கஷ்டங்களை கண்டு தளர்ந்துவிடாமல் உழைத்தால் ஜெயிக்கலாம்! (மகளிர் பக்கம்)
பெண்கள் இந்தியாவில் எல்லா துறைகளிலும் காலூன்றி விட்டனர். அவர்கள் இல்லாத துறையே இல்லை என்று கூட சொல்லலாம். பல பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சவால்கள் இருந்தாலும் அதை மிகவும் சாதூர்யமாக எதிர்கொண்டு இந்த சமுதாயத்தில் நாமும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று துடிப்போடு இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் நெருக்கடிகள், அவமானங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் சவால் விடும் வகையில் சாதித்துக் காட்டும் பெண்களும் நமக்கு தெரியாமலேயே பலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் பத்மாவதி.
சிதம்பரத்தில் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பத்மாவதி. இவர் இங்கு பிளவர் மில் ஒன்றை நடத்தி வருகிறார். நெல் அரைப்பது, மாவு அரைப்பது, மிளகாய் தூள் அரைப்பது, சிறுதானியங்கள் உடைத்து தருவது என அனைத்து இயந்திரங்களையும் இயக்கி வருகிறார். தனக்கென்று ஒரு தொழில் நடத்தி வந்தாலும், அதற்கு பின் பல சங்கடங்களை சந்தித்துள்ளார். அது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
‘‘இந்த மில்லினை என் கணவர்தான் ஆரம்பத்தில் நடத்தி வந்தார். எங்க குலதெய்வத்தின் பெயர் பரமேஸ்வரி என்பதால், அதே பெயரில் இதனை இயக்கி வந்தார். மகன், மகள் என எங்களுடையது அளவான குடும்பம். வாழ்க்கையும் சந்தோஷமாக இயங்கிக்கொண்டிருந்தது. ஏழு ஆண்டுக்கு முன் என் கணவர் திடீரென்று காலமானார். என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் வெளியே வேலை பார்க்கும் அனுபவங்கள் கிடையாது. மகள் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தையல் கலை குறித்த பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். மகன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரையும் காப்பாற்றும் முழு பொறுப்பு என் மேல் விழுந்தது.
என் கணவரின் மரணத்தால் நான் நொடிந்து போனேன். ஆனால் அவரின் மரணம் என்னை விட என் மகளை அதிகம் பாதித்திருந்தது. அவர் இறந்த நாள் முதல் மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். வீட்டில் ஒரு மூலையில்தான் இருப்பாள். நாம் சென்று பேசினாலும் பதில் அளிக்க மாட்டாள். அவளுக்கு அப்பா பாசம் அதிகம். அவரின் இழப்பை அவளால் ஏற்றுக் ெகாள்ள முடியவில்லை. ஏழு வருஷமாச்சு. வீட்டை விட்டு வெளியே போகவில்லை, யாரிடமும் பேசவில்லை. எனக்கும் என்ன செய்வதுன்னு புரியல. குடும்பத்தை கவனிக்கணும். அதனால் என் கணவர் விட்டுச்சென்ற ரைஸ் மில்லை மீண்டும் ஓட்ட முடிவு செய்தேன்.
அரவைப் பொறுத்துதான் வருமானம் என்பதால், பணியாளர்களை வைக்க முடியாது. அதனால் நானே அதை செயல்படுத்த ஆரம்பித்தேன்’’ என்றவர் இந்த நிலையிலும் தன் மகனை டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.‘‘அரிசி மற்றும் மிளகாய் தூள் அரைப்பது, மாவு அரைப்பது என எல்லா வேலையும் நானே பார்த்துக் கொண்டேன். நான் மில்லில் கஷ்டப்படுவதைப் பார்த்த என் மகனும் எனக்கு உதவியாக மில்லில் வேலை பார்க்கிறார். என் கணவர் இறந்த பிறகு எந்த உறவுகளிடமும் உதவி என்று எனக்கு நிற்க பிடிக்கவில்லை. என் கணவர் ஒரு வேலை செய்து வந்தார். அதை என்னாலும் செய்ய முடியும்.
பிள்ளைகளை படிக்க வைத்து காப்பாற்ற முடியும். அந்த தன்னம்பிக்கைதான் என்னை இந்த மில்லினை இயக்க வைத்தது. இது ஆண் செய்யக்கூடிய வேலைன்னு என் உறவுக்காரங்க சொன்னாங்க. நான் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்னுடைய ஒரே லட்சியம். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு என் கணவர் விட்டு சென்ற மில்லை மீண்டும் இயக்கணும். நானும் மில்லை நடத்தி வருகிறேன்.
குடும்பமும் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. ஆனால் என் மனதில் ஒரு மிகப் பெரிய சங்கடம் இருக்கு. என் மகளை பல டாக்டரிடம் காண்பித்தாச்சு. ஆனாலும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. சாப்பிடுவாள், தூங்குவாள், ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பா, மற்றபடி எதுவுமே தெரியாது அவளுக்கு. என் மகனோ படித்த படிப்பிற்கான வேலைக்கு செல்லாமல், என்னுடன் சிரமப்படுகிறான். கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம். சொல்லிக்கிற அளவுக்கு வருமானம் வரவில்லை என்றாலும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இல்லை.
பண்டிகை நாட்களில் குறிப்பாக தீபாவளியின் போது கூட்டம் அலைமோதும். நானும் என் மகனும் பம்பரமாய் சுழல்வோம். ஒரு பக்கம் அரிசி அரைச்சிக்கிட்டு இருக்கும்போதே இன்னொரு பக்கம் மிளகாய் அரைக்க சொல்லுவாங்க. அடுத்து உளுந்து அரைக்க வருவாங்க. அவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், அவர்களின் தேவையினை பூர்த்தி செய்து வருகிறேன்’’ என்றவர் தன்னுடைய மில்லில் பொடிகளை அரைத்து அதனையும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘இந்தக் காலத்தில் யாரும் சீயக்காய், கஸ்தூரி மஞ்சள், உடலுக்கு பூசும் அரைப்பு தூள் எல்லாம் பயன்படுத்துவதில்லை. அதனை நான் அரைத்து விற்பனை செய்து வருகிறேன். அதேபோல் சிறுதானியங்களையும் மாவாக அரைத்து விற்கிறேன். அடுத்து மரச்செக்கு போடணும்னு எண்ணம் இருக்கு. அதற்கான வேலையில் நானும் என் மகனும் ஈடுபட்டு வருகிறோம். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை கிடையாது.
அதை கண்டும் மனசு தளரக்கூடாது. என் கணவரின் மறைவிற்கு பிறகு வாழ்க்கையே போச்சுன்னு நினைச்சேன். அடுத்த நிமிடம் என் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்னு முடிவு செய்தேன். கணவர் இருந்தவரை சந்தோஷமாக வாழ்ந்தோம். அதை என்னால் எப்போதும் மறுக்க முடியாது. அவரின் இழப்பு எங்க மூவரின் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றி விட்டது. முதலில் என் மகனின் எதிர்காலத்திற்காக இந்த மில்லை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். அடுத்து என் மகள் குணமாகணும்’’ என்றார் பத்மாவதி.