குழந்தையின் திறனை எவ்வாறு கண்டறிந்து வளர்ப்பது? (மருத்துவம்)
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறனோடுதான் இம்மண்ணில் அடியெடுத்து வைக்கிறது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் தங்களின் ஆர்வத்தினை பழக்கவழக்கங்கள் மூலம் காட்டத் தொடங்குகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் திறன்களை அறிந்து உணர்ந்து கொள்வதை நல்லதொரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு குழந்தைகளின் திறமையை வளர்க்கவும் எளிமைப்படுத்தவும் முன்வர வேண்டும்.
*குழந்தைகளின் ஆர்வத்தை எவ்வாறு கண்டறிவது?
குழந்தைகள் பல்வேறு திறன்களை வைத்திருப்பார்கள். விளையாடுவது, ஓவியம் வரைவது, பாட்டு பாடுவது, நடனமாடுவது, புத்தகம் வாசிப்பது என அவர்கள் நாள் முழுவதும் செய்ய விரும்பும் பல திறன்கள் இருந்தாலும் அவற்றில், மிகவும் ஆர்வமுள்ள ஒரு விஷயம் மட்டும் தனித்து தெரியும். அதை நாம் அவர்களை உன்னிப்பாக கவனிக்கும் போது நமக்கே விளங்கும். அத்தகைய திறனை நாம் கண்டறிந்தவுடன் அதனை மேலும் அவர்களுக்கு அளிப்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதற்கு பெற்றோர்களும் சில
விஷயங்களை அவர்களிடம் கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
*உங்கள் பிள்ளை வீட்டில் அதிக நேரம் செலவிடுவதை ஒரு பிரச்சனையாக கருதக்கூடாது. உதாரணமாக, உங்கள் பிள்ளை காகிதம், தரை மற்றும் சுவர்களில் வரைய விரும்பினால், அவர்கள் வடிவமைப்பு அல்லது கட்டிடக்கலை போன்ற படைப்புத் துறையில் ஆர்வமாக இருக்கலாம்.
*தொடர்ந்து வாசிக்க விரும்புகிறார்கள் எனில், இலக்கியம் அல்லது எழுத்து திறனில் ஆர்வம் இருக்கலாம்.
*தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவுகளிடையே தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தினால் வருங்காலத்தில் மேற்பார்வையராகும் திறன் உள்ளதென அறியலாம்.
*ஒரு சூழ்நிலையை தாங்களாகவே கையாளத் தெரிந்த குழந்தைகள், ஊடகம், தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல், விற்பனை, பத்திரிகை அல்லது மேலாண்மை ஆகியவற்றில் நன்றாகச் செயல்படுவார்கள் என்று அர்த்தம்.
*குழந்தைகளை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது…
பள்ளியில் படிக்கும் பாடங்களில் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு கணிதம், சிலருக்கு அறிவியல், ஒரு சில குழந்தைகளுக்கு ஆங்கிலம் பிடிக்கும். தங்களுக்கு விருப்பமான பாடங்களை மட்டும் கூர்ந்து படிப்பார்கள். உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்கள் பிள்ளையின் மதிப்பெண்களை பாருங்கள். குறிப்பிட்ட பாடத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தை அல்லது வெறுப்பைப் பற்றி அந்த மதிப்பெண்களே நமக்கு நிறைய விளக்கங்கள் அளிக்கும்.
மேலும் அவர்களின் பொழுதுபோக்குகளை கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் திறன்கள் அவர்களின் பொழுது போக்குகளிடமிருந்துதான் துவங்குகிறது.பாடங்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து திணிப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான குடும்பச்சூழல் அவர்களின் திறனை முழுமையாக வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தொடர அவர்கள் பெற்றோரிடமிருந்து எவ்வளவு உத்வேகம் பெறுகிறார்களோ, அவ்வளவு உந்துதலுடனும் நம்பிக்கையுடனும் தங்கள் திறன்களை உணர்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான குழந்தைகள் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவே முதன்மையாகக் கொண்டும் எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ள முடியும்.
உங்கள் பிள்ளைகள் எந்த வகையான விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து அதில் சிறந்து விளங்கத் தேவையான தொழில்முறை வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்கத் தயங்கக்கூடாது. ஆனால், இன்றைய பெற்றோர்களின் கவலை தங்களின் குழந்தைகள் அதிகளவில் அலைபேசியில் நேரத்தைக் கடத்துகிறார்கள் என்பதே ஆகும். அலைபேசியை தவிர்க்க முடியாத இச்சூழலில் அதனை வைத்தே அவர்களின் திறனை வளர்க்கும் பயிற்சியை தர முடியும். ஒரு பெற்றோராக நம் நட்பையும், ஆதரவையும், வழிகாட்டுதலையும் உரிய முறையில் வழங்குகிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் நிச்சயமாக குழந்தைகளின் திறனை நம்மால் வெளிக்கொணர முடியும்.