சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 39 Second

உலகப் பொருளாதாரத்தை உற்று நோக்கினால் 18ம் நூற்றாண்டில் விவசாயத்திலிருந்து மக்களின் கவனம் தொழில்துறை உற்பத்தியை நோக்கி நகர்ந்தது. அவர்களின் உழைப்பு பல்வேறு நாடுகளுக்குப் பரவி இன்று ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருமளவு பெருக்கி வருகிறது. உணவு உற்பத்தி, பதனிடுதல், போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தி, அட்டைப்பெட்டி மற்றும் கொள்கலன் உற்பத்தி, தங்கும் விடுதிகள், சுற்றுலா, எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தி, மருந்துப்பொருட்கள் தயாரிப்பு, வணிகம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரக் காப்பீடு, கட்டுமானம், நிதிச் சேவைகள் என பெருவணிக நிறுவனங்கள் வளர்ச்சியில் முதன்மை நிலையில் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு வங்கியின் கடன் திட்டங்கள் என்ன என்று பார்க்கலாம். செயல்திறனும் நிறுவனக் கடனும் மூலப்பொருட்கள் மற்றும் இறுதிப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், உற்பத்திப் பொருளினை சேமித்துவைக்கும் நிறுவனங்கள், மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்கள், நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் பாலமாக இயங்குபவை வங்கிகள். ஒரு நிறுவனம் செயல் திறன் மிக்கது என்பதைக் கணக்கிட்டுத் தெரிவிக்க வெவ்வேறு அளவீட்டு விகிதங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று பார்த்தோம்.

நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களின் கூட்டுத் தொகையிலிருந்து நிலுவையில் உள்ள கூட்டுத் தொகையை கழித்தபிறகு மீதமுள்ள தொகையை நிறுவனம் தமது பிற நிதிச்செலவுகளை ஏற்று செயல்பட 1.17க்குக் குறையாமல் 1.33 என்ற அளவிற்கு இருக்க வேண்டும். அதேபோல் நிறுவனம் கடன் மூலம் பெற்றுள்ள சொத்துக்களின் விகிதம் 1.50 என்ற அளவில், 1.40க்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் உற்பத்தியாகும் பொருட்கள், சந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து நிதி விகிதங்கள் அமைகின்றன.

செயல்திறன் மிக்க பெருவணிக நிறுவனங்கள் நடப்பு மூலதனக்கடனும், தவணைக்கடனும் வங்கியிடமிருந்து பெறுவதற்கு வருமானவரி கணக்கு எண், படிவம் 32 (நிறுவன இயக்குநர்களின் விவரம், ஜிஎஸ்டி / வர்த்தக உரிம ஆவணங்களின் நகல், படிவம் 16A (TDS சான்றிதழ்), நிறுவனத்தின் ஆறுமாதகால வங்கிக்கணக்கு அறிக்கை, நிறுவனத்தின் சொத்து ஆவணங்களின் நகல், ஆலை மற்றும் இயந்திரங்களின் பட்டியலும் அவற்றின் நிகர மதிப்பின் அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கவேண்டும். வங்கிகளின் மூலம் பெருவணிக நிறுவனங்கள் பெறக்கூடிய கடன் திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

பெருவணிக நிறுவனக் கடன்

விண்ணப்பதாரரின் வணிக நிதிவலிமை, அனுபவம் மற்றும் எதிர்வரும் சந்தைக்கான மதிப்பீடு ஆகிய காரணிகளைக் கணக்கிட்டு வங்கி பெருவணிக நிறுவனத்திற்குக் கடன் வழங்குகிறது. விண்ணப்பதாரர் செலுத்தவேண்டிய விளிம்புத்தொகை சரக்குகளின் மதிப்பில் 20% மற்றும் விற்றுவரவேண்டிய ரசீதுத்தொகையில் 25% ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு மற்றும் லாப, நஷ்டக் கணக்கின் அடிப்படையில் உரிய விகிதக்கணக்கீட்டின் மூலம் நிதிநிலைமையை வங்கி பகுப்பாய்வு செய்து நடப்பு மூலதனக் கடனை குறைத்தோ, அதிகரித்தோ அல்லது அதேநிலையில் புதுப்பித்தோ வழங்கும். மிகைப்பற்றுக் கடனாக வழங்கியிருந்தால் 60 மாதங்களுக்கான கால அளவில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்து வங்கி கடன்தொகையை அனுமதிக்கும். நடப்பு மூலதனக் கடனை 35 மாதங்களிலும் தவணைக்கடனை 84 மாதங்களிலும் வங்கியில் திருப்பிச் செலுத்தவேண்டும்.

பிணையமாக அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் நிலையான சொத்தினை அடமானமாக வங்கிக்கு பதிவு செய்து வழங்கவேண்டும். ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டில் சரக்குகளின் இருப்புநிலை மற்றும் விற்பனை செய்யப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் வழங்கவேண்டும். அவற்றை ஆய்வு செய்து நடப்பு மூலதனக் கடன் வரம்பை வங்கி அனுமதிக்கும். தவணைக்கடன் மூலம் வாங்கிய இயந்திரங்கள், உபகரணங்கள், வாகனங்களுக்கான ரசீதுகளை வங்கியிடம் வழங்கவேண்டும்.

இருப்பில் உள்ள மூலப்பொருட்கள், செயலாக்கத்தில் உள்ள சரக்குகள், உற்பத்தியாகி விற்பனையாக வேண்டிய பொருட்கள் மற்றும் தவணை கடன் மூலம் வாங்கிய அனைத்திற்குமான காப்பீட்டுக் கட்டணம் கடன் கணக்கிலிருந்து காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படும். இவை அனைத்தும் வங்கியின் அடமானத்தில் உள்ளதாக பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு ஆவணத்தின் அசல் படிவம் கடனாளருக்கு வழங்கப்பட்டு அதன் நகல் வங்கியில் பாதுகாக்கப்படும்.

பருப்பு ஆலைக்கான கடன்

குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அவற்றுக்கென வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம் வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவற்றில் ஒன்று பருப்பு ஆலைக்கான கடன் திட்டம். பெருவணிக நிறுவனம் உற்பத்தி செய்யும் பருப்பு ஆலைக்கு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தி என்றால் ரூ.25 கோடி வரையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கான உற்பத்தி எனில் அதிகபட்சமாக ரூ.30 கோடி வரைக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

விண்ணப்பதாரர் செலுத்தவேண்டிய விளிம்புத்தொகை சரக்குகளின் மதிப்பில் 20% மற்றும் விற்பனைக்கான ரசீதுத்தொகையில் 25%. தவணைக்கடன் என்றால் ஆலைக்கு கட்டிடம் கட்டுவதற்கு மொத்த கட்டுமான மதிப்பில் 75% வரை கடன் கிடைக்கும். புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு 80% வங்கிக்கடன் பெறலாம். ஆனால் பழைய இயந்திரங்கள் வாங்குவதற்கு நிபுணர்கள் நிர்ணயித்த மொத்த மதிப்பில் 60% வரை வங்கி கடன் வழங்கும். கடனை 84 மாதங்களில் சமமான மாதாந்திர தவணையாக வங்கியில் செலுத்தவேண்டும். முதல்நிலைப் பிணையமாக ஆலைக் கட்டிடம் மற்றும் கடன்மூலம் வாங்கப்பட்ட இயந்திரங்களையும், இணைப்பிணையமாக கடனுக்கு ஈடான தொகை மதிப்புள்ள நிலையான சொத்தும் அடமானமாக வங்கியின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பெருவணிக வாகனக்கடன்

கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கிரேன், புல்டோசர், எர்த்மூவர், பேருந்துகள், சாலை அமைக்கும் உந்துகள், ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திர வாகனம் ஆகிய வாகனங்கள் வாங்குவதற்கான கடனை வங்கியில் பெறலாம். விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய தொகை வாகன விலை, பதிவுக்கட்டணம் மற்றும் காப்பீட்டுக் கட்டணம் ஆகிய மொத்தத்தில் 25%. தவணைக்கடன் மூலம் வாங்கிய இயந்திரங்கள், உபகரணங்கள், வாகனங்களுக்கான ரசீதுகளை வங்கியிடம் வழங்கவேண்டும்.

மேலும் வங்கியின் அறிவுறுத்தலின்படி அவற்றுக்கான காப்பீடு செய்யவேண்டும். காப்பீட்டுக் கட்டணம் கடன் கணக்கிலிருந்து செலுத்தப்படும். காப்பீட்டு ஆவணங்களின் அசல் படிவம் கடனாளருக்கு வழங்கப்படும், நகல் வங்கியில் பாதுகாக்கப்படும். இவற்றை இயக்கிப் பராமரித்தலுக்கும் வங்கிகள் கடன் தருகின்றன. அதற்கு விளிம்புத்தோகை 40% செலுத்தவேண்டும். வாகனக்கடனை 60 முதல் 84 மாதங்களிலும், இயக்கச் செலவுக்கடனை 35 மாதங்களிலும் வங்கியில் செலுத்தலாம். பிணையமாக சொத்து அடமானம் வங்கியின் பெயரில் பதிவு செய்ய வேண்டும்.

மருந்து மற்றும் சுகாதார பராமரிப்பு நிறுவனக்கடன்

பெருவணிக நிறுவனங்களின் முதலீடு, நிதிவலிமை, வணிக நிலை, அனுபவக் காலம், சந்தைப் பங்கு மற்றும் லாபவிகிதங்களின் நிலைக்கு ஏற்ப ரூ.10 கோடிவரை வங்கியிலிருந்து கடன் பெறமுடியும். வங்கியில் கடனுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் செலுத்தவேண்டிய விளிம்புத்தொகை சரக்குகளின் மதிப்பில் 20% மற்றும் விற்கப்படும் ரசீதுத்தொகையில் 25%. ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு ஆவணங்களைப் பெற்று அவற்றை பகுப்பாய்வு செய்து நிதிவலிமையைச் சுட்டும் விகிதங்களின் அடிப்படையில் நடப்பு மூலதனக் கடனை அதிகரித்தோ, குறைத்தோ, புதுப்பித்தோ வங்கி வழங்கும். இதற்கான மொத்த கால அளவு 35 மாதங்களாகும்.

தவணைக்கடன் பெறுபவர்கள் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு பிணையமாக 25% வங்கியின் மூலம் செலுத்தவேண்டும். பழைய இயந்திரங்கள் வாங்க அதன் சந்தை மதிப்பில் 50% மட்டுமே வங்கிக்கடனாகக் கிடைக்கும். மருந்து தயாரிக்கும் கட்டிடம் கட்டுவதற்கு அதன் கட்டுமான மதிப்பில் 75% வரை கடன் பெறலாம். பழைய கட்டிடத்தை வாங்க வேண்டுமெனில் அதன் சந்தை மதிப்பில் 50% கடன் பெறலாம். கட்டிடங்களின் அலங்கரிப்பிற்கு 40% முதலீடு போக 60% தொகையை வங்கியின் சிறப்புத்திட்டக் கடன் பெறலாம். தவணைக்கடனை 84 மாதங்களில் சமமான மாதாந்திர தவணையாக வங்கிக்கடன் கணக்கில் செலுத்தவேண்டும்.

மருத்துவர் தொழிற்கடன்

ஒவ்வொரு தொழில்முறை சார்ந்த பெருவணிக நிறுவனத்திற்கும் அதன் செயல்பாட்டுத் திறனுக்கும், நிதித்தேவைக்கும் ஏற்ப வங்கி கடன் வழங்குகிறது. உதாரணமாக மருத்துவமனை அமைத்தல், நவீனப்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள், Xray மற்றும் CT, ஸ்கேன் இயந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்திகள், கணினிகள், பிற வாகனங்கள் வாங்குதல் ஆகிய நிதி முதலீடுகளுக்கு வங்கி தவணைக்கடன் வழங்குகிறது. தனி மருத்துவருக்கு வழங்கப்படும் கடன்கள் தனிநபர் கடன் திட்டத்தில் அமையும். இவை வணிக நிறுவனம் சார்ந்த கடனாகும். இயக்கச் செலவுகளுக்காக நடப்பு மூலதனக்கடன் மற்றும் நிரந்தரப் பயன் முதலீட்டுக்காக தவணைக்கடன் ஆகியவற்றிக்கு தனித்தனி வரம்புகள் உள்ளன.

கிராமப் பகுதியில் இயங்கும் மருத்துவமனைக்கு தவணைக்கடனாக ரூ.100 லட்சம், நடப்பு மூலதனக்கடனாக ரூ.10 லட்சம் கிடைக்கும். நகர்ப்புற மருத்துவமனை தவணைக்கடன் ரூ.200 லட்சம், நடப்பு மூலதனக்கடன் ரூ.20 லட்சம், பெருநகரத்தில் பணியாற்றும் மருத்துவமனை தவணைக்கடன் ரூ.400 லட்சம் மற்றும் நடப்பு மூலதனக்கடன் ரூ.50 லட்சம் பெறலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் கடன் பெற்ற 12 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும். ஏழு முதல் 15 ஆண்டுகளுக்குள் மாதத் தவணைகளில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் கடன் தவணையைச் செலுத்தவேண்டும். கடன்களில் வாங்கப்படும் அனைத்தும் முதற்பிணையமாக வங்கியின் உரிமையில் இருக்கும். ரூ.15 லட்சத்திற்கு மேல் பெறும் கடனுக்கு இணை பிணையமாக கடன்தொகையின் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை அடமானமாக பதிவு செய்ய வேண்டும்.

நிதிசாராத கடன் வசதித் திட்டங்கள்

பெருவணிகத்துறையில் 90% நிறுவனங்கள் வங்கிகளின் மூலம் பயன்படுத்தும் நிதி சார்ந்த கடன்களுடன் நிதி சாராத கடன் வசதிகளான வங்கி உத்தரவாதமும் வங்கி உறுதிக்கடிதமும் ஆகும். நிதிப்புழக்கம் அதிகமுள்ள நிறுவனங்களில் பிற வணிகர்களை நம்பி வணிகம் செய்வதற்கும், பொருட்களைப் பெற்றவுடன் பணம் செலுத்தாமல் பின்னாளில் செலுத்தும் சலுகை பெறுவதற்கும், நிறுவனங்களுக்கிடையேயான சேவைகளை உறுதி செய்வதற்கும் வங்கியென்னும் இடையிலுள்ள உறுதியாக நிறுவப்பட்டு இயங்கும் ஒரு நிறுவனத்தின் உறுதிமொழி தேவைப்படுகிறது. வங்கிகள் வழங்கும் இந்த இரு வசதிகளைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம். பெருவணிக நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வங்கிகள் இந்த வசதிகளில் மிக அதிகச் செயல்பாடுகளை இணைத்துள்ளன.

கடன் வரம்பு என்று ஒரு தொகையை நிர்ணயிக்கும்போது நிதிசாராத வசதிகளை நிதிசார்ந்த வசதிகளோடு சேர்த்து வங்கிகள் பெருவணிக நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. பெருவணிக நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபடும்போது சர்வதேச நகரங்களுக்கிடையில் உள்ள தொலைவு, அயல்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், சுங்க விதிகள், அந்நியச் செலாவணி மாற்றங்கள் உள்ளிட்ட பலவற்றைச் சந்திக்கவேண்டியுள்ளது.

வணிகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த வசதிகள் பெருமளவு பெருவணிக நிறுவனங்களுக்கு உதவுகின்றன. மேலும் சர்வதேச வர்த்தக சபை வகுத்துள்ள ஆவணக் கடன்களுக்கான ஒரே சீரான நடைமுறைகளின் தொகுப்பு சர்வதேச வணிகத்தை தரமுள்ளதாக்கி, வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. இதன் வழிகாட்டுதலில்தான் சர்வதேச அளவில் வங்கி உறுதிக்கடிதமும், வங்கி உத்தரவாதமும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. நிறுவனங்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை நெறிப்படுத்த ஒழுங்குமுறைத் தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன.

பெருவணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வங்கி உத்தரவாதக் கடிதமும், வங்கி உறுதிக்கடிதமும் விண்ணப்பதாரர் மற்றும் பயனாளரின் பெயர், வணிக முகவரி, வணிக விவரங்கள், வணிகத்தில் ஈடுபடுத்தும் பொருட்களின் எடை, தரம், விலை உள்ளிட்ட முழு விவரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் தனித்தனி பட்டியல்கள், பொருட்களை அனுப்பும் விவரம், அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகியோரின் பொறுப்புகள், பணம் செலுத்தும் விவரம், காலம், இடம், வழிகள், ஆவணங்கள் மாற்றத்தக்கதா அல்லது பிறருக்கு மாற்ற முடியாததா, இடையில் ஏற்படும் சச்சரவுகளுக்கான தீர்வுகள், அணுகும் முறைகள், காப்பீடுகளின் விவரம், பொருட்களை அனுப்பும் சான்று தாங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டால் அதற்கான நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகத் தாங்கியவையாகவும் இதில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், பயனாளர் மற்றும் வங்கியாளர் ஆகிய மூவரும் ஒப்புதலோடு கையொப்பமிட்டதாகவும் அமைந்திருக்கும்.

பண நிர்வாக வசதி

பணத்தை முதலீடு செய்யாமல் பணத்தாள்களாகவே வைத்திருந்தால் எந்தவொரு பயனுமில்லை. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலச்சூழலில் பணத்தாள்களைக் கையாளாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது செலவுகளைக் குறைப்பதாகும். இருப்பினும் சில்லறை வணிகத்தின் மூலம் பெருவணிக நிறுவனங்களின் இயக்கத்திலும் பெருமளவு பணம் சேர்ந்துவிடுகிறது. அதிக அளவு தினமும் வணிகப் புழக்கத்தில் சேரும் பணத்தாள்களை நிறுவனத்திற்கே நேரில் சென்று வங்கியாளர் பெற்றுவந்து நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் வரவுவைக்கும் பண நிர்வாக வசதி வங்கிகளால் வழங்கப்படுகிறது.

மேலும் பெருவணிக நிறுவனங்கள் வங்கிகளின் லாபமீட்டும் வர்த்தகத்திற்கு பெருமளவு உதவுவதால், வங்கிகளின் கட்டணத்தில் குறைப்பு, இலவச பணப் பரிவர்த்தனை வசதி, நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தொகையில்லாமல் சேமிப்புக் கணக்கை நடத்திக்கொள்ளும் வசதி போன்ற பல சலுகைகளை வங்கிகள் வழங்குகின்றன. மேலும் நிறுவனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முதலீடுகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பட்டு நூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்! (மகளிர் பக்கம்)
Next post மருந்தாகும் அஞ்சறைப் பெட்டி!! (மகளிர் பக்கம்)