விஷுவல் பர்சனாகவே என்னை யோசிப்பேன்!! (மகளிர் பக்கம்)
சமூகத்திற்குத் தேவையான, ஆனால், மற்றவர்கள் பேசத் தயங்குகிற விஷயங்களை காட்சி வழியாகவும், எழுத்து வழியாகவும் ஆவணப்படுத்தி வருபவர் ஊடகவியலாளர் கீதா இளங்கோவன். நம்பிக்கை மனுஷிகள், சாதிகள் இருக்கேடி பாப்பா, மாதவிடாய் போன்ற இவரின் ஆவணப்படங்கள் இதற்கு சான்று. மிகச் சமீபத்தில், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்த்த சென்ற ஊடகவியலாளர் கீதா இளங்கோவனைப் பார்த்ததும் உற்சாகமடைந்த மாணவிகள், பள்ளி வளாகக் கட்டிடங்களின் மேலிருந்து ஆர்ப்பரித்த நிலையில், தங்கள் துப்பட்டாக்களை கீழே தூக்கி
யெறிவது போன்ற காணொளி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. என்ன நடந்தது என்பதை அறிய ஊடகவியலாளர் கீதா இளங்கோவனை சந்தித்தோம்..
உங்களைப் பற்றி சொல்லுங்கள்..?
திருப்பூர் எனக்கு சொந்த ஊர். கீழ் நடுத்தரவர்க்க எளிய குடும்பம் என்னுடையது. என் அப்பா நகராட்சி அலுவலகத்தில் சாதாரண ஊழியர். பள்ளி இறுதிவரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.எஸ்.ஸி நியூட்ரீஷியன் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதுதான் எப்படியான சமூகத்திற்குள் நாம் வாழ்கிறோம் என்கிற புரிதல் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி.
பத்திரிகையாளராக மாறவேண்டும் என்பதே எனக்கான கனவாக இருந்தது. ஜர்னலிசம் என்றால் கஷ்டமான துறை, பெண்களால் செய்ய முடியாது என்கிற கற்பிதங்களோடு, எம்.ஏ. ஜர்னலிசம் படிக்க வீட்டில் எனக்கு சம்மதம் கிடைக்கவில்லை. எனது பத்திரிகையாளர் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு கோவையில் இயங்கிவந்த கலைக்கதிர் சிற்றிதழ் வழியாக எனக்குக் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸ் கீழ் இயங்கிவரும் ஸ்பைஸ் இந்தியா நிறுவனம் நடத்திவந்த இதழின், தமிழ் பதிப்பிற்கான ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். வெளிமாநிலத்திற்கு சென்று ஒரு பெண் வேலை பார்ப்பதா என வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தலும் வீட்டில் நடக்க, ஒருவழியாக பெற்றோரை சம்மதிக்க வைத்து, எர்ணாகுளம் சென்று நேர்காணலில் பங்கேற்றேன். ஏற்கனவே நான் ஸ்பைஸ் இந்தியா இதழுக்கு நிறைய கட்டுரைகளை எழுதியிருந்த காரணத்தால் பணிவாய்ப்பு கிடைப்பதில் கூடுதல் தகுதியாக அது அமைந்தது.
விடுதி ஒன்றில் தங்கி நான்கரை ஆண்டுகள் எர்ணாகுளத்தில் பணியாற்றினேன். வெளிமாநிலத்தில் தனியாகத் தங்கி பணி செய்தபோதுதான் எனக்கான எக்ஸ்போஷர் அதிகம் கிடைக்கத் தொடங்கியது. வெளி உலகம் குறித்த புரிதல்களும் கிடைத்தது. நிறைய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். பெரியாரின் எழுத்துக்களை உள்வாங்கினேன். பெண்ணியம் குறித்த புரிதலும் பரிமாணமும் புரிய ஆரம்பித்தது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படிக்க ஆரம்பித்தேன்.
சமூக செயற்பாட்டாளராக உங்களைப் பற்றி…?
2005ல் என் முதல் குறும்படம் ஒன்று வெளியானது. மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை நாம் எப்படி நடத்த வேண்டும், ஆனால் எப்படி நடத்துகிறோம் என்பதை உரையாடல்கள் இல்லாமல், காட்சி மற்றும் இசையின் வழியாக, மனதை நெருடும் செய்தியாகக் கொடுத்திருந்தேன். ஐதராபாத்தில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் சார்பாக எனது குறும்படம் திரையிடப்பட்டது.
1996 தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீட்டினை பெண்களுக்கு கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் இருந்த 12,000 பஞ்சாயத்துகளில் 4000 பஞ்சாயத்துகளில், பெண் பஞ்சாயத்துத் தலைவிகள் பொறுப்பேற்கிறார்கள். பெண்களைப் பின்னால் இருந்து அவர்களின் சகோதரர் அல்லது கணவர் இயக்குகிறார்கள் என்பதே ஊடகங்களின் பார்வையாக இருந்தது. பெண் பஞ்சாயத்துத் தலைவிகள் நிஜமாகவே செயல்படவில்லையா? என்கிற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. அவர்களின் தொகுதி செயல்பாடுகளை அறிய ஒவ்வொரு கிராமமாகப் பயணித்தேன். பஞ்சாயத்துத் தலைவிகளில் பலரும் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டிருந்ததை களத்தில் என்னால் நேரடியாக உணர முடிந்தது.
இதில் வீரியத்துடன், தனித்து செயல்படுகிற பஞ்சாயத்துத் தலைவிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே “பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்கிற தொடரை 2006ல் எழுதினேன். இதில் பெஸ்ட் ரிப்போர்டுக்கான “சரோஜினி நாயுடு” விருது தமிழ் மொழிக்கு எனக்குக் கிடைத்தது.1998 முதல் 2008 வரை அரசு பணி கிடைத்து, நான் மதுரையில் இருந்த காலகட்டத்தில் என்னைப் போன்ற சிந்தனையுள்ள தோழிகளோடு இணைந்து “கூடு” பெண்கள் வாசிப்பரங்கம் என்கிற ஒன்றை ஆரம்பித்தோம்.
இதில் வீட்டுவேலை செய்யும் பெண்கள், விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு பணியில் இருக்கும் பெண்கள் என வெவ்வேறு தளத்தில் இருக்கிற பெண்களை இணைத்து, மாதம் ஒரு முறை பொது இடத்தில் சந்திப்பு நிகழ்த்தி, பெண்கள் எழுதிய இரண்டு நூல்களை திறனாய்வு செய்வோம். இந்த சந்திப்பில் பெண்களுக்கு அம்மா, சகோதரி, மனைவி என்கிற எந்த முகமூடியும் இல்லாமல் சக மனுஷியாக மட்டுமே சந்திப்போம்.
அப்போது பெண்களின் பிரச்னைகள் நிறைய பேசி விவாதிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் சவால்களைக் கடந்து வந்த பெண்களை, அவர்கள் எப்படி கடந்து வெற்றியாளராக நிற்கிறார்கள் என்பதை, அவர்களையே வரவழைத்து பேச வைப்போம். இதில் மயான வேலை செய்யும் பெண், காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பெண், முதல் பெண்கள் ஜமாத் தலைவி, முதல் சிவில் சர்வீஸ் பயிற்சி நடத்தும் பெண், மாற்றுத் திறனாளி பெண் என கூட்டங்களை நிகழ்த்தினோம். பெண் இயக்குநர்கள் எடுத்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் எனவும் திரையிட்டு திரைப்பட விழா ஒன்றை இணைந்து நடத்தினோம். அப்போதுதான் மாதவிடாய் ஆவணப் படத்திற்கான விதை எனக்குள் விழுந்தது.
நீங்கள் உருவாக்கிய ஆவணப்படங்கள் குறித்து…?
எப்போதும் என்னை ஒரு விஷுவல் பர்சனாகவே யோசிப்பேன். நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தபிறகு, 2012ல் மாதவிடாய் ஆவணப்படத்தை இயக்கும் பணியில் இறங்கினேன். அதுவரை எழுதுவது, வாசிப்பது, ஆவணப் படத்திற்கான களப்பணிகள் என என்னை கூர்மைப்படுத்திக் கொண்டே இருந்தேன். மாதவிடாய் ஆவணப்படத்தில் பணியாற்றிய அனைவரும் பெண்கள். நாங்கள் நிறைய கிராமங்களுக்குப் பயணித்து அங்கிருக்கும் பெண்களிடம் உரையாடியபோதுதான், பெண் உடல் மற்றும் உடை தொடர்பாக நிறைய விஷயங்கள் புரிய வந்தது. 38 நிமிட மாதவிடாய் ஆவணப்படமும் உருவானது.
மாதத்தின் மூன்று நாள் பெண்களுக்கு வெளிப்படும் உதிரப்போக்கு குறித்துப் பேசுவதற்கு பெண்கள் தயங்குவது புரியத் தொடங்கியது. இதைப்பேச ஏன் தயங்க வேண்டும் என்கிற கேள்வி எழவே, ஆவணப்படத்தை திரையிடும் இடங்களில், அது குறித்த உரையாடல்களை நிகழ்த்தினோம். இந்த உரையாடல்கள் பெண் உடல் தொடர்பான பல்வேறு விஷயங்களை யோசிக்க வைத்தது. ஏன் பெண் உடல் மீண்டும் மீண்டும் சாதியின் கட்டுப்பாட்டில், மதத்தின் கட்டுப்பாட்டில், ஆணாதிக்க சமுதாயத்தின் கட்டுப்பாட்டில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு என்கிற விஷயங்களையும் புரிய வைத்தது.
அதைத் தொடர்ந்து உரையாடல் படங்களையும் எடுத்தேன். அதில் ஒன்று “சாதிகள் இருக்கேடி பாப்பா”. சாதிகள் குறித்து குழந்தைகளிடம் உரையாடல் நிகழ்த்துவது மாதிரி அந்த ஆவணப்படத்தை இயக்கினேன். அதைத் தொடர்ந்து “நம்பிக்கை மனுஷிகள்” என்கிற தலைப்பில் தசை சிதைவு நோயில் பாதிக்கப்பட்ட வானவன்மாதேவி, இயல்இசை வல்லபி என்கிற நம்பிக்கை மனுஷிகள் இருவரை ஆவணப்படுத்தினேன்.
உங்களின் பயணங்கள் குறித்து..?
2014ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் “சாவித்ரிபாய் பூலே” பெண்கள் பயணக்குழு ஒன்றை உருவாக்கி, பெண்கள் இணைந்து பயணிக்க ஆரம்பித்தோம். அத்துடன் மலையேற்றம், மாரத்தான் போன்ற விஷயங்களிலும் ஆவலுடன் ஈடுபட்டேன். பெண்களுக்குள் அப்போது நிகழ்ந்த உரையாடல்கள், கிடைத்த அனுபவங்கள், பெண்கள் ஏன் பயணங்கள் செய்ய முடிவதில்லை? அப்படியே செய்தாலும், வீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்?
பெண்கள் தங்கள் உடலை வலுப்படுத்தத் தேவையான விஷயங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்த புரிதல்கள் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாய், பயணங்கள் தந்த அனுபவங்கள் குறித்த கட்டுரைகளை முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தேன். அதை கவனித்த “ஹெர் ஸ்டோரிஸ்” இணையதளம், அவர்கள் இணையப் பக்கத்தில் இதைத் தொடராக எழுதச்சொல்லிக் கேட்டார்கள். அப்போது நான் சாஸ்திரிபவனில், பத்திரிகை தகவல் அலுவலகத்தில், ஊடக அலுவலராக பணியில் இருக்கிறேன். அரசு பணிக்கு இடையே தொடர் எழுதுவது சாத்தியமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது? செய்திகளை விஷுவலாகக் கொடுப்பது எனக்கு சுலபமாக இருந்தது. ஆனால் எழுதுவது?
அன்றாட வாழ்வில் பெண்களுக்கான உரிமைகளும், பெண்ணுடலும் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அடுத்த தலைமுறை, வளரிளம் பெண்களுக்கு புரியவைக்க வேண்டுமெனில், பெண்ணிய விஷயங்களை தொடர்ந்து நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென முடிவெடுத்து தொடரை முப்பது தலைப்புகளில் எழுத ஆரம்பித்தேன். “துப்பட்டா போடுங்க தோழி” என்கிற தலைப்பில் அது நூல் வடிவம் பெற்றது.
2021ல், எனது 50வது வயதில் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். பொதுமக்களை அதிகம் சென்றடைகிற, எனக்கு பிடித்தமான திரைத்துறைக்குள் கால்பதிக்க விரும்பி, இப்போது திரைக்கதை, இயக்கம் என கவனத்தை செலுத்தி வருகிறேன்.
கல்வராயன் மலையில் என்ன நடந்தது..?
Aware India என்கிற தன்னார்வ அமைப்பு கல்வராயன் மலையில் வாழும் மலைவாழ் சமூகக் (tribal community) குழந்தைகள் மத்தியில் வேலை செய்கிறார்கள். இந்தக் குழந்தைகளின் பெற்றோர் புலம்பெயர் தொழிலாளர்களாக பெங்களூர், மைசூர் போன்ற மாநிலங்களுக்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள் என்பதால், மாணவர்கள் பழங்குடி நலத்துறை நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியிலேயே தங்கிப் படிக்கிறார்கள். பள்ளி விடுமுறையில், மாணவர்கள் வீட்டுக்குச் சென்றால், வீட்டில் யாரும் இருப்பதில்லை. இதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, குழந்தைத் திருமண முறை இவர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் குழந்தைகளை பெரிதாக இவர்கள் படிக்க வைப்பதில்லை. படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண் குழந்தையென ஒருவரும் இல்லை. பெண்ணை ரோல்மாடலாக பார்க்கும் வாய்ப்பு இந்தக் குழந்தைகளுக்கு மிகமிகக் குறைவு.
அந்தப் பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்கள். பாலியல் கல்வி, வாழ்க்கை திறன் கல்வி, பாலின சமத்துவம், உடை அரசியல் குறித்த புரிதல் மாணவர்களுக்கு வர வேண்டும் என்பதற்காக, பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை Aware India தன்னார்வ அமைப்பு பெண் குழந்தைகள் படிப்பதற்கு வழங்குகிறது.
இதில் நான் எழுதிய ‘‘துப்பட்டா போடுங்க தோழி” புத்தகமும் இடம்பெற்றது. இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சியில் நடந்த 3 நாள் முகாமில், அவளதிகாரம் என்ற பிரிவில், புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். நான் அங்கு சென்றபோது, அங்கிருந்த பெண் குழந்தைகள் தங்கள் துப்பட்டாவை மேலிருந்து கீழே போட்டு ஆர்ப்பரித்து என்னை வரவேற்ற நிகழ்வை ஒரு குறியீடாகவே நான் பார்க்கிறேன். இந்த நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
உங்கள் இணையர் இளங்கோவன் குறித்து..?
முதலில் கல்லூரி நண்பராகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். கல்லூரியில் படிக்கும்போதே இதழியல் துறையில் அவர் ஆர்வமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். எங்களுக்குள் முதலில் நல்ல நட்பு உருவானது. அவரின் குடும்பம் பெரியாரிய சிந்தனைகள் உள்ள குடும்பம். வளர்ப்பிலேயே அவரும் பெண்ணிய சிந்தனைகள், பெரியாரிய சிந்தனைகள், சமூக நீதி சிந்தனைகளோடு வளர்ந்தவர். எனக்கும் அவருக்குமான கலந்துரையாடல்கள், விவாதங்கள், சமூகம் சார்ந்த விஷயங்களில் அவரின் கருத்துக்கள் பலவும் எனக்கு நல்ல புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மூளைச்சலவை செய்து, நாம் வளர்ந்த விதத்தில் இருந்து, அழுத்தமான தரவுகளுடன் நமது பார்வையை மாற்றிக் கொள்வதற்கான விவாதங்களே எங்களுக்குள் இருக்கும். நான் பெரியாரை வாசிக்க ஆரம்பித்தது தாமதமாகத்தான். அதற்கு முன்புவரை இளங்கோவனுடைய கருத்துக்களே எனக்குள் பெண்ணிய புரிதலை ஏற்படுத்தியது. எங்கள் இருவருக்குமான நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இணையர்களாக நாங்கள் இணைவதற்கு எங்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.
நான் அரசு வேலைக்கு முயற்சித்து, இந்திய தகவல் சேவை துறையில் (Indian Information Service) ஊடக அலுவலகப் பிரிவில் பணியில் சேர்ந்து மதுரையில் வேலை செய்து வருகிறேன். அவரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியில், ரயில்வே துறையில் பணி கிடைத்து மதுரைக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் நாங்கள் இணைய அவர் வீட்டில் முழு ஆதரவும் இருந்தது.
திருமணம் என்கிற சடங்குகளுக்குள் நாங்கள் எங்களை திணித்துக்கொள்ளவில்லை. வாழ்க்கையில் இணைய சடங்குகள் தேவையில்லை என நினைத்தோம். திருமணத்தை அடையாளப்படுத்தும் விஷயங்களையும் நாங்கள் செய்துகொள்ளவில்லை. லிவிங் டூ கெதர் முறையில்தான் இப்போதும் இருக்கிறோம். எங்களுக்கு குழந்தை வேண்டாம் என்கிற முடிவை நாங்கள் முன்பே எடுத்துவிட்டோம். திருமணம் செய்து கொண்டால் எல்லோரும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
குழந்தைகள் இல்லாமல் வாழ்வதும் வாழ்க்கைதான் என ஒரு மாடலாக மகிழ்ச்சியாக வாழ்கிறோம். அடிப்படையில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். இணையர்களாக கலந்து ஆலோசிக்கிறோம். அவரவர் தேவைக்கான இடைவெளி புரிந்து செயல்படுகிறோம். பயணம் எங்கள் இருவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. அவரவர் நண்பர்கள் குழுவோடு தனித்து பயணிப்பதும் பிடிக்கும். நாங்கள் இருவரும் இணைந்து பயணிப்பதும் எங்களுக்கு பிடிக்கும். இப்போதும் எங்களின் உறவு வலுவாகவே இருக்கிறது.