்கினேன். அந்தநிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் பெண்கள் பலர் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களின் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் எனக்கும் என் சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஒரு தளம் அமைக்க முடிவு செய்தேன்.
அப்படித்தான் ஃபேப்லி உருவானது. இது அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைனில் பொருட்களை வாங்கக்கூடிய தளம். ஆனால் இதில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். அதாவது பெண்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும்தான் இந்த தளத்தில் விற்க முடியும். இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஃபேப்லியில் இணைந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் தளத்தில் விற்பனையில் உள்ளது’’ என்றவர் இதனை எவ்வாறு அமைத்தார் என்பது குறித்து விவரித்தார்.
‘‘நான் இதை 2022ல்தான் ஆரம்பிச்சேன். நான் சாஃப்ட்வேர் துறையில் இருப்பதால், அமேசான் போன்ற இணையம் எவ்வாறு செயல்படும் என்று தெரியும். அதனால் இணையம் அமைப்பது எனக்கு சுலபமாக இருந்தது. ஆனால் பெண்களை இதில் இணையவைப்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்து வந்தது. கொரோனாவிற்கு பிறகு பல பெண்கள் இன்ஸ்டா மற்றும் முகநூலில் தங்களுக்கான சிறிய அளவில் பிசினசை செய்து வந்தார்கள். அவர்களின் பட்டியலை எடுத்தேன். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு முன்பு என்னுடைய ஆய்வுக் குழு அவர்களைப் பற்றியும் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும் எனக்கு ரிப்போர்ட் கொடுத்திடுவாங்க. அடுத்து நான் அவர்களிடம் நேரடியாக உரையாடுவேன்.
அதன் பிறகு தான் அவர்களை எங்களின் விற்பனை தளத்தில் இணைப்பேன்.பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில் என்றாலும், அவர்களின் பாதுகாப்பு அவசியம் என்று நினைப்பார்கள். எல்லாவற்றையும் விட விற்பனையாகும் பொருட்களுக்கான தொகை சரியாக அவர்களை வந்தடையுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்த எனக்கு ஆறுமாசமானது. அதுவரை கொஞ்சம் போராட்டமாகத்தான் இருந்தது.
முதலில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பெண்தான் எங்களை நம்பி எங்கள் இணையத்தில் இணைந்தார். அவரின் பொருட்களை மட்டும் தான் இதில் வெளியிட்டோம். அதன் பிறகு மற்றவர்களும் சேர முன்வந்தார்கள். தற்போது குழந்தைகளுக்கான பொருட்கள், பரிசுப் பொருட்கள், செருப்புகள், ஹேண்ட்பேக், சிறுதானிய உணவுப் பொருட்கள், அழகு சாதனங்கள், உடைகள், ஹெர்பல் சானிட்டரி நேப்கின்கள் என பல விதமான பொருட்களை இங்கு வாங்கலாம்.
பொருட்கள் விற்பனைக்கு இணையத்தில் சேர்ந்தாலும், மார்க்கெட் நிலவரம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு தனிப்பட்ட குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது மார்க்கெட்டில் என்ன பொருட்கள் டிரண்டிங்கில் இருக்குன்னு பார்ப்பாங்க. அதற்கு ஏற்ப அந்த பொருட்களையும் நாங்க இதில் இணைத்து வருகிறோம். மேலும் எங்களுடன் இணைந்து இருக்கும் பெண்களுக்கு அவர்களின் பொருட்களை மற்ற இடங்களில் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என்பது குறித்தும் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறோம். பொதுவாக பெரிய தொழிலதிபர்கள் இது ஒரு போட்டியாக நினைக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பாங்க.
அவங்க மாறமாட்டாங்க. ஆனால் இவங்க அனைவரும் மைக்ரோ தொழில்முனைவோர்கள். இவர்களுக்கு என தனிப்பட்ட மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று விரும்பினேன். அதைத்தான் நான் தற்போது செயல்படுத்தி வருகிறேன். அதனால் அவர்களுக்கு மார்க்கெட்டிங் குறித்து மட்டுமில்லாமல் அதனை எவ்வாறு பேக்கேஜ் செய்யணும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறேன். என்னுடைய அனைத்து விற்பனையாளர்களிடம் நான் நேரடியாக தொடர்பில் இருப்பதால், அவர்களுக்கு தகுந்த நேரத்தில் ஆலோசனை வழங்கி அவர்களின் விற்பனையினை உயர்த்த முடிகிறது.
எல்லாவற்றையும் விட விற்பனையாகும் பொருட்களின் விலையினை விற்பனையாளர்களுக்கு சரியாக செலுத்தி வருவதுதான் எங்களின் சக்சஸ் என்று சொல்வேன். அதற்கென தனிப்பட்ட சாஃப்ட்வேர் அமைத்திருக்கிறோம். அது ஒருவரின் பொருள் விற்பனையாகிறது என்றால் அவர்களின் தொகை மற்றும் எங்களின் கமிஷன் தொகை என்ன என்று கணக்கிட்டுவிடும். இதை ஆய்வு செய்து அவரவர்களுக்கான தொகையினை நாங்க செலுத்திடு வோம். ஆரம்பிச்ச போது 15 பொருட்கள்தான் எங்களின் இணையத்தில் இருந்தது. அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையாளர்களை சேர்த்தோம். ஒரு தொழில் செய்யும் போது மற்றவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். விற்பனையாளர்கள் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அவசியம்.
தற்போது இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் எங்களின் பொருட்களை மக்கள் வாங்குகிறார்கள். குறிப்பாக நம்மூர் மசாலா பொருட்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மேலும் பெண் தொழில் முனைவோர்களை இணைக்க வேண்டும். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களையும் இதில் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அடுத்து என்னதான் நாம் ஒரு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தாலும் பெண் தொழில் முனைவோர்களால் அவர்களின் பொருட்களை மற்ற இடங்களில் மார்க்கெட் செய்ய கொஞ்சம் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காக ஆன்லைனில் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறேன். இதன் மூலம் தங்களின் பொருட்களை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என்பது குறித்து புரியும். இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் அவர்களால் விற்பனை செய்ய முடியும்’’ என்றார் ராஷ்மி.