வருமானம் + ஆரோக்கியம் = க்ரோசெட்டிங் கலை! (மகளிர் பக்கம்)
பாரதி ப்ரியா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் இவர், பி.எஸ்சி விலங்கியல் படித்து பி.எட் படிப்பையும் முடித்துள்ளார். ஆறு மாதம் ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்யும் போது தொடர்ந்து க்ரோசெட் கலையில் ஈடுபட முடியாததால், இப்போது பள்ளியில் இருந்து ஒரு சின்ன ப்ரேக் எடுத்து முழு நேரமும் க்ரோசெட் பொம்மைகள், துணிகள், ஸ்கார்ஃப், கீ-செயின் போன்ற பல விதமான பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இவருடைய பிபா க்ரோசெட் (@bibha_crochet) பக்கம் தொடங்கி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், பாரதி நூறு பொம்மைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பாரதியின் தங்கை பெயர் அபி. தங்கை பெயரில் இருந்து ‘பி’யையும், தன்னுடைய பெயரில் இருந்து ‘பா’வையும் சேர்த்து பிபா க்ரோசெட் என்று தன்னுடைய புதிய பிஸினெஸ்க்கு பெயர் வைத்துள்ளார்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே நிறைய ஹாபிகள் உண்டு. பார்ப்பதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும், செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். அப்போது என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தார். அவருடைய வீடு முழுக்க இந்த க்ரோசெட் பொருட்களால் அலங்கரித்து இருப்பார். ஆரம்பத்தில் வெறும் சாதாரண நூலாக இருக்கும் பொருள் எப்படி இரண்டே நாட்களில் இவ்வளவு அழகான பொருளாக மாறியது என பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆனால் இது பற்றி அவரிடம் கேட்க எனக்குள் ஒரு தயக்கம் இருந்து வந்தது. ஒரு நாள் இதைக் கற்றுக் கொண்டே தீர வேண்டும் எனும் ஆர்வத்தில், என்னுடைய தயக்கத்தை உடைத்து அவரிடம் போய் எப்படி க்ரோசெட் செய்வது என்று கேட்டேன். அவர் தன்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் வைத்து எனக்கு க்ரோசெட் எப்படி செய்வது எனும் அடிப்படையை எனக்கு கற்றுக்கொடுத்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வந்து கோடை விடுமுறையில் க்ரோசெட் முறையில் வீட்டுக்கான மேட்களை உருவாக்கினேன். அடுத்த ஒரு வருடத்திற்கு நாங்கள் புது மேட் வாங்கவே இல்லை. நான் வீட்டில் தயாரித்ததே போதுமான அளவு இருந்தது. அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் பவுச், அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஸ்கார்ஃப் என்று செய்தேன். அடுத்து கல்லூரியில் சேர்ந்ததும் எப்போதாவதுதான் க்ரோசெட் செய்ய நேரம் கிடைத்தது.
பின், கோவிட் லாக்டவுன் வந்ததில் மீண்டும் க்ரோசெட் பக்கம் என் கவனம் திரும்பியது. யூடியூப் வீடியோஸ் பார்த்து நானே க்ரோசெட் பொம்மைகள் செய்ய கற்றுக்கொண்டேன். க்ரோசெட் கலையை பொறுத்தவரை ஒவ்வொரு டிசைனுக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும். நாம் அந்த பேட்டர்னை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதைக் கற்றுக்கொண்டால், ஒரு பொம்மையை பார்த்தே அது எப்படி செய்யலாம் என்பதைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும்’’ என்றவர் பொழுது போக்காக இருந்த க்ரோசெட் பிசினசாக மாறியது பற்றி தெரிவித்தார்.
‘‘நான் பி.எட் படிக்கும் போது எனக்கு ஒரு தோழி இருந்தார். அவருக்கு நான் செய்த ஒரு பொம்மையை பரிசாக கொடுத்த போது, இது ரொம்ப நல்லா இருக்கு. நான் இதை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன். நீ தொடர்ந்து இது போல அழகான பொருட்களை செய்து அதை விற்பனை செய் என்றார். இது போன்ற க்ரோசெட் பொம்மைகள் எந்த கடைகளிலும் கிடைக்காது. இதை நாம் நேரில் பார்த்திருக்க கூட மாட்டோம். என்னைப் போல க்ரோசெட் கலைஞர்கள் மிகவும் குறைவுதான். ஒவ்வொரு நூல் பின்னலையும் கைகளிலேயே செய்வதால், பெரிய அளவில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்வது கொஞ்சம் கடினம் தான்.
அதனால் மிகவும் குறைந்தபட்ச க்ரோசெட் பொருட்கள், கஸ்டமைஸ்ட் க்ரோசெட் பொருட்கள் தான் கிடைக்கும். என் நண்பர் கொடுத்த ஊக்கத்தின் மூலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக என் பொம்மைகளை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினேன். அதை அங்கு விற்பனை செய்யவும் ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக க்ரோசெட் பொம்மைகளை நிறைய வாங்க ஆரம்பித்தனர்.
பிறந்த குழந்தைகளுக்கு முதல் பொம்மையாக பலரும் க்ரோசெட் பொம்மைகளை தான் வாங்கிக் கொடுத்தனர். இதில் எந்த கெமிக்கலும், ப்ளாஸ்டிக்கும் கலந்திருக்காது. சின்ன குழந்தைகளிடம் பொம்மையை கொடுத்ததும் அவர்கள் முதலில் அதை வாயில்தான் வைப்பார்கள். அதனால் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு ப்ளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலக்காத பொம்மைகளையும் பொருட்களையும் கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் என்னுடைய மிக முக்கியமான வாடிக்கையாளர்களே குழந்தைகள் தான்.
இப்போது குழந்தையுடைய முதல் தேவை பொம்மை என்பதை பெற்றோர்கள் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறார்கள். அந்த பொம்மை குழந்தையுடன் எப்போதுமே இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் நீடித்து உழைக்க கூடிய அதே நேரம் குழந்தைக்கு பாதுகாப்பான பொம்மை வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நானும் அவர்களுடைய நம்பிக்கைக்காக ஒவ்வொரு முறை யார்ன் என்று சொல்லப்படும் நூலை வாங்கும் போது, அது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தானா என்பதை நீரில் ஊறவைத்து பரிசோதித்த பின்பு தான் பொம்மைகள் செய்யவே ஆரம்பிப்பேன். எந்த அளவில் வேண்டுமானாலும் செய்து கொடுக்க முடியும், கீ செயின் முதல் 14 அங்குலம் வரையிலான பொம்மைகள் கூட செய்யலாம். ரெப்ளிகா பொம்மைகளும் இப்போது வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகிறார்கள். ஒருவரின் புகைப்படத்தை அனுப்பினால், அவர்கள் அணிந்திருக்கும் உடையை அடிப்படையாக வைத்து அந்த நபரைப் போன்ற பொம்மையை நான் செய்து கொடுத்து விடுவேன்.
லேப்டாப் கவர்ஸ், புக் மார்க், ஹேண்ட் பேக், ஸ்வெட்டர்ஸ், குழந்தைகளுக்கான போர்வைகள் என பல வகையான பரிசுப் பொருட்கள், பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள் என செய்து வருகிறேன். புதிதாக நான் க்ரோசெட் கம்மல்களும், க்ரோசெட் மலர்கொத்தும் செய்து வருகிறேன். க்ரோசெட் மலர்கொத்துகள் என்றென்றும் நீடித்து இருக்கும். அதே போல வெல்வெட் நூல்களைப் பயன்படுத்தி க்ரோசெட் ப்ளஷீஸ்(Plushies) எனப்படும் மிகவும் மிருதுவான பொம்மைகளையும் செய்து வருகிறேன். அது அழுக்காகிவிட்டாலும், அதை தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். க்ரோசெட் பொருட்கள் பொம்மைகளின் சிறப்பே அது பல காலம் நீடித்து இருக்கும்.
உங்கள் க்ரோசெட் பொம்மை அல்லது ஸ்வெட்டர் அழுக்காகிவிட்டால், வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் டிடர்ஜென்ட் சேர்த்து அழுக்கு இருக்கும் இடத்தில் மட்டும் கை விரல்கள் கொண்டே லேசாக அழுத்தி சுத்தம் செய்தால், அழுக்கு உடனடியாக நீங்கிவிடும். அடுத்து இந்த க்ரோசெட் பொருட்களை சுத்தம் செய்தபின், அதை காயவைக்க எங்கேயும் தொங்கவிடக்கூடாது. அதை தட்டையான மேற்பரப்பில் வைத்தாலே போதும்’’ என்றவர் இப்போது ஆன்லைனில் க்ரோசெட் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
“என்னிடம் பல நிறுவனங்கள் நூறு பொம்மைகள்- ஐநூறு பொம்மைகள் செய்துக் கொடுங்கள் என கேட்கிறார்கள். ஆனால் இந்த பொம்மைகள் எல்லாமே கையாலே செய்ய வேண்டும் என்பதால், நான் ஒருத்தி மட்டும் செய்ய முடியாது. அதே சமயம், இங்கு க்ரோசெட் கலைஞர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். அதனால் வேலைக்குச் செல்ல வேண்டும், புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நானே க்ரோசெட் பயிற்சி கொடுத்து அவர்களை ஒரு குழுவாக உருவாக்க முடிவு செய்துள்ளேன். க்ரோசெட் பொம்மைகளின் முதலீடு என்று பார்த்தால் அது இந்த யார்ன் எனப்படும் நூல் தான். தரமான நூலை வாங்க வேண்டும். அப்போது தான் இந்த பொம்மைகள் மிருதுவாகவும், திடமாகவும் இருக்கும்.
க்ரோசெட் தொழில் நல்ல தொழிலாக இருப்பதை தாண்டி உங்கள் மனதை அமைதியாக நிம்மதியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. க்ரோசெட்டிங்கில் ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் இது மன அழுத்தம் தரும் ஹார்மோன்களை குறைத்து மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. கவலை, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் தினமும் கொஞ்ச நேரம் க்ரோசெட்டிங் செய்தால் அவர்களின் மனது நிம்மதி அடையும் என பல ஆராய்ச்சிகள் கூறுகிறது.
அதனால் வெளிநாடுகளில் ஆண்,பெண் பேதமின்றி பலரும் க்ரோசெட்டிங் செய்கிறார்கள்” என்கிறார் பாரதிஇது போன்ற க்ரோசெட் பொம்மைகளை ஜப்பானியர்கள் அமிகுருமி (Amigurumi) என்று அழைப்பார்கள். உலக அளவில் க்ரோசெட் முறையில் போர்வை, ஸ்வெட்டர் மட்டுமே கலைஞர்கள் செய்து வந்தனர். ஆனால் ஜப்பானியர்கள் தான் முதல் முறையாக க்ரோசெட்டில் பொம்மைகள் செய்து இந்தக்கலையை வேறொரு தளத்திற்கு முன்னெடுத்து சென்றார்கள்.
அதை மையமாக வைத்து இப்போது உலகளவில் பல தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. பாரதியின் பிபா க்ரோசெட் பொம்மைகள் 500 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இவருடைய கீ செயின் 120 ரூபாயில் இருந்தே கிடைக்கும். குழந்தைகளுக்கான போட்டோ ஷூட் பொருட்கள் நூறு ரூபாயிலேயே கூட கிடைக்கிறது.