நாதம் நம் ஜீவனே!! (மருத்துவம்)
இந்த நிமிடத்தில் நீங்கள் அணிந்திருக்கும் உடை, செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது படித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரை உங்களை சுற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் வீடு, பொருட்கள், உலகம் இவை அனைத்திற்கும் பின்னால் இருப்பது ‘சப்தம்’எனும் ஒற்றை ஆற்றல் என்பது சற்று யோசித்தால் நமக்கு வியப்பையும், ஆர்வத்தையும் அளிக்கும்.
ஒரு மாபெரும் துணிக்கடைக்கு செல்கிறீர்கள், அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, சட்டைகளில் இப்போது நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? விடை மிகவும் சுலபம், அந்த தருணத்தில் உங்களுக்கு நீங்களே பேசி, சொல்லி, மறுத்து, தலையாட்டி, அல்லது புன்னகை செய்து, மனதளவில் (இந்த கலர்ல வேற சட்டை நம்மகிட்ட இல்ல, இது நல்லாயிருக்கும், இத மாதிரி ஒண்ணுதான் தேடிக்கிட்டு இருந்தேன்) இப்படி பல்வேறு சப்தங்களை ஏற்படுத்திய பின்னர், மற்ற சட்டைகளை விலக்கிவிட்டு இதை உங்கள் கைகள் சென்று தொட்டது.
இன்று அதை நீங்கள் அணியும் போதும் இதே போல மனதளவில் ஒரு மிகப்பெரிய ஒத்திகை நாடகம் நடந்து, பேசி முடிவுசெய்து, இதோ அணிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த ‘உள்’ உரையாடல் நீண்ட நேரமெல்லாம் நடப்பதில்லை அல்லது நாம் கவனிப்பதில்லை. பெண்களின் உலகமும் இதே போன்றதே. ஒரு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது 100 முதல் 200 சப்தங்களையேனும் ‘உள்ளும்’புறமும் உருவாக்காமல் அவர்களால் அதை நிறைவு செய்ய முடியாது. இப்படி நாம் செய்யும் மிகச்சிறிய செயல்கள் முதல் மாபெரும் செயல்கள் வரை அனைத்தும் இங்கே ‘சப்தத்தால்’ கட்டமைக்கப்பட்டவை.
விளாடிமிர் காவ்ர் எனும் விஞ்ஞானி 1957ல் ‘‘கென்னான் சோனிக்’’ எனும் கருவியை கண்டுபிடிக்கிறார். இது ‘‘அதீத ஒலி அலைகள்’’ மூலம் (மனிதர்களை) எதிரிகளை கொல்லும் ஒரு கருவி, அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. இதில் இருக்கும் மாபெரும் சவாலே, அந்த கருவியை இயக்குபவரும் அதன் பாதிப்புக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது என்பதே. பின்னர் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுடன், SONIC WEAPONS – ‘‘LRAD’’ (A Long-Range Acoustic Device) என்கிற பெயர்களில், ராணுவத்தில், கலவரத்தை கட்டுப்படுத்த, கடல்பயணங்களில் எதிரிகளை எச்சரிக்க என சப்தத்தை மையமாக கொண்ட கருவிகள் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஆக, ஒலி என்கிற ஆற்றல், பிடித்த சட்டை வாங்கி அணிய வைக்கிறது, சமையலறை சாம்பாராக மாறுகிறது, கலவரத்தைக் கட்டுப்படுத்துகிறது, எதிரியை எச்சரிக்கை செய்கிறது, மனிதனை கொல்லக்கூடியதுஎனில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் இதே சப்தங்களை பயனுள்ளதாக மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதா எனில், ‘‘இசை, பாடல்கள், ஜபங்கள், மந்திரங்கள் என ஒலியை நேர்மறை ஆற்றலாகப் பயன்படுத்தவும் முடியும். ஒலியை குறிப்பிடுகையில் நம் மரபு நாத பிரம்மம், நாதயோகம், மந்திர உச்சாடனம் என பல்வேறாக வகைப்படுத்துகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதுமே நாதத்தால் ( ஒலியால்) ஆனது என்கிறது.
‘‘கோர்வையாக ஸ்வரங்களை தேர்ந்தெடுக்காத போது எப்படி இசை இனிமையாக ஒலிக்காதோ, அப்படியே மனமும் தொடர் ‘‘உள்’’ உரையாடலை சரியாக கோர்வையாக நிகழ்த்தாதபோது, அமைதியை, சமநிலையை அடைவதில்லை. அப்படி ஒரு ஒலியை, சப்தத்தை நமது வாழ்வின் ஒவ்வொரு நாளின் தொடக்கமாகவும், அன்றைய நாளின் முடிவாகவும், வகுத்துக்கொள்ளும்போது, மனதளவில், உணர்வளவில், ஒரு சமநிலையை அடைய முடிகிறது.
இதை ஒரு பயிற்சியாக தொடங்கி, பழக்கவழக்கமாக மாற்றி, தினசரி கடமையாக, அன்றாட பணியாக, கைக்கொள்ளும் பொழுது, நாம் சென்று சேர்ந்திருக்கும் மனநிலை திரும்பி பார்த்து வியக்கும்வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. உங்களுக்கான ஒலியை தேர்ந்தெடுக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் இதை ஒரு தவம் போல இயற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் ஏதோஒரு வகையில் இருக்கிறோம். மாபெரும் படைப்பாளிகள் அனைவரும் ஏதோ வகையில் ஒலியுடன் தங்களை இணைத்துக்கொண்டவர்கள், இசையாக, பாடலாக, மந்திரங்களாக.
அதைவிட முக்கியமான விசயம், நம் மனம் செயல்படும் விதம். ஏற்கனவே ஒரு கட்டுரையில் பகிர்ந்தது தான் ஒரு நாளில் 12000 முதல் 42000 வரை எண்ணங்கள் வந்து செல்லும் இந்த மனம், மூளை, உடல், வாழ்வு, பதற்றமும், அசூயையும் கொண்டதாகவே ஒவ்வொரு தினத்தையும் அமைக்கிறது. ஆக, காலையில் தூங்கி விழிக்கும் கணம் ஒரு 10 நிமிடங்கள் நீங்கள் ஒரு மந்திரத்தில், இசையில், ஜபத்தில், தொடங்க முடியுமெனில், அன்றைய நாளை 10 நிமிட ஒலி சார்ந்த விசயத்தில் முடிக்க முடியுமெனில், மிக மெதுவாக சில மாற்றங்கள் நிகழ்வதை காணமுடியும். அதிலும் ஒருசில மந்திரங்கள், ஜபங்கள், எந்த வித நம்பிக்கையும் அற்ற ஒருவருக்கும். பயனளிக்க வல்லவை. ஆகவே அவற்றை UNIVERSAL MANTRAs எனும் பொது மந்திரங்கள் பிரிவில் வைத்திருக்கிறார்கள். அதாவது, அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவை வெறும் சப்தங்கள் என்கிற நிலையில், கேட்பது இன்றியமையாதது, நம்முள்ளே செய்ய வேண்டியதை அந்த ஒலி செய்யும்.
நாம் மனதில் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஒலியை விட இசை மேலானது. நுண்ணிய அதிர்வலைகளைக் கொண்டது, நம் அக இரைச்சலை குறைக்க வல்லது, இசையை விட, மந்திரங்கள், ஜபஙகள் மேலும் ஆழம் செல்லக்கூடியவை. நம்பிக்கையை விட பயிற்சியை மூலதனமாகக் கொண்டவை இந்த வாழ்வியல் முறை . தர்க்கம் சார்ந்த புத்திசாலித்தனம் சார்ந்த நமது அத்தனை திறமைகளையும், நம்மை அவதானிக்க திருப்பும்போது நாம் அடையும் வியப்பிற்கும், அதிர்ச்சிக்கும் எங்கேனும் தீர்வு இருக்குமெனில், அது மரபில் உள்ளது, ‘‘நல்-ஒலி’’ என.
யோக மரபில் சப்தங்களை முன்னிறுத்தி செய்யக்கூடிய பயிற்சிகளும் பாடங்களும் உள்ளன. இவ்வகை பயிற்சிக்கு நாதயோகம் எனப் பெயர் இதன் நோக்கமே நம் ஆழம்வரை சென்று அழுத்தி வைக்கப்பட்ட அல்லது ஒளிந்துகொண்டுள்ள எதிர்மறையான பல்வேறு அம்சங்களை நீக்குவதுதான். எனினும் அவற்றை கற்பதிலிருக்கும் சவால், ‘நாத யோகத்தை , அறிந்த யோக ஆசிரியர்கள் இங்கே மிகவும் குறைவு.
பெரும்பாலானோர் ஆசன, தியானப் பயிற்சிகளுடன் நின்றுவிடுவதுண்டு அல்லது சடங்கும் சம்பிரதாயமுமான, நம் அன்றாடத்தில் கடைபிடிப்பதற்கு சிக்கலான மந்திரங்களை சொல்லிக்கொடுத்து விடுவதும் உண்டு. ஆயுர்வேத மரபிலும் ராகங்களுக்கும் திரிதோஷத்திற்கும் தொடர்புண்டு என சொல்லப்படுகிறது, உதாரணமாக சக்ரவாகம் எனும் ராகம் ‘சோகத்தை* போக்கவல்லது என்கிறார், ஆயுர்வேத வல்லுனரும் மருத்துவருமான எல் .மஹாதேவன் அவர்கள்.
ஜானு சக்ராசனம்
இந்த பகுதியில் நாம் ‘‘ஜானு சக்ராசனம் ’’ எனும் பயிற்சியை காணலாம். தரையில் ஒரு விரிப்பின்மீது அமர்ந்து கால்களை நீட்டி ஒருகாலை மடித்து கைகளை உள்புறமாக பிடித்துக்கொள்ளவும். மூச்சு உள்ளே வரும்பொழுது காலை வலமிருந்து இடமாக மேல்நோக்கி சுழற்றவும், மூச்சு வெளியே செல்லும் பொழுது காலை கீழ்நோக்கி சுழற்றிக் கொண்டு வரவும். ஐந்து முறை வலமிருந்து இடமாகவும், ஐந்து முறை இடமிருந்து வலமாகவும் சுற்றலாம். இரு கால்களுக்கும் தனித்தனியாக செய்யவும். நீண்டகால மூட்டுவலி, கால் நடுக்கம், சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி இது.