இந்த வேலைதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது! (மகளிர் பக்கம்)
இசைக்கருவிக்காக மாட்டுத் தோலை பதப்படுத்தும் கீதா
‘‘இந்த தொழில்தான் துவண்டுபோன என்னோட வாழ்க்கைக்கு உத்வேகமா இருந்தது. இன்னிக்கு வரைக்கும் நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணமும் இந்த தொழில்தான்’’ என்று சொல்லியபடி மாட்டுத் தோலினை சுத்தம் செய்கிறார் கீதா சங்கர் நாராயணன். இசைக்கருவிகளின் தயாரிப்பிற்கு தேவையான மாட்டுத் தோலை பக்குவப்படுத்தும் தொழிலில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் கேரளாவைச் சேர்ந்த கீதா சங்கர் நாராயணன்.
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள பல்லேஷேன கிராமம் தான் இவரின் சொந்த ஊர். அப்பா, கோயம்புத்துாரில், மிருதங்கம் தயாரிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தார். அம்மாவுக்கு, வயலில் வேலை. சிறு வயதில், அப்பா, அம்மாவுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்தவர், திருமணத்திற்கு பிறகு
பெருவெம்பா கிராமத்தில் தன் கணவருடன் வசித்து வருகிறார் கீதா.
கீதாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வீடுகளின் இருபுறமும் மிருதங்கம் தயார் செய்து தரப்படும் என எழுதப்பட்ட பலகைகளை பார்க்க முடிகிறது. காரணம் பெருவெம்பா கிராமத்து மக்களின் பிரதான தொழிலே மிருதங்கம் தயாரிப்பதுதான் என்றாலும் இவர்கள் பிற தோல் இசைக்கருவிகளும் தயார் செய்து வருகின்றனர். இந்த வீடுகளையெல்லாம் கடந்து சென்றால் சாலையின் நேராக இருக்கும் அந்த வீட்டில் நுழைவாசலில் பிரமாண்டமான மாட்டுத் தோல்கள் காய வைக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்து காய்ந்த தோல்கள் மட்டும் தனியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. இவரின் குடும்பம் பாரம்பரியமாக மிருதங்கம் தயாரித்து வருவதால், சிறு வயது முதலே தோலில் இசைக் கருவிகள் செய்வது குறித்து தெரிந்து வைத்திருக்கிறார் கீதா. மாட்டுத் தோல் மட்டுமில்லாமல், எருமைத் தோல், ஆட்டுத்தோல் போன்றவற்றையும் சுத்தம் செய்து காய வைத்து மிருதங்கம் மற்றும் தோல் இசைக்கருவிகள் தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
‘‘ஒரு பெண்ணாக நான் இந்த வேலையை செய்வதுதான் எனக்கு பல வாடிக்கையாளர்களை உருவாக்கிக்கொடுத்துள்ளது. ஆண்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த வேலையில் ஒரு பெண் இதில் ஈடுபட்டு செய்வதுதான் பலர் என்னிடம் வந்து தோல்களை வாங்கிச் செல்கிறார்கள்’’ என மலையாளம் கலந்த தமிழில் பேச ஆரம்பித்தார் கீதா.
‘‘என்னோட அப்பா தோல் இசைக் கருவிகள் குறிப்பாக மிருதங்கம் தயார் பண்ணி கொடுக்குற வேலைதான் செஞ்சுட்டு இருந்தார். மாட்டுத் தோலை பதனிடும் தொழில் செய்து வந்த அப்பாவுக்கு, அண்ணன் தான் உதவிக்கு போவார். ஒரு முறை அப்பாவுக்கு, உடம்பு சரியில்லாமல் இருந்தது, அப்ப அண்ணன் ஊரில் இல்லாததால், உதவிக்கு அவரும் இல்லை. என்னைத்தான் அழைத்துக் கொண்டு சென்றார். அப்ப நான் ரொம்ப சின்ன பொண்ணு.
மாட்டுத் தோலை எப்படி இழுத்து பிடிக்க வேண்டும், எங்க ஆணி அடிக்கணும் என எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தபடி செய்தேன். தோல் இசைக்கருவிகளுக்கான மாட்டுத் தோலை தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன். எட்டாவது படிக்கும் வயதிலேயே இதை எல்லாம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு படிப்பு மேல் பெரிய அளவில் ஈடுபாடு ஏற்படாத காரணத்தால் எட்டாம் வகுப்பு வரை படிப்பை நிறுத்திவிட்டு, அம்மாவுடன் வயல் வேலைக்கு போனேன்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் அப்பாவுக்கு தோல் கருவிகள் செய்ய உதவி செய்தேன். அதனால அப்பவே எனக்கு எப்படி தோல் கருவிகள் தயார் செய்றதுன்னு தெரியும். தோல் கருவிகள் செய்ய முதலில் தோலை சுத்தம் செய்து பதப்படுத்தணும். அதை என் அம்மாவிடம் கற்றுக் கொண்டேன். அவங்க தோலை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
இப்படியாக இசைக்கருவி செய்ய ஒரு தோலை எவ்வாறு முழுமையாக பக்குவப்படுத்த வேண்டும் என்பதை என் பெற்றோர்கள்தான் முழுமையாக சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்றவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இதை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளார். ‘அம்மா வீட்டில் இருந்தவரை அப்பாவிற்கு உதவியாகதான் நான் இதை செய்து வந்தேன். அப்போது இதுதான் என்னுடைய வாழ்வாதாரமாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் என் கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அவரால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அதற்கு அவரின் உடம்பும் ஒத்துழைக்கவில்லை. சராசரி குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனால் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். படிப்பும் பெரியதாக இல்லை என்பதால், சின்னச் சின்ன வேலைகள்தான் கிடைத்தது. அதில் வந்த வருமானத்தில் வீட்டுச் செலவு மற்றும் என் கணவருக்கான மருத்துவ செலவு என பார்க்க ரொம்பவே கடினமாக இருந்தது.
அந்த சமயத்தில்தான் கையில் ஒரு தொழில் இருக்கும் போது நாம் ஏன் சின்னச் சின்ன வேலைகளை செய்ய வேண்டும்னு எண்ணம் ஏற்பட்டது. வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். கணவரையும் உடன் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என தோன்றியது. ஆனால் நான் தோலை வாங்கி சுத்தம் செய்து காய வைத்து கொடுத்தால் யார் வாங்குவார்கள் என்ற கேள்விதான் என் முன் இருந்தது. அதற்காக சில தோல் இசைக்கருவிகள் தயாரிப்பவர்களை பார்த்து பேசினேன். தோலை அவர்கள் கொடுத்தால் அதை இசைக் கருவி செய்வதற்கேற்ப பக்குவப்படுத்தி கொடுக்கிறேன் என கூறினேன்.
அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். அதற்கான ஒரு தொகையும் கிடைக்கும், மேலும் அந்த நேரத்தில் எனக்கு பணம் ஒரு முக்கிய தேவையாக இருந்தது. அதே சமயம் இதையே ஒரு தொழிலாக தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. நான் செய்யும் வேலைக்கு ஒரு நல்ல தொகை கூலியாக கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் அப்போது இருந்தேன். அதனால் நானும் என் கணவரும் சேர்ந்து இசைக்கருவிகளுக்கு தோலை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட
ஆரம்பித்தோம்.
முதலில் வீட்டு வாசலில் பெரிய பெரிய தோல்களை காய வைக்க எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில்தான் காய வைப்பேன். யாருக்குமே நான் இந்த வேலை செய்கிறேன் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டேன். யாராவது அழைத்தால் வீட்டின் முன்னாடி சும்மா உட்கார்ந்திருப்பது போல வந்து உட்கார்ந்து கொள்வேன்.
அதே போல தோலின் நாற்றம் மற்ற வீட்டாருக்கும் தெரியக் கூடாது என பயந்து கொண்டுதான் வேலை செய்வேன். நாள் போக போக இந்தத் தொழிலால்தான் என் குடும்பம் வாழ்கிறது என்பதை புரிந்துகொண்டேன். கூச்சத்தையும் பயத்தையும் நீக்கி இதுவும் ஒரு கவுரவமான தொழில்தான் என்று என் தொழில் மீதான இருந்த தாழ்வு மனப்பான்மையை மாற்றிக் கொண்டேன். எல்லோருக்கும் தெரிகிற மாதிரியே என்னுடைய வேலையை செய்ய ஆரம்பித்தேன் என்றவர் தோல் இசைக்
கருவிகளை தயாரிப்பதற்கான தோலை எப்படி தயார் செய்கிறார் என விவரிக்கிறார்.
‘‘பறை, மத்தளம், மிருதங்கம், செண்டை என பல விதமான தோல் இசைக் கருவிகள் செய்வதற்கு பெரும்பாலும் மாட்டுத் தோல் தான் தேவைப்படும். மாடு, ஆடு, எருமை போன்றவற்றை இறைச்சிக்காக அறுக்கும் இடத்திலிருந்து தோலை வாங்கி வருவோம். அதை பதப்படுத்த ஆறு மணி நேரமாகும். வெயிலில் மாட்டுத் தோலுடன் நானும் காய்ந்தால் தான், ஒரு தோலுக்கு 400 ரூபாய் கிடைக்கும். இதில் தோலை சுத்தம் செய்யும் பணிதான் முக்கியமான வேலை.
அதில் தோலில் ஒட்டி இருக்கிற சதைகளை கத்தியினால் சீவி எடுக்கணும். அதில் தோல் கிழியாமல் பார்த்துக்கொள்ளணும். இது தான் ரொம்பவே முக்கியமான வேலை. கத்தி லேசாக தோலை கிழித்தாலோ அல்லது தோல் வெட்டுப்பட்டாலோ அந்த தோலை பயன்படுத்த முடியாது. நல்ல பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இதை செய்ய முடியும்.
அதன் பிறகு தோலை நன்றாக கழுவி தோலை இழுத்து பிடித்து தோலின் நீளம் மற்றும் அகலத்திற்கேற்ப தோலின் நுனிகளில் ஆணிகளை சுற்றிலும் அடித்து, நன்கு வெயிலில் காய வைத்து பதப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இசைக் கருவிக்கும் ஒவ்வொரு விதமாக, தோலை இழுத்து கட்ட வேண்டும். அப்போதுதான் சத்தம் வித்தியாசமாக வரும். அதுபோல, ஒவ்வொரு இசைக்கருவிக்கும், வெவ்வேறு விலங்குகளின் தோல் தேவைப்படும். செண்டைக்கு காளை மாட்டுத் தோல், மத்தளத்திற்கு பெண் எருமைத் தோல்தான் பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலும் என்னிடம் மிருதங்கத்திற்காகதான் தோல் வாங்க வருவார்கள். ஒரு மிருதங்கம் செய்வதற்கு மட்டும் மாட்டுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத் தோல் என மூன்று தோல்களும் தேவைப்படுகிறது. அதற்கேற்றார் போல் தான் அனைத்து விலங்குகளின் தோல்களை தயார் செய்து வைத்திருப்பேன். 2001ல் தோல் பதப்படுத்தும் வேலை செய்ய ஆரம்பித்து தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறேன். என்னுடைய கணவரும் என்னுடன் சேர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நாற்றம் எடுக்கும் இந்த தொழிலை ஆண்கள் செய்தாலே மூக்கை பொத்தியபடிதான் செய்வார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த தொழில்தான் எங்களை வாழ வைத்து வருகிறது. இந்த வருமானம்தான் என் குடும்பம் மட்டுமில்லாமல் என் மகன், மகளின் படிப்பிற்கும் ஆதாரமாக இருக்கிறது.