ஆடைகளை வண்ணமயமாக்கும் குறும்பர் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பு பெற்றவை. அவற்றில் தனித்து தெரிவது குறும்பர் இன மக்களின் ஓவியங்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் இன்றும் பாறைகளில் இந்த ஓவியங்களை காணமுடியும். ஆனால் அதனை வரைவதற்கும் அந்த ஓவியங்களைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்கு சொல்லி கொடுக்க ஆட்கள் இல்லாத காரணத்தால் இந்த ஓவியங்கள் அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை நாங்கள் அழிய விடமாட்டோம் என தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறும்பர் இன மக்களின் ஓவியங்களை உடைகளிலும், பைகளிலும் வரைந்து விற்பனை செய்து வருகின்றனர் புதுக்காடு பகுதியினை சேர்ந்த பழங்குடி பெண்கள். அந்த தொழிலினை செய்து வரும் சுமித்ரா அது குறித்து பேசினார்.
‘‘குன்னூர் போகும் வழியில் இருக்கும் பர்லியாறு புதுக்காடு பகுதிதான் எங்களோட ஊர். இங்கு மொத்தம் 6 கிராமங்கள் உள்ளன. அதில் இருளர் மற்றும் குறும்பர் இன மக்களான நாங்களும் வசித்து வருகிறோம். முதலில் காட்டை நம்பி தான் எங்களின் வாழ்வாதாரம் இருந்து வந்தது. இன்றும் எங்களுக்கான விவசாய நிலங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் விவசாயம் தான் செய்ய முடியல. இங்கு மலையடிவாரத்தில் அதிகமான வீடுகள் கட்டப்பட்டதால் விலங்குகளின் பாதைகள் மறிக்கப்பட்டதால் அவை எல்லாம் விவசாய நிலத்தினை தங்களின் வழித்தடமாக மாற்றிக் கொண்டது. இதனால எங்களால் முன்பு போல் விவசாய வேலைகளில் ஈடுபட முடியல.
எங்களின் வாழ்வாதாரத்திற்காக டீ எஸ்டேட் மற்றும் சில கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கிறோம். ஆண்கள் பெரும்பாலும் வெளி வேலைகளுக்கு போயிருவாங்க. ஊரில் இருக்கும் பெண்கள் சொற்ப ஊதியத்திற்கு கிடைக்கும் வேலைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் எங்க பகுதி மக்களை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் எங்க கிராமத்திற்கு வந்தாங்க.
கூலி வேலைகளுக்கு செல்லும் எங்களுக்கு சொந்தமாக சுய தொழில் ஆரம்பிக்க உதவினாங்க. ஆறு மாத இலவச பயிற்சியாக தையல் வேலை, கைப்பைகள், பர்ஸ், எம்ப்ராய்டரிங் போன்றவற்றிக்கு பயிற்சி அளிச்சாங்க. மேலும் அதை தயாரிக்கவும் சொல்லிக் கொடுத்தாங்க. இது முழுக்க முழுக்க பெண்களுக்கானது என்பதால் ஆறு கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டோம். காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கும். அதற்கு பிறகு நாங்க காட்டு வேலைக்கும் எஸ்டேட் வேலைக்கும் சென்று விடுவோம். குடும்ப சூழ்நிலை காரணமாக சில பெண்களால் பயிற்சியை தொடர முடியவில்லை.
இப்போது வரை அந்த பயிற்சியை முழுமையாக 12 பேர் தான் முடிச்சிருக்கோம். பயிற்சியை முடித்த கையோடு நாங்கள் சொந்தமாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தயாரானோம். எங்களுக்கு மார்க்கெட்டிங் குறித்து அதிகம் தெரியாது.அதனால் எங்களுக்கு பயிற்சியளித்த தனியார் தொண்டு நிறுவனமே எங்களுடைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து கொடுப்பதாக உறுதியளித்தது. எங்களின் பொருட்கள் அனைத்தும் தொண்டு நிறுவனம் மூலம் நீலகிரி மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் அதிலும் சில பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளனர்.
‘‘நாங்க சாதாரண பை மற்றும் பர்ஸ்கள் தான் தைத்து கொடுத்து வந்தோம். அதே போல் பல பொருட்கள் மார்க்கெட்டில் கிடைப்பதால், எங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. சரி ஏதாவது புதுமையை புகுத்தினால் தான் நாம் வியாபாரம் செய்ய முடியும் என்கிற நிலை வந்தது. அப்படி சிந்திக்கும் போது வந்த ஐடியா தான் எங்களுடைய குறும்பர் இன மக்களின் ஓவியங்கள். கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் பரவலாக வசித்து வரும் குறும்பர் இன மக்களுக்கு என தனிப்பட்ட கலாச்சாரம் உள்ளது. அதேபோல் எங்களுக்கென ஒரு ஓவிய முறைகளையும் எங்க முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஓவியங்கள் மூலம் எங்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பண்பாடு, திருமண விழாக்கள், விவசாய வேலைகள், நாங்க வசிக்கும் வீடு என எங்களின் வாழ்க்கையை ஓவியங்களாக வரைந்துள்ளனர். மற்ற ஓவியங்களை விட எங்களுடைய ஓவியங்கள் தனித்து தெரிவதற்கு காரணம் அதற்கு நாங்கள் கொடுக்கும் வண்ணங்கள். இயற்கையாக கிடைக்கும் தாவரங்களின் சாறுகளிலிருந்து வண்ணங்களை உருவாக்கி அதைக் கொண்டு தான் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினர் எங்க முன்னோர்கள்.
பெரும்பாலான ஓவியங்கள் பாறைகளில் வரையப்பட்டு இருந்தாலும், இயற்கை சாயம் என்பதால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது நிலைத்து நிற்கும் தன்மையுடையது. இதை பின்பற்றி எங்கள் இன மக்கள் ஓவியங்களை தொடர்ந்து வரைந்து வந்தாலும் தற்போது இந்த வகையான ஒவியங்களின் மீது யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், அழிந்து வரும் நிலைக்கு சென்றுள்ளது. எங்க இன ஓவியங்களை வரைய இந்த தலைமுறையில் மூன்று பேர் மட்டுமே இருக்கின்றனர். அதனால் இந்த ஓவியங்களை அழியாமல் பாதுகாக்கவும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல விரும்பினோம். தொண்டு நிறுவனத்தினர் ஆலோசனைப்படி நாங்கள் தயாரிக்கும் பொருட்களில் அந்த ஓவியங்களை வரைய திட்டமிட்டோம்.
எங்களுக்கு வரைய தெரியாது என்பதால், அதை குன்னூர் பகுதியில் உள்ள ஓவியர்கள் மூலமாக கற்றுக் கொண்டு நாங்கள் தயாரிக்கும் கைப்பை, உடைகளில் வரைய ஆரம்பித்தோம். தற்போது 12 பெண்கள் இந்த தொழிலை செய்து வருகிறோம். அதில் ஒரு சிலர் தையல் வேலைப்பாடும், நான்கு பேர் ஓவியங்கள் வரைவது, மற்றவர்கள் எம்பிராய்டரி வேலைப்பாடு என எங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளோம்.
குறும்பர் இன மக்களின் ஓவியங்களை சரியான பயிற்சிகள் இல்லாமல் வரைய முடியாது. மக்கள் இந்த ஓவியங்களை அன்றாடம் உபயோகப்படுத்தும் கைப்பைகள், பர்ஸ்கள், ஆடைகளில் காணும் போது ஆச்சரியமடைகிறார்கள். இது தான் எங்க தொழிலுக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த மாதிரியான ஓவியங்களை வேறு யாரும் வரைவதில்லை என்பதால் எங்களுக்கு தொழில் போட்டியும் கிடையாது. நாங்கள் இந்த மாதிரியான உடைகளையும், பைகளையும் செய்வதற்கான மூலப் பொருட்களை தனியார் தொண்டு நிறுவனமே வழங்குகிறது.
அதற்கான தொகையினை விற்பனை செய்து கொடுத்தால் போதும். கலைநயமிக்க பொருட்கள் தயாரித்தாலும் அதை விற்பனை செய்ய கடைகள் அதிகம் கிடைப்பதில்லை. எங்க பொருட்களை அரசே வாங்கிக் கொண்டால் இந்த தொழிலை மேலும் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும். நாங்க தொழில் செய்ய ஆரம்பிச்சு கற்றுக் கொண்டது ஒன்று தான். நாம் உருவாக்கும் எந்த பொருளையும் கலைநயமிக்கதாக மாற்றினாலே அதற்கான சந்தை அந்த பொருளே உருவாக்கிக்கொள்ளும்’’ என்றார் சுமித்ரா.