கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
70 வயதான என் அம்மாவுக்கு சர்க்கரைநோய். கடந்த ஓராண்டாக ஞாபகமறதியால் அவதிப்படுகிறார். கைகளில் நடுக்கம் இருப்பதால், சாப்பிட சிரமப்படுகிறார். நேராக நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. சில நேரம் நடக்க முயன்று கீழே விழுந்துவிடுகிறார். அம்மாவை எந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்? ஆலோசனை தேவை.
– ராஜவேலு, மறைக்காடு.
நீங்கள் சொல்லக்கூடியவை அனைத்தும் வயது முதிர்வால் ஏற்படும் ஞாபகமறதி நோய்க்கான அறிகுறிகள். மருத்துவம் இதை `டிமென்ஷியா’ என்கிறது. முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். குடும்ப மருத்துவர் இருந்தால், அவரிடம் இதற்கான சிகிச்சையைத் தொடரவும். நடக்கவும் நிற்கவும் தடுமாறுகிறார் என்றால், நரம்பு சார்ந்த குறைபாடு அல்லது `டயாபடிக் நியூரோபதி’ எனப்படும் சர்க்கரைநோயால் கால்களில் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். எனவே, சர்க்கரைநோய் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.
உடல்நிலை சீரானதும், ஞாபகசக்திக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். `டிமென்ஷியா’ இருப்பது உறுதிசெய்யப்பட்டால் தெரபி, சிகிச்சைகள் மூலம் ஓரளவு பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம். ஞாபகமறதி உள்ளவர்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்த ஆலோசனைகளுக்கு, தாமதிக்காமல் முதியோர்நல மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் எடை, தொப்பையைக் குறைக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளனவா?
– சந்திரசேகர், மணவை.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிட்டதும் உடல் எடை மற்றும் தொப்பை குறையாது. ஒருங்கிணைந்த மருத்துவ வழி முறைகளைத்தான் சித்தா பரிந்துரைக்கிறது. அப்படியான சில மருத்துவ வழிமுறைகள் இங்கே…
* தொப்பையைக் குறைக்க சிறந்த வழி, யோகாசனம். அடிவயிற்றுக்கான தனுராசனம் நல்ல பலன் தரும்.
* மருந்துகள் என்றால் திரிபலா சூரணம், நத்தைச்சூரி சூரணம், நெருஞ்சில் குடிநீர் போன்றவை மிகவும் நல்லவை. இவை, உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவும்.
* உணவில் அதிகமாகக் கொள்ளு சேர்த்துக்கொண்டால், உடலில் கொழுப்புச்சத்தைக் குறைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.
* தண்ணீர் நிறைய குடிப்பது, உடல் எடை குறைய வழிவகுக்கும். லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயத்தைக் கலந்து குடிப்பதும் நல்லது.
* தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை.
* உடல் எடை அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ளவும்.
எனக்கு நான்கு மாதங்களாக வஜைனல் இன்ஃபெக்ஷன் இருக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. ஆனால், பிறப்புறுப்பில் அரிப்பு உணர்வு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், தீர்வு என்ன?
– உமா கெளசல்யா, திருப்பூர்.
புதிதாகத் திருமணமான பெண்களுக்குத் தாம்பத்யம் காரணமாக சிறுநீர்த்தொற்று ஏற்படுவது இயல்பு. உங்களின் வயதையோ, புதிதாகத் திருமணமானவரா என்பது உள்ளிட்ட வேறு விவரங்களையோ நீங்கள் குறிப்பிடவில்லை. நான்கு மாதங்களாகப் பிரச்னை இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், அது மேலும் தீவிரமடைவதற்குள் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரைநோயின் காரணமாகவும் வஜைனல் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதற்கான பரிசோதனை அவசியம்.
அதேபோல, அல்சர் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், ஸ்கேன் பரிசோதனையும் செய்ய வேண்டும். சிறுநீர்ப்பாதையில் சிறுநீரகக் கற்கள் தங்கி இருந்தாலும், இது போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றில், உங்கள் பிரச்னைக்கான காரணத்தை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார். பொதுவாக, பிறப்புறுப்பு சுகாதாரம், நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்காமல் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள் சிறுநீர்த்தொற்றிலிருந்து காக்கும்.