பட்டு நூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்! (மகளிர் பக்கம்)
பல துறைகளில் பெண்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அது சிறு தொழிலோ, குறு தொழிலோ..? அல்லது ஒரு நிறுவனத்தில் உயர் பதவியோ? அப்படி முன்னேறி வரும் பெண்களில் பலர் மற்றவர்களையும் கைப்பிடித்து அவர்கள் முன்னேறவும் ஒரு பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தான் முன்னேறியது மட்டுமில்லாமல் பல பெண்களின் தினசரி வாழ்க்கையின் ஆதாரமாக கைகொடுத்து அவர்களுக்கு என ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார் வேதா. இவர் தமிழ்நாட்டில் சிறந்த பட்டு நூல் ரீலிங்கிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விருது பெற்றுள்ளார். இவர் தன்னுடைய தொழிற் பயணத்தை பற்றியும் அதற்காக தான் கடந்து வந்த இன்னல்கள் குறித்தும் விவரிக்கிறார்.
‘‘நாங்கள் கடந்த 30 ஆண்டுகளா இந்த சில்க் ரீலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். என்னோட மகனும், மகளும் வளர்ந்து அவர்களுக்கான வேலைகளை அவர்களே செய்து கொள்ள ஆரம்பித்த பிறகுதான் நான் இந்த தொழிலினை கையில் எடுத்தேன். கிட்டத்தட்ட 15 வருடமாக நான் இதனை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். அதற்கு அடையாளமாகக் கிடைத்ததுதான் இந்த விருதுகள்’’ என்றார்.
பெண்கள் பாதுகாப்பை மட்டுமே மையமாக வைத்து தங்கள் ஆலையில் பல மாற்றங்களை கொண்டு வந்ததாக கூறும் வேதா, ‘‘முன்பு இங்கு ஆண்களும் வேலைக்கு வருவார்கள். அவர்கள் சில நேரங்களில் ஆலைகளிலே குடித்து விட்டு உறங்கியிருக்காங்க. மேலும் இந்த துறையில் பெண்கள் வேலைக்கு வருவது தான் அதிகம். வேலைப் பார்க்கும் இடத்தில் ஆண்கள் குடித்துவிட்டு பெண்களிடம் தவறுதலாக நடந்தால் அதனால் பாதிப்பு எனக்கு மட்டுமல்ல என்னிடம் வேலைப் பார்க்கும் பெண்களுக்கும் தான்.
அதனால் பெண்களின் பாதுகாப்பு தான் என் மனதில் முக்கியமாக பட்டது. எப்போது இந்த ஆலையின் பொறுப்பினை நான் ஏற்றேனோ அப்போதே நான் பெண்களின் பாதுகாப்பிற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். அதில் முதலில் குடித்துவிட்டு வந்து இங்கேயே படுத்து உறங்கும் ஆண்களை வேலையை விட்டு நீக்கினேன். அவர்களுக்கு பதில் எல்லா இடங்களிலும் பெண்களையே வேலைக்கு வைத்தேன். இங்கு மொத்தம் 11லிருந்து 15 பெண்கள் என்னிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு பட்டுப்பூச்சி கூடு அளவிடுதல் முதல் பட்டு நூலை பண்டல் போட்டு எடுத்து வைத்தல் வரை எல்லாவிதமான வேலையும் தெரியும்” என்று விவரித்த வேதா, தனக்கு முதல் விருது எவ்வாறு கிடைத்தது எனவும் விளக்குகிறார்.
‘‘கொரோனா காலக்கட்டத்தில் முதல் ஊரடங்கின் போது எங்களிடம் ஒரு டன் பட்டுக் கூடுகள் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த ஒரு டன் பட்டுக் கூட்டினை அப்படியே வைத்தால் வீணாகிவிடும். அதனால் நாங்க அனைவரும் ரொம்ப வருத்தத்தோடு இருந்தோம். சில நாட்களுக்கு பிறகு கொஞ்சம் தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அப்போது நானும் எனது கணவரும் ஆளுக்கொரு வண்டியை எடுத்துக் கொண்டு வேலைக்கு ஆட்களை அவர்கள் வீட்டிற்கே சென்று அழைத்து வருவோம். அதன் பின்னர் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்தவுடன் பாதி நபர்களை மட்டுமே வேலைக்கு அழைத்து வந்தோம்.
அவர்கள் வேலை முடித்தவுடன் நாங்களே அவர்களை வீட்டில் சென்று விட்டு விடுவோம். இப்படித்தான் நாங்க ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்த்து எங்களிடம் இருந்த ஒரு டன் கூடுகளை நூலாக மாற்றினோம். இதையறிந்த விவசாயிகள் தங்களிடமிருந்த பட்டுக்கூடுகளையும் எங்களிடம் கொண்டு வந்து ெகாடுத்து அதனை நூலாக மாற்றித் தரும்படி கேட்டனர். அவர்கள் அதனை எங்களின் ஆலையில் கொட்டி விடுவார்கள்.
அதனை நாங்க பட்டு நூலாக மாற்றிக் கொடுத்தோம். வீணாகி போகும் கூடுகளை எவ்வளவு விலைக் கொடுத்தாவது நூலாக மாற்றிட வேண்டும் என்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் எங்களை நாடி வருவதை பார்க்கையில் வேதனையாக இருக்கும். அதனால் அவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவியினை செய்து கொடுத்தோம். ஒரு வழியாக அனைத்தும் காலியான பிறகு தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. அந்த சமயத்தில் தான் ‘தமிழ்நாட்டின் சிறந்த சில்க் ரீலர்’ விருது குறித்த அறிவிப்பு வந்தது. அதற்கு நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்கள் கையால் அந்த விருதினைப் பெற்றேன். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. என்னுடைய முன்னேற்றத்துக்கு கிடைத்த அங்கீகாரம்’’ என்றார்.
நாள் முழுவதும் வெந்நீரில் கைவைத்து வேலை செய்வது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. இதனால் கைகளில் காயம் ஏற்படும். அதற்கு என தனிப்பட்ட களிம்பு
களைத் தடவிக் கொண்டு தான் இவர்கள் வேலையினை செய்கிறார்கள். அதனை நிறுவனமே தந்து உதவுகிறது. மேலும் பட்டு நூல் உற்பத்தியில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் குறித்து விளக்கமளித்தார் வேதா. ‘‘பட்டுக்கூடுகள் சீசனுக்கு ஏற்ப அதன் விலை மாறுபடும். சில சமயம் 700 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு வாங்குவோம். ஒரு சில நேரங்களில் 450 ரூபாய்க்கும் விற்கப்படும். அதனை வாங்கி கூட்டில் இருந்து நூலை எடுத்து அதனைதான் விற்பனை செய்கிறோம்.
வேலையாட்களுக்கு கூலி, வண்டி வாடகை, தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் என எல்லாம் போக எங்களுக்கு லாபம் என்று பார்த்தால் 200 ரூபாய்தான் கிடைக்கும். மேலும் எங்களிடம் உற்பத்தி ஆகும் நூல்கள் காஞ்சிபுர மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. தற்போது நேரடியாக சேலத்தில் உள்ள அரசாங்க கிடங்கிற்கு அனுப்பி விடுகிறோம். இதற்காக தமிழக அரசு பல திட்டங்களையும் எங்களுக்காக அறிவித்துள்ளது.
மேலும் பட்டுக்கூட்டில் இருந்து பட்டு நூல் பிரிக்கப்பட்ட பிறகு அதன் கழிவுகள் மட்டுமே ஒரு நாளைக்கு ஒன்றரைக் கிலோ கிடைக்கும். அதனை பங்களாதேஷ் மற்றும் சீனாவிற்கு அனுப்பிடுவோம். அதன் மூலம் ரூபாய் 800 முதல் 1000 வரை லாபம் பார்க்க முடியும். என்னதான் லாபம் என்று பார்த்தாலும், எங்களை போல் வேலை செய்பவர்களுக்கு என சில கோரிக்கைகள் உள்ளன. பட்டுக்கூட்டில் இருந்து வெளியாகும் ஒரு வித வாசம் எங்களுக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும்.
அது வேலையினை பாதிக்கிறது. இது ஒருவரின் உடலுக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்துவதால், அவர்களால் சரியாக வேலைக்கு வர முடியாமல் போகிறது. அதனால் இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனையினை இலவச முறையில் செய்து தர அரசு முன் வரவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும். அவர்களாலும் வேலையினை தடையில்லாமல் மேற்கொள்ள முடியும். இங்கு வேலைக்கு வரும் பெரும்பாலான பெண்கள் அதிகம் படிக்காதவர்கள். அதிகபட்சம் இவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பார்கள். குடும்ப சூழலுக்காக வேலைக்கு வரும் இவர்களுக்கு நாம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது அவசியம்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் வேதா.