கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கண்ணாடிக்கு விடுதலை! (மருத்துவம்)
அதனால் கணேஷிடமும், ஆண்டுதோறும் முறையாகப் பரிசோதனை செய்து கொள், கண்ணாடியை ஒழுங்காக அணிய வேண்டும், 22 வயது நிரம்பியவுடன் லேசருக்கான பரிசோதனைகளைச் செய்யலாம் என்று முன்பே சொல்லி வந்தேன். இப்பொழுது அவனுக்கு 22 வயது முடிந்து விட்டது. லேசருக்கான முன்னேற்பாடுகளில் இறங்கினோம்.
அவனுடைய கண்ணாடியின் அளவு -4.50 DSph ஆக இருந்தது. இது ஒப்பீட்டளவில் சற்றே அதிகமானது தான், அதனால் கருவிழி மெலிதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பாரம்பரியமான லேசர் சிகிச்சையில் கருவிழியின் கனம் (450-550 microns) நன்றாக இருக்க வேண்டியது அவசியம். இதனை corneal topography என்ற பரிசோதனையின் மூலம் கணக்கிடுவார்கள். நீங்களும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், உங்களுக்கு வண்ணமயமான வளையங்களும் எண்களும் நிரம்பிய ஒரு அறிக்கையைத் தந்திருப்பார்கள்.
கணேஷுக்கும் இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எதிர்பார்த்தபடியே கருவிழியின் கனம் சற்று மெலிதாக இருந்தது. அதனால், ‘பாரம்பரியமான லேசர் சிகிச்சை செய்வதை விட PRK என்ற சிகிச்சை முறையைச் செய்யலாம், கூடுதலாக என்று அழைக்கப்படும் சிகிச்சையையும் செய்ய வேண்டும்’என்று அவனுக்கு அறிவுறுத்தினார் கருவிழி சிகிச்சை நிபுணர்.“லேசர்தானே பண்ணலாம்னு சொன்னீங்க, இது என்ன புதுசா?” என்பது கணேஷின் கேள்வி. நம் கண்ணின் பார்வை அளவைத் (refractive status) தீர்மானிப்பதில் கண் பந்தின் அச்சுநீளம், கருவிழியின் அமைப்பு, லென்ஸின் அமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான கண்குறைபாடு உடையவர்களுக்கு கண் பந்தின் அச்சுநீளம் வழக்கத்தை விட மாறுபாடாக இருக்கும். அந்த நீளத்தில் நம்மால் மாற்றம் செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவரின் விரல்களின் நீளம் குட்டையானதாகவோ, நீளமானதாகவோ இருந்தால் அதை குறைக்க, கூட்ட செய்ய முடியாதல்லவா, அதைப் போலத்தான்.
அதே சமயம் கண்பந்தின் வளர்ச்சி ஒரு நிலைக்கு வந்தவுடன் பார்வையைத் தீர்மானிக்கும் மற்ற காரணிகளான கருவிழி மற்றும் லென்ஸின் கனத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இதுவே refractive procedures என்றழைக்கப்படும் அறுவை சிகிச்சைகளின் அடிப்படை. பாரம்பரியமான லேசர் சிகிச்சையில், கருவிழியின் மேலடுக்கினை ஒரு மிக மெல்லிய கத்தி கொண்டு அரை வட்டமாகப் (flap)பிரித்தெடுத்து, அதன் கீழே இருக்கக்கூடிய கருவிழியின் அடுத்த அடுக்கான stromaவை நமக்கேற்ற வகையில் Excimer LASER கதிர்களால் மாற்றியமைப்பார்கள். கருவிழி மெலிதாக
இருக்கும் பட்சத்தில் இப்படி அரை வட்ட வடிவில் மேல்தோலை தூக்குவது சற்று கடினமானது. அதனால் தேவையான இடங்களில் மேற்புறத்தில் உள்ள சில செல்களை நீக்கிவிட்டு அதே எக்ஸைமர் லேசர் கதிர்களால் மாற்றங்களைச் செய்வது Photo refractive keratectomy (PRK) என்ற சிகிச்சை.
சரி, புரிகிறது. அது என்ன XTRA? என்றான் கணேஷ். மெலிதாக இருக்கும் கருவிழியில் பின்நாட்களில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுவது சாத்தியம். அதனால் கெரட்டோகோனஸ் போன்ற பிரச்சனைகளில் மெலிதான கருவிழியை பலம் மிக்கதாக ஆக்குவதற்கு செய்யக்கூடிய சிகிச்சைகளான C3R (collagen cross linkage) போன்றவற்றை PRKயுடன் இணைத்துச் செய்வதே எக்ஸ்ட்ரா எனப்படும். இன்னொரு இளைஞன். பெயர் வசந்த் என்று வைத்துக் கொள்வோம். இவன் மருத்துவக் கல்லூரி மாணவன். கணேஷுக்கு இருந்ததைவிட அதிகமான ‘பவர்’ அவனுக்கு. -9.50 DSph. இவனுக்கு லென்ஸ் பகுதியில் செய்யப்படும் Phakic IOL என்ற சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது.
மருத்துவம் படிப்பவன் என்பதால் லேசிக் குறித்து அவனுக்குத் தெரியும்,“கருவிழியைத் தொட மாட்டேன் என்கிறார்கள். ஆனால் கண்ணாடி தேவைப்படாத அளவிற்கு சிகிச்சை செய்து விடுவோம் என்று சொல்கிறார்களே, அது என்ன?” என்றான். கண் பந்தின் மொத்த Dioptric power +60.0D என்று குறிப்பிடுவோம். இதில் கருவிழியின் பங்கு சுமார் 40.0D என்றால் லென்ஸின் பங்கு 20.0D. அச்சுநீளம் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில் அணியும் கண்ணாடிக்கு இணையாக லென்ஸ்க்கு அருகில் இன்னொரு செயற்கை லென்சைப் பொருத்திவிட்டால் வேலை முடிந்தது என்றேன் வசந்த்திடம்.
”கண்புரை சிகிச்சையில் பொருத்துவது மாதிரியா?” என்று கேட்டான் வசந்த். அப்படித்தான், உங்களுக்கு உங்கள் இயற்கையான லென்ஸும் இருக்கும், அதன் அருகிலேயே செயற்கை லென்ஸையும் நிச்சயம் வைத்து விடுவோம். இதே போல் refractive lens exchange என்ற இன்னொரு சிகிச்சையும் இருக்கிறது. அதில் உங்களின் லென்ஸை முழுவதுமாக அகற்றிவிட்டு செயற்கை லென்ஸை மட்டும் பொருத்துவார்கள். அப்படிச் செய்யும் பட்சத்தில் பின்னாளில் 60 வயதையொட்டி கண்புரை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினேன். மருத்துவ மாணவன் அல்லவா, அடுத்த அதிமுக்கிய சந்தேகம் அவனுக்கு வந்தது. ‘கேடராக்ட் சர்ஜரிக்கப்புறம் கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி போடணுமே, இப்பவே லென்ஸை எடுத்துட்டா எப்படி?’ என்றான்.
மிகச் சரியான கேள்வி என்று அவனைப் பாராட்டிவிட்டு அதற்கான பதிலைக் கொடுத்தேன். அதற்காகத்தான் உன்னுடைய இயற்கை லென்ஸுடனே சேர்த்து உனக்கு செயற்கை லென்ஸையும் பொருத்துகிறோம். இயற்கை லென்ஸ் அகற்றப்படும் பட்சத்தில் உள்ளே வைக்கப்படும் லென்ஸை multifocal lens போல் கிட்டப் பார்வையும் சேர்த்துத் தெரிவதைப் போல் வைக்கலாம் என்று கூறினேன். சிலருக்கு இயற்கையான லென்ஸை மட்டும் அகற்றும் சிகிச்சையான clear lens extraction மிகச் சரியான பார்வையை வழங்குவதாக அமைந்து விடும். அவர்களுக்கு வேறு லென்ஸ் வைக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
”சின்ன வயசுல இருந்து லேசர் பண்ணிடலாம்னு சொல்லியே வளர்த்தாங்க. இப்ப புதுசா இதை சஜஸ்ட் பண்றாங்க. அதான் குழப்பம்’ என்றான் வசந்த். ‘சிறுவயதில் நீ முதன்முதலில் அணிந்த கண்ணாடியின் பவர் என்னவாக இருந்தது?’ என்று அவனைக் கேட்டேன். இரண்டோ இரண்டரையோ என்றான் வசந்த். ‘அதே அளவில் இருந்திருந்தால் பாரம்பரியமான லேசர் சிகிச்சை செய்வதே சரியான முறையாக இருந்திருக்கும்.
நீ வளர வளர உன்னுடைய கண் பந்தும் வளர்ந்து தற்போது உன்னுடைய கண்ணாடியின் அளவு மைனஸ் ஒன்பதுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. கூடவே கருவிழியும் மெலிதாக உள்ளது. அதனால் தற்போதைய நிலையில் உனக்கு Phakic IOL சரியான தீர்வு. ஒருவேளை உன்னுடைய கண் பந்தின் நீளம் வளராமல் அதே -2.00 DSph அளவில் இருந்திருக்குமானால் இப்பொழுது உனக்கு லேசர் சிகிச்சை செய்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது’ என்று விளக்க, அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
கணேஷ் ஆகட்டும், வசந்த் ஆகட்டும் அவர்கள் இருவருக்கும் இனிமேல் கண்ணாடியில் இருந்து விடுதலை என்பது மகிழ்ச்சியைத் தர, அவர்களது பெற்றோருக்குக் கவலை. “ஏன் டாக்டர்? இதுல வேற எந்த ரிஸ்க்கும் கிடையாதா? கண்ணாடியே போட்டுக்கிட்டு இருக்கலாமே? சர்ஜரின்னு அவசரப்படுறான், பயமா இருக்கு” என்றனர். அவர்களது பயம் நியாயமானது தான். எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் பின் இருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றிரண்டு இவற்றிலும் வரலாம். இது முழுக்க முழுக்க அழகியலுக்காகவும் வசதிக்காகவும் மட்டுமே செய்யப்படும் ஒரு சிகிச்சை. அதனால் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் தற்போதைய கண் மருத்துவத்தின் அசுர வளர்ச்சியிலும், இயந்திரங்களின் நுணுக்கமான செயல்பாட்டினாலும் மிக மிகக் குறைவான பக்க விளைவுகளையே சந்தித்து வருகிறோம் என்றேன்.
கண்ணாடி உடைந்தால் மாற்றுவதற்குக் கடினமாக இருக்கிறது, பார்ப்பதற்கு தன் தோற்றம் இன்னும் மேம்பட்டுத் தெரியலாம், அதிக பவர் என்பதால் பல் துலக்குவதற்குக் கூட கண்ணாடி தேவைப்படுகிறது போன்ற நடைமுறை சிக்கல்களை கணேஷும் வசந்த்தும் அவர்களது பெற்றோரிடம் வலியுறுத்த, அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். தற்போது சிகிச்சை முடித்து இருவரும் நலமாக இருக்கிறார்கள். இருவரின் பெற்றோருக்கும் பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும்!