வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி! (மகளிர் பக்கம்)
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது ஐ.டி துறை. இந்த துறை வளர ஆரம்பித்த காலக்கட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்கள் எதிர்பார்க்காத சம்பளத்தையும் கொடுத்தது. ஆனால், எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரிவினை சந்திக்கும். அதை தற்போது இந்த துறை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். ஐ.டி துறையில் வேலை நிரந்தரம் இல்லை என்ற பயம் ஏற்பட்டுள்ளது.அதீத வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியினை சந்தித்து வரும் இந்த துறை சார்ந்த சந்தேகங்களுக்கு விடையளித்தார் ராஜலட்சுமி. இவர் இந்திய ஐ.டி நிறுவனமான சோஹோவில் கடந்த 23 வருடமாக மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
‘‘95ல் சோஹோ துவங்கப்பட்டது. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இந்த நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக சேர்ந்தேன். அன்று முதல் நிறுவனத்துடன் சேர்ந்து வளர்ந்திருக்கேன். என் அனுபவத்தில் மூன்று முறை சரிவு நிலையினை பார்த்திருப்பேன். அப்படி இருந்தும் நான் நிலைத்து இருக்க காரணம் என்னை நான் அப்டேட் செய்து கொண்டதுதான். ஒரு பெண்ணாக வேலை மட்டுமில்லாமல் குடும்பத்தில் பல சேலஞ்சுகளை சந்திக்க நேரிடும். அதையெல்லாம் கடந்துதான் நான் இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன்.
ஐ,டி துறை பிரபலமாகக் காரணம் 2005ல் ஆரம்பிச்ச கிளவுட் அடாப்ஷன். அதாவது, ஆன்லைன் முறையில் இருக்கும் இடத்தில் இருந்தே சுலபமாக வேலையை முடிக்க முடியும் என்பது தான். அது பெரிய மாற்றத்தினை கொண்டு வந்தது. பொருட்களை வாங்குவது முதல், பண பரிவர்த்தனை, அலுவலக வேலை, டாக்டர்களின் ஆலோசனை… இப்படி பல வசதிகளை நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்தது. இப்போது இவை அனைத்தும் நம் கையில் தவழும் மொபைல் போனில் செய்ய முடியும் என்பது அடுத்தகட்ட வளர்ச்சி. இந்த வசதி கடந்த பத்து வருஷமா இருந்தாலும் இதுபோன்ற வசதியினை ஏற்படுத்தி தரவே ஐ.டி துறை இயங்கி வருகிறது.
இதில் உள்ள வாய்ப்புகள்?ஐ.டி என்றால் புரோகிராம் டெவலப் செய்ய வேண்டும் என்றில்லை. அதை கடந்து இந்த துறையில் பல விதமான வேலை வாய்ப்புகள் உள்ளது. அது பலருக்கு தெரிவதில்லை. விழிப்புணர்வும் இல்லை. சாஃப்ட்வேர் துறை என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும். சாஃப்ட்வேர் டெவலப்பரா ஆகணும்னு நினைக்கிறாங்க. புரோகிராம் டெவலப்பிங் என்பது இந்த துறையில் ஒரு சிறு பாகம் தான். இந்த புரோகிராம் என்பது ஒரு மொழி.
அது எல்லோருக்கும் புரியாது. அந்த மொழியினை அனைவரும் புரிந்து கொள்ளும் படி விளக்குபவர்கள் தான் டெக்னிக்கல் எழுத்தாளர். அதாவது, இதனை எதற்காக உருவாக்கி இருக்கிறோம்? இது என்ன வேலை செய்யும் என்பதை எழுத்து மூலமாக புரிய வைப்பது இவரின் வேலை. இதன் மூலம் நாம் என்ன செய்கிறோம் என்பதை மற்ற நிறுவனங்களுக்கு எடுத்துரைக்க முடியும். அவர்கள் நம்முடைய கிளையன்டாக மாறுவார்கள்.
சிலருக்கு பேச்சுத்திறன் இருக்கும். அவர்கள் விற்பனை துறையில் இணையலாம். சிலர் நல்லா வரைவாங்க. அவங்க விஷுவல் டிசைனராகலாம். புரோகிராமில் தவறுகளை கண்டறிந்து அதை திருத்துபவர் க்வாலிட்டி அனலைசர். இது போல் இந்த துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் விரும்பும் துறையினை தேர்வு செய்து அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
அப்டேட் அவசியமா?
படிச்சு வேலைக்கு வந்துட்டேன், இனி படிக்க தேவையில்லைன்னுதான் பலர் நினைக்கிறாங்க. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது. பத்து வருஷம் கழிச்சு என்ன வரும்னு தெரியாது. அன்றைய காலக்கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நாம் அப்டேட்டாக இருப்பது அவசியம். நாம நம்மை டெவலப் செய்துகொண்டே இருந்தாதான் இந்த துறை மட்டுமில்லாமல் எல்லா துறையிலும் நிலைத்து இருக்க முடியும்.
சிலர் தப்பு செய்திட்டா கிண்டல் செய்வாங்கன்னு பயப்படக்கூடாது. அந்த தவறு மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளணும். அதே போல் ஒரு விஷயம் கற்றுக்கொள்ள வயசு அவசியமில்லை. இன்றைய தலைமுறையினருக்கு தெரியும் பல விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை. அதற்காக நான் பாஸ்… எனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தால், நீங்கள் ரொம்பவே பின் தங்கிவிடுவீர்கள்.
பின்னடைவு ஏற்படக் காரணம்
இது காலச்சக்கரம்னுதான் சொல்லணும். என்னுடைய அனுபவத்தில் நான் மூன்று முறை இதனை சந்தித்திருக்கேன். உலகளவில் நடக்கக்கூடியது என்றாலும் கண்டிப்பாக இந்த நிலை மாறும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் ஏற்றம் இறக்கம் இருக்கும். அந்த நேரத்தில் அதனை கண்டு துவண்டுவிடாமல், ஒரு வாய்ப்பாக பார்க்கணும். இந்த நேரத்தை நம்மை தயார் படுத்திக்க பயன்படுத்திக் கொண்டால் எந்த சறுக்கல்களையும் கடந்துவிடலாம். அதற்கு முதலில் பொறுமை அவசியம். அடுத்து நம் திறன்களை அப்டேட் செய்யணும். இது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயார் படுத்தும். இப்படி பாசிடிவ்வா பார்த்தால், கண்டிப்பா அதற்கான எதிர்காலம் நல்லபடியாக அமையும்.
இந்த சரிவு இரண்டு வருடம் முன்பே ஏற்பட்டு இருக்க வேண்டும். கோவிட் காரணமாக கொஞ்சம் தள்ளி போயிருக்கு. தற்போது பலருக்கு வேலை வாய்ப்பு இல்லை. புதுசா படிச்சிட்டு வர்றவங்களுக்கு வேலை சரியா அமையல போன்ற பிரச்னை இருந்தாலும், உங்களின் நோக்கம் என்ன என்பதில் தெளிவா இருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொந்தமாக ஸ்டார்டப் நிறுவனம் துவங்கலாம். உங்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளுக்கு தீர்வாக உங்க நிறுவனம் இயங்கலாம்.
இப்போது செல்போன் எல்லோருடைய உலகமா மாறி வருகிறது. அதில் பயன்படுத்தும் சிம்பிலான ஆப்களை உருவாக்கலாம். உதாரணத்திற்கு எல்லோருடைய பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் ஆப்களை அமைக்கலாம். இதற்கெல்லாம் ஒரு ஆப்பா என்று யோசிக்காமல் நம்மை சுற்றி இருக்கும் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் போது அது சக்சஸா மாறும்.
எதிர்காலம்
எதிர்காலம் எப்படி இருக்கும்னு யோசிக்க முடியாது. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஐ.டி துறையிலும் மாற்றங்களை பார்க்கலாம். சின்ன கடைகளும் ஆன்லைன் விற்பனைக்கு தங்களை அப்கிரேட் செய்ய முன்வருகிறார்கள். அதனால் இதற்கான வாய்ப்புகள் வரிவடையும். கோவிட் போது வீட்டில் இருப்போம்னு நினைக்கல. அந்த சமயத்தில் நமக்கு தேவையானதை, ஏன் டாக்டரின் ஆலோசனை கூட தொழில் நுட்பத்தினால் செய்ய முடிந்தது. ஒரு செல்போன், இன்டர்நெட் வசதி இருந்தால் போதும் உலகில் எந்த இடத்தில் இருந்தும் வேலை பார்க்க முடியும். நான் வெளிநாட்டில் இருந்து சென்னையில் என் குழந்தைக்கு உணவு ஆர்டர் செய்திருக்கேன்.
தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் இதற்கான எதிர்காலம். என்னுடைய அட்வைஸ் உங்களை அப்டேட் செய்து கொண்டே இருங்க. குறிப்பாக பெண்கள். 20 வருஷம் முன்பு திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போக யோசிச்சாங்க. இப்ப அப்படி இல்லை. குழந்தை, குடும்பம் இருந்தாலும் அவர்களுக்கான துறையில் முன்னேறி செல்கிறார்கள். அதே சமயம் அவர்கள் தங்களின் ஆரோக்கியம் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள பழகுங்கள். வேலை, குடும்பம், ஆரோக்கியம் சரிசமமா இருந்தா கண்டிப்பா யாராக இருந்தாலும் எந்த துறையிலும் சக்சஸ் பார்க்க முடியும்’’ என்றார்.