ஐஸ்வர்யா ராஜேஷ் ஃ பிட்னெஸ்! (மருத்துவம்)
‘தர்மதுரை’ படத்தில் கிராமத்து அன்புச்செல்வியாக, ‘காக்காமுட்டை’படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, இடையிடையே மாடர்ன் கதாபாத்திரங்கள் என படத்துக்குப்படம் தனித்துவம் காட்டி, தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது, ரன் பேபி ரன், ஃபர்ஹானா, இடம் பொருள் ஏவல், இந்தியன் 2, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை:
நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது, கொஞ்சம் குண்டாக இருந்தேன்.
ஆனால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். தமிழ் ரசிகர்களைப் பொருத்தவரை, ரொம்ப ஒல்லியாக இருந்தாலும் பிடிக்காது; ரொம்ப குண்டாகவும் இருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்களுக்குப் பிடிக்கும் என்பதையும் தெரிந்துகொண்டேன். எனவே, அன்றிலிருந்து இன்று வரை ஒரே சீரான உடல் எடையைப் பராமரித்து வருகிறேன். இருந்தாலும், அவ்வப்போது படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடிக்கிறேன். பின்னர், மீண்டும் என்னுடைய சராசரியான உடல் எடைக்கு வந்துவிடுவேன். அதற்கு உடற்பயிற்சியும் உணவுமுறையுமே எனக்கு பெரிதும் உதவுகிறது.
உடற்பயிற்சி : என்னைப் பொருத்தவரை உடற்பயிற்சி என்பது ஏதாவது ஒரு ஆக்டிவிட்டிதான். அதற்காக, தினமும் ஜிம்முக்குத்தான் போகவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள் ஜிம்முக்குப் போவேன். மீதி நாட்களில் டான்ஸ், நீச்சல், யோகா என ஏதாவது ஒன்றை செய்வேன். இதையெல்லாம்விட பெஸ்ட் விஷயம் வீட்டு வேலைகள் செய்வதுதான். எங்கள் வீட்டுக்கு வேலையாட்கள் வராவிட்டால், நானே எல்லா வேலைகளையும் செய்வேன். அதனால் உடலும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறது. சில நேரங்களில் ஷூட்டிங்கிற்காக கிராமங்களுக்குச் செல்லும்போது, அங்கே உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் இருக்காது. எனவே, நான் தங்கியிருக்கும் அறையிலேயே தரைப் பயிற்சிகள், நடைப்
பயிற்சி போன்றவற்றை செய்வேன்.
டயட்: உணவு பழக்கத்தைப் பொருத்தவரை, குளிர்பானங்கள் அருந்துவது, இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன். மற்றபடி எந்த டயட்டும் ஃபாலோ பண்ணுவது இல்லை. எல்லாமே சாப்பிடுவேன். வெஜிடேரியனைப் பொருத்தவரை, வீட்டில் என்ன காய்கறி செய்தாலும், அதோடு பருப்பு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. அசைவத்தைப் பொருத்தவரை எல்லாமே பிடிக்கும். ஆனால், மீன் வகைகள் ரொம்ப பிடிக்கும்.
வெளியூர்களில் ஷூட்டிங்கில் இருக்கும்போது மட்டும் அதிகமாக டயட்டை பின்பற்றுவேன். மற்றபடி எனது உணவுப் பழக்கம் என்றால், தினசரி நிறைய தண்ணீர் குடிப்பேன். பழங்கள் அதிகமாக சாப்பிடுவேன். பொதுவாக, ஒருநாளைக்கு தேவையான அளவு தண்ணீரும், பழங்களும் சாப்பிட்டாலே போதும். ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுபோன்று இரவு உணவை எப்போதுமே சீக்கிரமாகச் சாப்பிட்டுவிடுவேன். அதுபோல எவ்வளவுதான் பிடித்த உணவாக இருந்தாலும், அளவோடுதான் சாப்பிடுவேன்.
ப்யூட்டி: நான் எந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், அது என் உடல்வாகிற்கு பொருந்துமா என்பதை யோசித்துதான் தேர்ந்தெடுப்பேன். அழகுக்கான மேக்கப்பை அதிகமாக நம்பி இறங்கமாட்டேன். அதுபோல, முடிந்த அளவுக்கு மேக்கப் இல்லாமல் இருப்பதையே விரும்புவேன். நான் மாநிறம் என்பதால் நிறைய பேர் என்னை சிவப்பாக நிறத்தைக் கூட்டி காட்டும் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும்படி ஆலோசனை சொன்னார்கள். ஆனால், நான் இதுவரை, எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டது கிடையாது.
என் நிறம்தான் எனக்கு ப்ளஸ்ஸாக இருப்பதாக நினைக்கிறேன். உதாரணமாக, என் நிறத்தை வைத்துதான், ‘தர்மதுரை’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபோல, அந்தப் படத்தில் நடிக்கும்போது, எனக்கான மேக்கப் மஞ்சள் மட்டும்தான். தினமும் காலையில் மஞ்சள் போட்டுக் குளித்துவிட்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான். படத்தில் மேக்கப் மேனுக்கு வேலையே இல்லை. 15 நாட்கள் மஞ்சள் மட்டுமே பயன்படுத்தியதில், முகம் பளபளப்பாகி இருப்பதையும் உணர்ந்தேன். அதனால், என்னுடைய அழகு சாதனப் பொருட்கள் என்றால், அது மஞ்சள், தேங்காய் எண்ணெய், சிகைக்காய், கடலைப்பருப்பு என இயற்கையான அழகுப்பொருட்களே முக்கியம் இடம் பெற்றிருக்கும். என்னைப் பொருத்தவரை, மனது சந்தோஷமாக இருந்தாலே, முகமும், அகமும் அழகாக தெரியும்.