ஆடைகளுக்கு அழகூட்டும் இயற்கை சாயங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 19 Second

இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது அதனை கண்டுபிடித்து இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்களின் அன்றாட தேவையான உடைகளை அழகுப்படுத்த நாம் தயாரிக்கும் செயற்கையான சாயங்களினால் நீர் நிலைகள், நிலம் பாதிக்கப்படுகின்றன. இப்படி அதிகமாக ரசாயன சாயங்களினால் பாதிக்கப்பட்ட பகுதி திருப்பூர். பின்னலாடை அதிகமாக உள்ள பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் இருந்து வெளியாகும் ரசாயன சாயங்களால் திருப்பூரில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதை மாற்றி அமைக்க தாவரங்கள், பூக்கள், பழங்களில் இருந்து இயற்கையான முறையில் சாயங்களை உருவாக்கி அதில் ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையும் செய்துவருகிறார் தனியார் பள்ளி ஆசிரியை கிளாடிஸ் அலெக்ஸ். இயற்கை முறையில் சாயங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்று பல ஆய்வுகளில் ஈடுபட்டவர் அதற்கான விடையினை தன் சமயலறையில் கண்டுபிடித்துள்ளார். ‘‘என் தாத்தா காலத்தில் இருந்து நாங்க பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவுத்தொழில் தான் செய்து வருகிறோம். சொந்த ஊர் காங்கேயம் அருகே உள்ள சென்னிமலை.

நான் சின்ன வயசில் இருந்தே தறி சத்தம், நூல், சாயம் எல்லாம் பார்த்து தான் வளர்ந்தேன். அதனாலேயே எனக்குள் இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. படிப்பு முடிந்ததும் ஆசிரியர் பணியில் ஈடு பட்டேன். திருமணம், குடும்பம், வேலை என்று ஓயாமல் ஓடிக் கொண்டிருந்ததால் என்னால் அந்த நேரத்தில் நெசவு தொழில் குறித்து யோசிக்க நேரமில்லாமல் இருந்தது.

அப்பதான் கொரோனா தொற்று ஏற்பட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆன்லைன் கல்வி என்பதால் எனக்கான நேரம் இருந்தது. அந்த நேரத்தில் நெசவு தொழில் குறித்து பல யோசனைகள் என்னுள் ஏற்பட ஆரம்பித்தது. அதில் முக்கியமா என் சிந்தனையில் ஓடியது நம்மை இன்றும் விரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் பற்றியதாக இருந்தது. இது போன்ற தொற்று ஏற்பட காரணம் இயற்கையை விட்டு நாம் ரொம்ப தூரம் கடந்து போயிட்டோம். அந்த சமயத்தில் நாம் அனைவரும் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களை தேட ஆரம்பித்தோம். அப்போது தான் நம்மாளும் இயற்கை கூட இணைந்து வாழ முடியும்ன்னு புரிந்தது. மேலும் அந்த சமயத்தில் நான் நெசவு தொழில் குறித்தும் அதில் பயன்படுத்தப்படும் சாயங்கள் குறித்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

திருப்பூர் என்றால் பனியன் கம்பெனிகள் தான் நினைவிற்கு வரும். இங்கு ஆடைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன சாயங்கள் கழிவு நீராக மாறி மண்ணிலும், நீர் நிலைகளிலும் பாதிக்கப்படுவதால், இன்று திருப்பூர் முற்றிலும் மாசடைந்துவிட்டது. மேலும் திருப்பூர் வழியாக ஓடும் நொய்யல் ஆறு சென்னிமலை இருக்கிற ஒரத்துப்பாளையம் அணையில் வந்து சேரும். அந்த அணையை உலகின் முதல் அமில அணைன்னு குறிப்பிடுவாங்க. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இந்த அணையில் இருந்து தான் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பாங்க. ஆனா இப்போ அதே விவசாயிங்க தான் அந்த அணைய திறக்காதீங்கன்னு போராட்டம் பண்றாங்க. அந்தளவிற்கு அந்த தண்ணீர் மாசடைந்திருக்கு. அதை மாற்றி அமைக்க விரும்பினேன். ஒரு வருட ஆய்விற்கு பிறகு எப்படி பழங்களின் தோல்கள், தாவரங்கள், பூக்களில் இருந்து சாயங்களை தயார் செய்யலாம்னு தெரிந்து கொண்டேன். அதாவது மாதுளை பழத் தோல், வெங்காயத் தோல், சங்குப்பூ… இப்படி காய்கறி, பழம் மற்றும் பூக்களில் இருந்து சாயம் எடுக்க முடியும். குப்பைக்கு போகும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றலாமே! எனக்கு இந்த ஐடியா என் சமையல் அறையில் இருந்த மஞ்சளைப் பார்த்து தான் உருவானது. மஞ்சள் கட்டையை வெயிலில் காயவைத்தால் அதன் நிறம் மாறும். அதேபோல் மஞ்சளை சோப்பு தண்ணிருடன் கலந்தால் அது சிவப்பாக மாறும். இதைக் கொண்டு தான் நான் சாயங்களை உருவாக்கினேன். தற்போது 7 வண்ணங்களில் இயற்கையான முறையில் சாயங்களை உருவாக்கியுள்ளேன். ரசாயனங்கள் அறிமுகமாகும் முன் நம் முன்னோர்கள் இயற்கை சாயங்களை தான் பயன்படுத்தி வந்தாங்க. அதோட குறிப்புகளையும் எழுதி வச்சிருக்காங்க. மஞ்சள், அவுரி, கடுக்காய், மாதுளை ஓடு, அனாட்டோ காய், கரிசலாங்கண்ணி போன்றவற்றிலிருந்து மஞ்சள், நீலம், சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை போன்ற நேரடியான வண்ணங்களை உருவாக்கி இருக்கேன். மேலும் இந்த ஒவ்ெவாரு வண்ணத்தை மற்ற வண்ணத்தோடு இணைத்தால் வேறு வண்ணமாக மாறும். அதைக் கொண்டும் பல வண்ணங்களை உருவாக்கலாம். இந்த சாயங்கள் சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாது. காரணம் வெங்காயம் ஆன்டிபயாடிக் தன்மைக் கொண்டது. அதில் உருவாகும் சாயத்தில் தயாரிக்கப்படும் உடையினை அணியும் போது அத சருமத்தை பாதுகாக்கும். என்னதான் நம் முன்னோர்கள் இயற்கை முறையில் சாயங்களைப் பயன்படுத்தி வந்தாலும் அதன் தயாரிப்பு முறை அதிக நேர விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், ரசாயன சாயங்களை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை சாயங்களை உற்பத்தி செய்ய இயந்திரங்கள் இருப்பதால், வேலையும் சீக்கிரமாகவும், நிறைய சாயங்களையும் உற்பத்தி செய்யலாம்’’ என்றார் கிளாடிஸ். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஆடை விற்பனை துறையில் ஈடுபட்டதை பற்றி விவரித்தார்.‘‘இயற்கை சாயங்களை உருவாக்கிய பிறகு அதைக் கொண்டு ஆடைகளையும் தயாரித்து ஆன்லைனில் தான் முதலில் விற்பனை செய்தோம். முதலில் பெண்களின் உள்ளாடைகளில் தான் இயற்கை சாயங்களை கொண்டு ஆடைகளை உருவாக்கினோம். உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகள் மிகவும் வசதியாக இருக்க வேண்டும்ன்னு பெண்கள் விரும்புவாங்க. ஆனால் நாங்க விற்பனைக்கு கொடுத்த போது முதலில் தயங்கியபடி தான் வாங்கினாங்க. அதை பயன்படுத்தி பார்த்தவர்கள் இப்போது எங்களிடம் மட்டும் தான் உள்ளாடைகளை வாங்குகிறார்கள். நாங்க பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்யல. ஒருவர் மூலம் மற்றவர் என வாய்வார்த்தையாக தான் எங்களைப்பற்றி கேள்விப்பட்டு வாங்க வராங்க. நாம பூமியை அதன் அழிவுப் பாதைக்கு கொண்டு போயிட்டு இருக்கோம். அதை உணர்ந்து இயற்கையோடு இணைந்து வாழ கத்துக்கணும்’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜப்பானிய மூளையழற்சி!! (மருத்துவம்)
Next post மல்லிகையே… மல்லிகையே! (மகளிர் பக்கம்)