மனதை ஒருநிலைப்படுத்தும் ஆர்ட் கிளப்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

கல்வி அவசியம்தான். அதே சமயம் கல்வியுடன் ஏதாவது ஒரு கலையும் கற்றுக்கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது. அது பாட்டு, நடனம், ஓவியம், கைவினைப் பொருட்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம். இது போன்ற ஏதாவது ஒரு கலையினை கற்றுக் கொள்வதால், பொதுவாக ஒருவருக்கு பொறுமையும் திட்டமிடுதலும் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே. எந்தக் கலையும் ஒரு மனிதனை அற்புதமாக பண்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பெங்களூருவைச் சேர்ந்த யக்னலட்சுமி ஓவியத்தின் மூலம் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் திறனை பயிற்றுவித்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். பொறியியல் படிச்சிட்டு ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். என்னதான் கை நிறைய சம்பளம் கிடைச்சாலும் என்னவோ எனக்கு அதில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அதற்கு காரணம் சின்ன வயசில் இருந்தே எனக்கு ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பொதுவாக பெண் குழந்தைகள் சின்ன வயசில் டீச்சர் விளையாட்டு விளையாடுவார்கள். காலப்போக்கில் அவர்களின் விருப்பம் மாறும். ஆனால் என்னுடைய மனதில் ஆசிரியராக வேண்டும் என்று அச்சாணிப் போல் பதிந்துவிட்டது. படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகவேண்டும் என்பதால் சாஃப்ட்வேர் துறையை தேர்வு செய்தேன்.

இதற்கிடையில் எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. கல்யாணமாகி பெங்களூரில் செட்டிலானேன்’’ என்றவர் அதன் பிறகு தான் ஆர்ட் கிளப்பினை ஆரம்பித்துள்ளார். ‘‘சின்ன வயசில் குறிப்பாக பள்ளியில் படிக்கும் போது, நமக்கு யாராவது ஒரு ஆசிரியர் இன்ஸ்பிரேஷனா இருப்பாங்க. எனக்கு உயிரியல் ஆசிரியை ரொம்பவே பிடிக்கும். உயிரியல் பாடம் என்றாலே நிறைய படங்கள் வரைய இருக்கும். எனக்கு படங்கள் வரைய பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு படம் வரையும் போது ரொம்பவே மெனக்கெடுவேன்.

அதைப் பார்க்கும் போது எல்லாம் என் உயிரியல் ஆசிரியை பாராட்டுவார். அவரின் ஒவ்வொரு பாராட்டும் ஓவியம் வரைதல் மேல் எனக்குள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஓவியம் வரைவதில் கவனம் செய்ய ஆரம்பிச்சேன். ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓவியத்தில் ஆசிரியராகும் எண்ணமும் இருந்தது. காரணம் அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள் என்பதால் என்னுடைய மனதிலும் மற்றவர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. அதே சமயம் வழக்கமான பள்ளி ஆசிரியரா இல்லாமல் கல்வியை இந்த தலைமுறையினருக்கு வித்தியாசமாக கொடுக்க திட்டமிட்டேன்’’ என்ற யக்னலட்சுமி ஆன்லைனில் ‘ஆர்ட் கிளப்’ ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

‘‘ஆர்ட் கிளப் என்றதும்… ஒரு பேப்பரில் வண்ணங்கள் தீட்டுவதில்லை. நம்முடைய கற்பனை திறனை அதிகப்படுத்தும் திறன். அதைத்தான் என்னுடைய கிளப் மூலம் பயிற்சி அளிக்கிறேன். உதாரணத்திற்கு குதிரை என்ற விலங்கினை குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும். குதிரையின் படத்தை அவர்களுக்கு காண்பிக்கலாம். ஆனால் அந்த குதிரை என்ன செய்யும், அதற்கு என்ன பிடிக்கும், அதனை எந்த வேலைக்கு பயன்படுத்துவார்கள்… இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் ஓவியங்கள் மூலம் விடையினை அமைக்க வேண்டும்.

அதாவது குதிரை புல் சாப்பிடும் என்றால், அவர்கள் புல் மைதானத்தை வரைவார்கள். சிலர் தங்களின் கற்பனை திறன் மூலம் மைதானம் அருகே சின்ன வீடு அமைக்கலாம் அல்லது கோழிகளும் அங்கு மேய்வது போல் வரையலாம். அவ்வாறு வரையும் போது குதிரையின் ஓவியம் மட்டுமில்லாமல் அந்த விலங்கு பற்றிய செய்திகளும் அவர்கள் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு ஒவ்வொரு விஷயங்களையும் எளிதாக குழந்தைகளின் மனதில் என்னுடைய ஆர்ட் கிளப் மூலமாக பயிற்சி அளித்து வருகிறேன்.

இங்கு குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள் கூட பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் பலர் வேலையின் காரணமாக அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஓவியம் வரையும் போது மனதினை ஒருநிலைப்படுத்துவது மட்டுமில்லாமல் பல வண்ண நிறங்களுடன் விளையாடும் போது மனசு லேசாகும் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். ஓவியக் கலை ஆட்டிஸம் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு சிறந்தது என்பதால் மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

என்னுடைய ஓவியப் பயிற்சி குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையாக அமைந்திருப்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. மேலும் கலையைப் பொறுத்தவரை நாம் உருவாக்கியது ஒரு கிறுக்கலாக இருந்தாலும், அது முழுமையடையும் போது தான் திருப்தியை உணர முடியும். அது சின்ன வெற்றியாகவே மாறி ஒரு மனிதனை எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் வைத்திருக்கும். நானே இதை செய்தேன் என்கிற இந்த எண்ணம்தான் ஒருவரை பிற்காலத்தில் தானாகவே முன்வந்து ஒரு பாடத்தை படிப்பதற்கும் ஒரு வேலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு வேலையில் மேற்கொண்டு முன்னேறவும் வழிவகுக்கும்.

உலகமே மிகச் சாதாரணமாக சிந்திக்கும் மனிதனைவிட அசாதாரணமாக சிந்திக்கும் மனிதனைத்தான் வெற்றியின் ஏணியில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும். சிறுவயது முதலே கலை சார்ந்த கல்வி கற்கும் குழந்தைகள் நிச்சயம் அசாதாரணமாக சிந்திப்பதுடன் ஒருமித்த மனநிலையுடனும் செயல்படுவார்கள். இதனால்தான் ஓவியம் வாயிலாக கல்வியை கற்றுக் கொடுக்க துவங்கினேன். தற்சமயம் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே இந்த ஆர்ட் கிளப் நடத்தி வருகிறேன்.

விரைவில் இதை ஒரு ஸ்கூல் ஆகவே ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். என் கொள்ளுத் தாத்தாவின் பழமையான ஸ்கூல் ஒன்று கிராமத்தில் இருக்கு. அதை புதுப்பிச்சுட்டு இருக்கேன். இங்கேயும் கல்வியுடன் ஓவியத்தை இணைத்து கற்பிக்க இருக்கிறேன். நம்மை யாரும் அவ்வளவு எளிதில் பாராட்ட மாட்டார்கள். நாம் செய்யும் காரியம்தான் அந்த பாராட்டினை ஈட்டித் தரும்.

அப்படிப்பட்ட பாராட்டு கலைஞனுக்கு என்றுமே உண்டு. அதில் ஓவியம் மிகவும் சிறப்பான ஒன்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை எப்போதும் படிப்பு படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது ஓவியம் மூலமாக பொதுவான விஷயங்களை கற்றுக் கொடுக்கலாம். குறிப்பாக அதிகம் ஹைபர் ஆக்டிவாக இருக்கும் குழந்தைகள், அதிலும் மூட் ஸ்விங் எனப்படும் ஒருமித்த மனநிலை இல்லாத தன்மையை கூட ஓவியத்தின் மூலம் சுலபமாக மாற்ற முடியம்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் யக்னலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இசையில் நான் ஃப்ரீ பேட்!! (மகளிர் பக்கம்)