மணப்பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொண்டு மேக்கப் செய்யணும்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 47 Second

மேக்கப் என்பது ஒரு கலை. அழகாக இருக்கும் ஒரு பெண்ணை, மேலும் அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றக்கூடிய திறன் மேக்கப்பிற்கு மட்டுமே உண்டு. அந்த திறனை தன் 12ம் வயதில் இருந்தே துவங்கியவர் தற்போது பல சினிமா பிரபலங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்டாக வலம் வருகிறார் சென்னையை சேர்ந்த தேவி கார்த்திக். ‘‘நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு மேக்கப் மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. காரணம் எங்க எதிர் வீட்டு அக்கா. அக்கா அவங்க வீட்டிலேயே பார்லர் வச்சிருந்தாங்க. ஒரு நாள் மெஹந்தி போட சரியான ஆள் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு டிராயிங் வரைய ரொம்ப பிடிக்கும், நன்றாகவும் வரைவேன். மெஹந்தியும் கிட்டத்தட்ட டிராயிங் போலத்தானேன்னு பிராக்டிஸ் செய்ய ஆரம்பிச்சேன். என் கையில் நானே போட்டு பழகினேன். அதை அக்காவிடம் காண்பித்த போது அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சு போனது. ‘நீ நல்லா போடுற.. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் நீயே மெஹந்தி போடு’ன்னு சொன்னாங்க. நானும் அவங்க சொல்லி நிறைய பேருக்கு போட ஆரம்பிச்சேன். அப்படியே மணப்பெண்ணுக்கும் போட பழகினேன். ஒரு வருமானமும் கிடைச்சது.ஒரு முறை கல்யாண வீட்டில் நான் மட்டுமே தனியாளாக மணப்பெண் உட்பட 20 பேருக்கு மெஹந்தி போட்டேன். அதேபோல் துல்கர் சல்மான் அவரின் கல்யாணத்துக்கு நான் தான் மெஹந்தி போட  போயிருந்தேன். முதல்ல எனக்கு தெரியாது. அது எனக்கு நல்ல அனுபவமா இருந்தது. அப்ப முடிவு செய்தேன். என்னுடைய துறை இதுதான்னு. அப்ப நான் பத்தாம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன். வீட்டில் போய் சொன்ன போது அம்மா திட்டினாங்க. படிப்பு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் +2 வரை படிச்சேன். அதன் பிறகு வீட்டில் அடம் பிடித்து 35 ஆயிரம் செலுத்தி மேக்கப் கலை குறித்த பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் போதே வெளி ஆர்டர்களை எல்லாம் எடுத்து செய்தேன். அந்த சமயத்தில் ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை வாய்ப்பு வந்தது. அங்கு இரண்டு வருஷம் வேலைப் பார்த்தேன். அதில் நிறைய கத்துக் கொண்டேன். சாதாரண மேக்கப் முதல் மணப்பெண் மேக்கப் என அனைத்தும் போட கத்துக்கிட்டேன். இதற்கிடையில் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், என்னால் தொடர்ந்து வேலையில் ஈடுபட முடியவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு தனியாக செயல்பட ஆரம்பிச்சேன்’’ என்றவர் படிப்படியாக தன்னுடைய வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணமானார். ‘‘ஒரு முறை பெரிய ஆர்டர். நடிகர் ரஜினி சாரின் கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு கல்யாணத்தில் மணப்பெண் மேக்கப் செய்தேன். அது எல்லாருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் மூலமாக எனக்கு பல ஆர்டர்கள் குறிப்பாக சினிமா பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது. ஈரோடு மகேஷ் அவர்கள் மனைவியின் தங்கை கல்யாணத்திற்கு மேக்கப் செய்தேன். அதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம், நடிகர் மகத் அவரின் திருமணம், நடிகர் பிரபு சாரின் உறவினர் திருமணம் மற்றும் விளம்பர படங்கள் என படிப்படியாக எனக்கான வாய்ப்புகள் அதிகமானது. மேக்கப் செய்வது மட்டுமில்லாமல் இது குறித்த பயிற்சியும் எடுத்து வருகிறேன். எனக்கான முழு சப்போர்ட் என் வாடிக்கையாளர்கள் தான். அவர்களுக்கு நான் போடும் மேக்கப் பிடித்திருப்பதால் தான் என்னை அவர்கள் பலருக்கு அறிமுகம் செய்து வருகிறார்கள். காரணம் மேக்கப் போட்டு இருப்பதே தெரியாமல் நேச்சுரல் லுக் கொடுக்கும். அதுதான் பார்க்க அழகா இருக்கும்’’ என்றவர் சினிமாவில் போடப்படும் மேக்கப் மற்றும் மணப்பெண்ணின் மேக்கப் குறித்து விவரித்தார்.‘‘சினிமாவைப் ெபாறுத்தவரை அவங்களுக்கு மேக்கப் குறித்து தெரிந்திருக்கும். என்ன தேவைன்னு சொல்லிடுவாங்க. சிலர் அவங்க தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களைத் தான் பயன்படுத்த சொல்வாங்க. மணப்பெண்களுக்கு மேக்கப் போடும் போது, அவர்களுக்கு என்ன போட்டா நல்லா இருக்கும்ன்னு நாம சஜஸ்ட் செய்யணும். அப்படித்தான் மகத் அவர்களின் திருமணத்தில் அவங்க இரண்டு பேரை மேக்கப் டிரயல் செய்ய சொல்லி இருந்தாங்க. அதில் என்னுடைய மேக்கப் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. குறிப்பா நான் புடவை கட்டும் விதம்.சினிமா ஷூட்டிங்கின் போது நடிகைகள் எப்போதும் ஸ்பாட் லைட் முன்பு இருப்பதால், முகம் பொலிவிழக்கும். அதற்கு ஃப்ரெஷ் லுக் மேக்கப் செய்யணும். மேக்கப் கலையாமல் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க ஈரத்துணிக் கொண்டு துடைத்தால் போதும். அதனால் தான் எல்லா நடிகர், நடிகைகளுடன் எப்போதும் ஒரு டச்சப்பாய் கூடவே இருப்பாங்க. மணப்பெண் அலங்காரத்தை பொறுத்தவரை வியர்த்தால், டிஷ்யு கொண்டு ஒற்றி எடுத்தால் போதும்’’ என்றவர் மணப்பெண்களுக்கான மேக்கப் போடும் போது பல ஸ்டெப்களை பின்பற்ற வேண்டுமாம். ‘‘நடிகைகள் பொறுத்தவரை அவங்க எப்போதுமே தங்களின் சருமம் மற்றும் உடல் அமைப்பு குறித்து ரொம்ப கவனமா பராமரித்து வருவாங்க. மணப்பெண்கள் அப்படி இல்லை. திருமணத்திற்கு முன்பு தான் கொஞ்சம் அக்கறை எடுப்பார்கள். அதனால் இவர்களுக்கு மேக்கப் செய்யும் போது பல ஸ்டெப்ஸ் பின்பற்ற வேண்டும். கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். உதட்டை சுற்றி கருப்பாக இருக்கும். சிலருக்கு நெற்றி ஒரு நிறத்திலும் முகம் ஒரு நிறத்திலும் இருக்கும். முதலில் முகத்தை கிளன்சர் கொண்டு நன்கு சுத்தம் செய்திடுவோம். பிரைமர் தடவி காய வைத்து பிறகு கன்சீலர் போடணும். கருவளையம், பருவினால் ஏற்பட்ட வடு, தழும்பு போன்றவற்றை கரெக்ட் செய்ய கன்சீலர் பயன்படுத்துவோம். அதன் பிறகு பவுண்டேஷன். கன்னம், மூக்கு, நெற்றிப் பகுதியினை கான்டோர் செய்து, பவுடர் போடலாம். அடுத்து ஹைலட்டர். கன்னம் மற்றும் மூக்கு தனித்து அழகாக தெரிய இதை பயன்படுத்துவோம். கடைசியா கண்கள் மற்றும் உதட்டுக்கான மேக்கப் இவை இரண்டுமே ரொம்பவே முக்கியமான மேக்கப். அது தான் ஒருவரின் முகத்தினை மேலும் அழகாக எடுத்துக்காட்டும். மணமகன்களும் இப்ப மேக்கப் போட ஆரம்பிச்சிருக்காங்க. பெண்கள் மாதிரி அதிக அளவு கவனம் செலுத்தவில்லை என்றாலும், கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மற்றும் மீசை, தாடி, தலைமுடிக்கு கொஞ்சம் கவனம் செலுத்துவோம். நான் சினிமாவில் பொறுத்தவரை குறிப்பிட்ட இயக்குனர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேலைப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட 300 பிரபலங்களுக்கு நான் மேக்கப் செய்திருக்கேன். அவங்க தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து தருவேன். எந்த வேலை செய்தாலும் அனுபவம் ரொம்ப முக்கியம். நான் படிச்சி முடிச்சு தனித்து செயல்பட ஆரம்பிக்கல. ஆனால் இப்ப பலரும், 10 நாள் பயிற்சி எடுத்தவுடனே தங்களை மேக்கப் ஆர்டிஸ்ட்ன்னு சொல்லிக்கிறாங்க. எந்த பயிற்சி எடுத்தாலும் அதை செயல்முறையில் செய்யும் போது தான் எது சரி தவறுன்னு புரியும். ஒரு இடத்தில் அனுபவம் பெற்ற பிறகு தான் நாம நேரடியா இறங்கணும். குறைந்த பட்சம் ஒரு வருஷம் வேலைபார்க்கணும். நான் 14 வருஷமா இதில் இருக்கேன். வருஷா வருஷம் இதில் அப்கிரேட் இருக்கும். இப்ப எனக்கு சருமத்திலோ அல்லது தலைமுடியிலோ எந்த பிரச்னை இருந்தாலும் அதை சரி செய்ய முடியும். மேலும் அழகுக் கலை குறித்து பயிற்சி அளித்து மாணவர்களை உருவாக்கும் எண்ணம் உள்ளது. என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் எல்லாரும் திறமையானவர்கள்னு பெயர் வாங்கணும். இப்ப நிறை பேர் இந்த துறைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வராங்க. இது ஒரு கலை. நான் சின்ன வயசில் இருந்தே இந்த கலையை படிப்படியா கத்துக்கிட்டேன். ஒருவருக்கு மேக்கப் செய்யும் போது வாடிக்கையாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆத்மார்த்தமா அவங்க எதிர்பார்ப்பதை கொடுக்கணும். பல பேர் சம்பாதிக்கலாம்ன்னு வராங்களே தவிர, அவங்களுக்கு வேலை தெரியலை, அதனால நிறைய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் தான் அடையறாங்க. நான் வாடிக்கையாளர்களிடம் சொல்வது ஒன்று தான் எவ்வளவு பெரிய மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்தாலும், முதலில் டிரையல் மேக்கப் செய்யுங்க. அப்பதான் உங்களுக்கு எது நல்லா இருக்கும்ன்னு முடிவு செய்ய முடியும். இந்த அறிவுரை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லை மேக்கப் கலைஞர்களுக்கும் தான். அப்பதான் வாடிக்கையாளர்களுக்கு நம்மேல் ஒரு நம்பிக்கை ஏற்படும்’’ என்ற தேவி கார்த்திக் பழங்கள் மற்றும் காய்கறி கொண்டு சிகை அலங்காரம் செய்ததற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழகு முகத்துக்கு 10 அழகு குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)
Next post வெயிலில் காக்க… 5 இயற்கை ஃபேஸ்பேக்!! (மருத்துவம்)