நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்! (மகளிர் பக்கம்)
இப்போது பெண்கள் குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி வந்தாலுமே அதற்கு ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ப்ளவுசை அணியும் அளவுக்கு அது பிரபலமான கலையாகவளர்ந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் முன்பே ஆரி வேலையை ஒன்பது வருடங்களாக செய்து வருகிறார் ப்ரியா சுப்ரமணியன். ஆரி வேலைப்பாடுகள் செய்த ப்ளவுஸ், சுடிதார் பார்த்து இருப்போம். ஆனால் இப்போது லேட்டஸ்டாக, முழுக்க முழுக்க ஆரி வேலைப்பாடுகளில் தத்ரூபமான நகைகளை அழகாக உருவாக்கி வாடிக்கையாளர்களை இவர் கவர்ந்து வருகிறார். ப்ரியா சுப்ரமணியனின் க்ரியாஸ் டிசைனர்ஸ் ஸ்டுடியோவிற்குள் நுழைந்ததுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஆடைகளை எல்லாம் அழகாக அலமாரியில் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருக்கிறார். பின்னால் இளையராஜா பாட்டு ஒலிக்க ஆரி கலைஞர்கள் மிகவும் அமைதியாக தங்கள் வேலையை ரசித்தபடி செய்கின்றனர். ‘‘எனக்கு சீக்கிரமே திருமணம் நடந்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதனால், கலை மீது என்னுடைய முழு கவனமும் திரும்பியது. திருமணமாகி குழந்தை பிறந்த போதும், தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், சுவரோவியம், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்வது என முடிந்தளவு அனைத்து விதமான கலைகளையும் என் குழந்தையை பள்ளியில் விட்டப்பின் கிடைக்கும் இரண்டு மணி நேர இடைவெளியில் கற்றுக்கொண்டேன். புதிதாக எந்த ஒரு கலை பிரபலமானாலும் அதை தேடிப் போய் கற்றுக்கொள்வதை பழக்கமாக வைத்திருந்தேன். அப்படித்தான் இந்த ஆரி வேலைப்பாடுகள் பற்றியும் தெரிய வந்தது. 12 வருடங்களுக்கு முன் ஆரி ஒர்க் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆரி வேலைப்பாடுகள் செய்ய அதிக நேரமும் உழைப்பும் தேவை. இதனால் அதன் விலை 12 வருடங்களுக்கு முன்பும் கூட அதிகமாகத்தான் இருந்தது. பொதுவாகவே எனக்கு டெய்லரிங், எம்பிராய்டரி செய்ய தெரியும். இந்த ஆரி கலையையும் கற்றுக்கொண்டால் என் மகள்களுக்கு நானே விதவிதமான உடைகளை உருவாக்கலாமே என்று தோன்றியது. அதனால் ஆரி பயிற்சியாளரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து இந்த கலையை கற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு ஆர்வத்தில், விலையுயர்ந்த தேக்கு மரத்தால் ஆன காட் எல்லாம் வாங்கி அதிகமாக முதலீடு செய்து இந்த கலையை கற்க தயாரானேன். ஆனால் பயிற்சி ஆரம்பித்த முதல் நாளில் ஊசியில் இருந்து எனக்கு நூல் எடுக்கவே முடியவில்லை. எவ்வளவு முறை பயிற்சி செய்தும் எனக்கு திருப்தி இல்லை. ஆரி வேலை மீது இருந்த ஆர்வம் குறைந்து சோர்வு தட்ட ஆரம்பித்தது. ஆனால் அதிக செலவு, இதற்கான பொருட்களை எல்லாம் வாங்கி இருந்ததால் முடிந்தவரை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால் அடுத்து வந்த நாட்களில் ஒரு வாரத்திற்குள் இரவெல்லாம் அமர்ந்து ஊசியில் நூலை எடுக்க முயற்சி செய்தேன். திடீரென சுலபமாக ஊசியில் இருந்து நூல் எடுக்க முடிந்தது. முதல் தடையை கடந்ததும், மீண்டும் ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வத்துடன் முழுமையாக ஆரி கலையை வேகமாக கற்றுத் தேறினேன். இதுவரை என்னுடைய ஆரி கலையை தையல் வேலையை நான் எங்குமே விளம்பரப்படுத்தியது கிடையாது. என்னுடைய வீட்டிலேயே முதலில் ஆரம்பித்து, பின் என் வீட்டின் பின் பக்கத்தில் தனியாக ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தேன். வீட்டிற்கு முன் ஒரு போர்டு கூட வைத்ததில்லை. எனக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாமே என்னை பற்றி பிறரிடமிருந்து வாய் வார்த்தையில் கேட்டு வருபவர்கள் தான். ஒவ்வொரு வாடிக்கையாளரும் அடுத்து வரப்போகும் நூறு வாடிக்கையாளர்களின் ஆரம்ப புள்ளி என்பதை மனதில் வைத்து எந்த சிறிய வேலையாக இருந்தாலும், அதை வாடிக்கையாளரை மகிழ்விக்கும் வகையில் செய்து கொடுப்பேன். நேரத்திற்கு கொடுக்க வேண்டும். நேர்த்தியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயத்தில் மட்டும் எந்த சமரசமும் செய்யாமல் சொன்ன நேரத்திற்கு ப்ளவுசை டெலிவரி செய்து அவர்கள் சொன்ன வேலையை அப்படியே செய்து கொடுப்பதை வாடிக்கையாக்கினேன். ஒருவருக்கு உங்கள் வேலை பிடித்துப்போனால், அவர் மூலம் பத்து வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். அதுவே சின்ன தவறு மூலம் ஒரு வாடிக்கையாளரை நீங்கள் இழக்க நேரிட்டால், அதன் மூலம் நீங்கள் அடுத்த நூறு வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி இருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்” என்கிறார் ப்ரியா. சமீபத்தில் இவர் உருவாக்கிய ஆரி நகைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘‘நான் ஆரி வேலைப்பாடுகள் மூலம் கெம்ப் ஜுவல்லரியைக் கொண்டு நகை போன்ற டிசைனில் பல ப்ளவுஸ்கள் செய்துள்ளேன். அப்போது தான் ஒரு முறை ஆன்லைனில் ஆரி நகைகளை பார்த்தேன். நான் ப்ளவுசில் செய்து வரும் டிசைன்களை அப்படியே நகையாக பார்த்த போது, நாமும் அதை செய்யலாம்னு முடிவு செய்தேன். என்னுடைய கலைநயத்தில் தனித்துவமான நெக்லஸ், ஆரம், ஒட்டியாணம், ஜிமிக்கி, வளையல் என அனைத்து நகைகளையும் செய்ய ஆரம்பித்தேன். கனடாவில், கோவிட் சமயத்தில் ஆன்லைன் நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் கனடாவில் இருக்க, அவர்களது பெற்றோர்கள் இங்கே இந்தியாவில் இருந்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இங்கிருந்து அவர்களுக்கு தங்கம் அனுப்ப முடியாததால், என்னிடமே ப்ளவுஸ் மற்றும் நகைகளை ஆர்டர் கொடுத்தாங்க. நெக்லஸ், ஜிமிக்கி, ஆரம், ஒட்டியாணம், வளையல், நெத்திச்சுட்டி என அனைத்துமே செய்து கொடுத்தோம்’’ என்றவர் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும் இந்த நகைகளின் வேலைப்பாடு குறித்து அதன் விலைகள் மாறுபடும் என்றார். ‘‘இந்த ஒன்பது வருடப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது அனுபவம்னு சொல்லலாம். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டும் இருக்கிறேன். வாடிக்கையாளர்கள், நம்மிடம் வேலை செய்யும் கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்று படிப்படியாக தெரிந்து கொண்டேன். பொதுவாக அனைவருமே வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதின் முக்கியத்துவத்தை புரிந்திருப்பார்கள். ஆனால் அதே சமயம் உங்களுக்காக உங்களுடன் வேலை செய்யும் ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் நலமாகவும் வைத்திருப்பதும் முக்கியம் தான். அதை நான் புரிந்து கொண்டேன்.பிஸியான நாட்களில் எனக்காக அவர்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் வேலையை முடித்து விட்டுதான் செல்வார்கள். அவர்களை செளகர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது என்னுடைய முக்கிய பொறுப்பு. ஆரம்பத்தில் ஆரி கலையைக் கற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். ஆனால் எல்லோராலும் கற்றுக் ெகாள்ள முடியும். தொடர்ந்து பயிற்சியும், முயற்சியும் இருந்தால் போதும். சிலர் ஒரே நாளில் கற்றுக்கொள்வார்கள், சிலருக்கு பத்து நாட்கள் ஆகும். ஆனால் யார் தொடர்ந்து பயிற்சி செய்து தங்களுடைய க்ரியேட்டிவிட்டியை இதில் புகுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றியடைய முடியும். பலரும் ஆரி வேலை மிகவும் காஸ்ட்லியாக இருக்கிறதே என்கிறார்கள். அதற்கு காரணம் இது செய்ய தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்தது. ஆரி கலைஞர்கள் கையிலேயே இந்த வேலையை மிகுந்த சிரத்துடன் செய்ய வேண்டும், இதில் மிகுந்த உடல் உழைப்பு, கவனம், க்ரியேட்டிவிட்டி தேவை. ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சம்பாதித்து சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் நான் என்றுமே உறுதியாக இருக்கிறேன். என்னுடைய மகள்களுக்கும் அதைத் தான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் அடி சரியாக இருந்து, அதற்காக உழைப்பையும் முயற்சியையும் நீங்கள் செய்தால், தானாகவே வாய்ப்புகளும் வெற்றிகளும் உங்களை தேடி வரும்” என்கிறார்.மேலும் இந்த துறையில் புதிதாக அடி எடுத்து வைப்பவர்களுக்கு சில ஆலோசனைகளையும் பகிர்கிறார், “ஒரு வாடிக்கையாளருக்கு அவருடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியும், அதே சமயம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் விதத்திலும் திருப்தியுடன் ஆடையை தயாரித்து கொடுக்கும் போது, அவர் உங்களை மேலும் நாலு பேருக்கு பரிந்துரைப்பார். அதே ஒரு வாடிக்கையாளருக்கு உங்களுடைய வேலை பிடிக்காதபோது, யாரும் கேட்காமலே உங்களைப் பற்றி அனைவரிடமும் குறை சொல்வார். இதனால் கண்ணுக்கு தெரியாமல் பல வாடிக்கையாளர்களை நீங்கள் இழப்பீர்கள். அதே போல ஒரு வாடிக்கையாளர் வரும் போது, அவர்களுடைய விருப்பங்களை பொறுமையாக காது கொடுத்து கேளுங்க. ஒவ்வொருவரின் விருப்பமும், ரசனையும் வேறுபடும். அது தவிர, உங்களின் ஊழியர்களையும், கலைஞர்களையும் மரியாதையுடன் நடத்தி மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இந்த இரண்டையும் சரியாக செய்தாலே வளர்ச்சி தானாக நடக்கும்” என்கிறார் ப்ரியா.