சிலம்பம் கத்துக்க பெண்கள் முன் வரணும்!! (மருத்துவம்)
சிலம்பம் சுற்றுதலில் தேசிய அளவில் முதல் பரிசை வென்றவர் ஜெயசுந்தரி. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் இவர் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார். இதனிடையே தன்னை போலவே பல வீராங்கனைகளை உருவாக்க எண்ணியவர் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சியும் கொடுத்து வருகிறார். திருநெல்வேலியை சேர்ந்த ஜெயசுந்தரி, படிப்பு, தேசிய அளவிலான போட்டிகளின் கனவு மற்றும் சிலம்பம் மாஸ்டர் என பன்முகம் கொண்டவர்.
‘‘நான் பள்ளியில் படிக்கும் போது, என்னுடைய பள்ளிக்கூடத்துல சிலம்பம் பயிற்சி இருந்தது. அதைச் சொல்லிக் கொடுக்க முத்து மாஸ்டர் வருவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் அவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்டார்கள். என்னுடைய அண்ணன்களும் அதே வகுப்பு என்பதால், அவர்களும் முத்து மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வந்தாங்க. அதை பார்த்து எனக்கும் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் மாஸ்டரிடம் எனக்கும் சொல்லித்தரச் சொல்லி கேட்டேன்.
ஆனால், அவர் 6ம் வகுப்பு படிக்கிறவங்களுக்குதான் சிலம்பம் கத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. எப்படா ஆறாவது வகுப்புக்கு போவோம்னு காத்திருந்தேன். பள்ளி முடிந்ததும் பயிற்சி என்பதால், நான் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மாட்டேன். அண்ணன்கள் பயிற்சி எடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு நானும் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தேன். அதில் முதல் வேலையாக சிலம்ப பயிற்சியில் என்னுடைய பெயரை கொடுத்தேன். என்னோட வகுப்பில் எந்த பெண்களும் சிலம்பம் கற்றுக்கொள்ளவில்லை. அது ஆண்களுக்கான விளையாட்டுன்னு யாரும் சேரவில்லை.
நான் மட்டும்தான் அதில் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்தில் பயிற்சி எடுப்பது மட்டுமில்லாமல், தினமும் காலையில எழுந்து, வீட்டுக்கு முன்னாடி சிலம்பம் பயிற்சி எடுப்பேன். என்னோட அம்மாவும் அப்பாவும் நான் சிலம்பம் சுத்துறத கண் கொட்டாமல் பார்ப்பாங்க. மாலையில் மாஸ்டர் சொல்லித் தருவதை மீண்டும் வீட்டில் தினமும் பயிற்சி எடுப்பதால், நான் நல்லாவே சிலம்பம் சுத்தி பழகினேன்.
நான் நல்லா சிலம்பம் சுத்துறத பார்த்த என்னுடைய வகுப்பு தோழிகளும் என்கூட சிலம்பம் பயிற்சி எடுக்க வந்தாங்க. நிறைய பொண்ணுங்க சிலம்பம் கத்துக்க தொடங்கினாங்க. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது வீட்டுச் சூழ்நிலை காரணமா வேற பள்ளிக்கு மாற வேண்டியதா போச்சு. நான் புதுசா சேர்ந்த பள்ளிக்கூடத்தில் சிலம்பம் கத்துக் கொடுக்கல. இதனால முத்து மாஸ்டரிடம் தனிப்பட்ட முறையில் சிலம்பம் கத்துக்க நினைச்சேன்.
அவரிடம் கேட்ட போது, வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை சிலம்பம் கற்றுக் கொடுப்பதாக சொன்னார். ஆனா, அதுக்கு தாழையூத்து பகுதிக்கு நான் போகணும். எங்க வீட்ல இருந்து அந்த ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரம். என்னோட ஆர்வத்தை பார்த்த என் அப்பா எந்த சிரமமும் பார்க்காம என்னை சிலம்பம் பயிற்சிக்கு அழைச்சிட்டு போயி பயிற்சி முடியிற வரைக்கும் இருந்து திரும்ப கூட்டிட்டு வருவாரு. மீதி நாள் எல்லாம் நான் வீட்டுலேயே பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.
என்னோட ஆர்வத்தை பார்த்த என்னோட மாஸ்டர் மற்றும் என்னோட ஆசிரியர்களும் பள்ளி அளவில நடக்கிற சிலம்பம் போட்டிகள்ல கலந்துக்க அனுமதி கொடுத்தாங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே திருநெல்வேலியில இருக்குற பள்ளிகளில் மாவட்ட அளவில சிலம்பம் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பிச்சேன். அதில் கண்டிப்பாக முதல் இரண்டு பரிசுகள் வாங்கிடுவேன். ஒரு போட்டி என்றால் அடுத்தகட்டம் நகர வேண்டும்.
அதனால் அடுத்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கலாம்னு என் மாஸ்டர் சொல்ல அதற்கு தயாரானேன். மாநில அளவிலான போட்டிகளுக்காக தினமும் கடுமையாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். திருச்செந்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாமக்கல் என இந்த ஊர்கள்ல எல்லாம் மாநில அளவில சிலம்பம் போட்டிகள் நடந்தது. அதில் கலந்துகொண்டேன். முதல் பரிசினை தட்டிச் சென்றேன். மாநில அளவிலான போட்டியில ஜெயிச்சது எனக்கு ஒருவிதமான உற்சாகத்தை கொடுத்தது. என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை அடுத்த கட்ட போட்டிகளுக்கு போக மேலும் உற்சாகப்படுத்துனாங்க’’ என்றவர், அடுத்து தேசிய அளவுல போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
‘‘தினமும் காலையில 4 மணிக்கு எழுந்திரிச்சி பயிற்சி எடுப்பேன். என்னோட மாஸ்டரும் எனக்காக தனியா நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுக்க தொடங்குனார். இதற்கிடையில்தான் கொரோனா ஊரடங்கு வந்தது. போட்டிகள் நடக்கல. நானும் வீட்டிலேயே பயிற்சி மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு முடிஞ்சு 2020ல கோயம்புத்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி அறிவிச்சாங்க. அதில் சிலம்பம் போட்டிகள் மட்டுமில்லாம இரட்டைக் கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, வால் வீச்சு போன்ற போட்டிகள் எல்லாம் நடைபெற்றது. சிலம்பம் போட்டியில கலந்துகிட்ட நான் தேசிய அளவில முதல் பரிசு பெற்றேன். இது என்னுடைய முதல் தேசிய அளவிலான போட்டி. அதில் முதல் பரிசு என்பதால் அம்மா, அப்பா, மாஸ்டர் எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க’’ என்றவர், குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கொடுக்கும் ஆசானாக மாறினார்.
‘‘சிலம்பத்துல எவ்வளவு கவனம் செலுத்தினேனோ அதே அளவுக்கு படிக்கவும் செய்தேன். 12ம் வகுப்புல நல்ல மார்க் வாங்கி திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்
கழகத்தில் ஜியான் இன்பார்மேட்டிக்ஸ் துறையை தேர்ந்தெடுத்து படிச்சேன். நான் இருக்குற கங்கை கொண்டான் பகுதியில் நான் ஒரு பெண்தான் சிலம்பம் சுத்துவேன். நான் அடிக்கடி போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிக்கிறத பார்த்த என்னுடைய ஊர்க்காரங்க தன்னுடைய குழந்தைகளுக்கு சிலம்பம் சொல்லிக் கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க. எனக்கும் இந்த கலை என்னோட போகக் கூடாதுன்னு தோணிச்சு. அதனால மற்ற குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்னு முடிவு செய்தேன்.
பள்ளி மட்டுமில்லாமல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு போவதால், வாரத்தில் ஞாயிறு மட்டுமே சிலம்பம் வகுப்புகளை எடுத்து வருகிறேன். என்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவர்கள் எல்லோரும் ரொம்ப ஆர்வமா பயிற்சி எடுக்க வராங்க. இதுவரை 30 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். பயிற்சி மட்டுமில்லாமல் திருநெல்வேலி பகுதியில நடக்கிற சிலம்பம் போட்டிகளிலும் அவர்கள் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி வருகிறார்கள். எனக்கு ஒரே ஒரு ஆசைதான்… சிலம்பம் கத்துக்க பெண்கள் நிறைய பேர் முன் வரணும். சிலம்பம் தற்காப்புக்கலை மட்டுமில்லை… பெண்களுக்கு மன தைரியத்தையும், எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்’’ என்கிறார் ஜெயசுந்தரி.