நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 43 Second

நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும். இவ்வாறு பல்வேறு முகங்கள் கொண்ட பரத நடனத்திற்கு ஒரு அழகிய வடிவம் கொடுத்து வருகிறார் நடனக் கலைஞர் பாலா தேவி. இவரின் தனிப்பட்ட நடனங்கள் அனைத்தும் நம் புராதான மற்றும் வரலாற்றினை பிரதிபலிப்பவை. இதற்காக அவர் பல ஆய்வுகளை செய்து நடனம் அமைத்து வருகிறார். இந்தாண்டு மார்கழி மாத கச்சேரியில் இவரின் ‘பத்மாவதி’ நடனம் அனைவரின்
மனதையும் கவர்ந்துள்ளது.

‘‘நான் தஞ்சாவூர் பெண். ஐதராபாத் மற்றும் சென்னையில் தான் படிச்சேன். எங்க வீட்டில் அனைவரும் இலக்கிய துறையினை சேர்ந்தவர்கள். அதனால் எனக்கு சின்ன வயசில் இருந்தே இலக்கியம் மற்றும் வரலாறு குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் தான் என்னுடைய நடனத்திற்கு ஒரு முக்கிய பங்கினை கொடுத்து வருகிறது என்று சொல்லலாம். எனக்கு நடனம் மேல் இருந்த ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர் அதை நான் முறைப்படி கற்றுக்ெகாள்ள வேண்டும் என்ற நினைத்தார்கள்.

அப்போது நாங்க ஐதராபாத்தில் இருந்ததால், ஜெயலட்சுமி நாராயணன் அவர்களிடம் பயின்றேன். சென்னை வந்த பிறகு டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்களிடம் பயின்றேன். நிறைய நடன நிகழ்ச்சி செய்திருக்கேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. தற்போது அமெரிக்க நியுஜெர்சியில் வசித்து வருகிறோம். கிட்டத்தட்ட எனக்கும் பரதத்திற்கும் 30 ஆண்டு கால பந்தம். அந்த பந்தம் நான் நடனமாடுவதால் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து தொடர வேண்டும்ன்னு விரும்பினேன்.

நியுஜெர்சி, பிரின்ஸ்டனில் உள்ள SPNAPA கலைநிகழ்ச்சி கலைக்கூடத்தில் பயிற்சிப் பேராசிரியர் மற்றும் கலை இயக்குநராக பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் வெளிநாடுகளிலும் நம்முடைய பரதக் கலைகுறித்து பயிற்சி அளிக்கிறேன்’’ என்றவர் நாடகம், நடனம், வரலாறு, தத்துவம், மொழியியல், மானுடவியல் குறித்து அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தெற்காசிய துறைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் கலை துறையின் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

‘‘என்னுடைய நடனம் என்பது தனிப்பட்டது. அலாரிப்பில் ஆரம்பித்து புஷ்பாஞ்சலி வரை ஒரு முழு நடனத்தை ஆடுவோம். தனிப்பட்ட தயாரிப்பில் இதுவரை நான் எட்டு நடனம் அமைத்திருக்கிறேன். அதில் ஒவ்வொரு நடனமும் நம்முடைய பாரம் பரியம் மற்றும் வரலாற்றினை பிரதிபலிக்கும். இதில் நந்தனார் சரித்திரம், கிருஷ்ண அர்ப்பணம், உதவகீதா (கிருஷ்ணரின் கடைசி உபதேசம்), விஷ்வம், திருபுரா, கர்ணன் மற்றும் பிரகதீஸ்வரா குறித்து நடனமாடியிருக்கேன்.

இதில் பிரகதீஸ்வரா நடனம் தேவரடிகளின் பார்வையில் அவர் எவ்வாறு பார்க்கப்படுகிறார் என்பதை என் நடனம் மூலமாக சொல்லி இருக்கேன். தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் சிறப்புமிக்கது. இந்த கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்று. பழம் பெருமை வாய்ந்த அந்த கோயிலை தேவரடியாள் எவ்வாறு பார்க்கிறாள். அது குறித்து ஒரு நடன நாடகம் அமைத்தால் என்ன என்று தோன்றியது. அப்படி அமைக்கப்பட்டது தான் பிரகதீஸ்வரா.

பாரீசில் உள்ள யுனெஸ்கோவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழாவில் 500 கலைஞர்கள் மற்றும் 150 தூதுவர்களுக்கு முன்னிலையில் பிரகதீஸ்வரா நடனம் ஆடும் வாய்ப்பு கிடைச்சது’’ என்றவர் ஒரு நாட்டியம் அமைக்க பல ஆய்வுகள் மற்றும் அறிஞர்களிடம் விஷயங்களை சேகரித்து அதன் பிறகுதான் நடனத்தை அமைக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் காலம் ஐந்து வருடம்.

‘‘என்னைப் பொறுத்தவரை நாட்டியம் பாமர மக்களுக்கும் புரியணும். கலை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் சாதாரண மக்களும் இதனை ரசித்து லயிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால் தான் இதற்கான ஆய்வில் ஈடுபட்டேன். பிரகதீஸ்வரர் கோயில் 1000 ஆண்டு வரலாறு நிறைந்தது. அவற்றை சேகரித்தேன். கோயிலின் சிற்பங்கள் மற்றும் கலை வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்தேன். புத்தகங்கள் மூலமும் செய்திகளை சேகரித்தேன்.

இவை அனைத்தையும் கொண்டு இந்த கோயிலை ஒரு தேவரியார் எவ்வாறு பார்ப்பார் என்ற அடிப்படையில் அமைத்தேன். இப்படித்தான் என்னுடைய எட்டு நாட்டிய நாடகமும் அரங்கேறியிருக்கிறது. இதுவரை 30 நாடுகளில் 300 நிகழ்ச்சிகள் செய்திருக்கேன். இந்தியாவில் தில்லி, மும்பை, ஐதராபாத், சென்னை போன்ற இடங்களிலும் நான் நடனமாடி இருக்கிறேன்’’ என்றவர் 22 வருடம் கார்ப்பரேட் துறையில் வேலை பார்த்து வந்தாலும், நடனம் பயில்வதை விடவில்லை.

‘‘கலை ஒரு கடல். நான் பல நடன நிகழ்ச்சியினை செய்திருந்தாலும், இன்னும் நான் நடனக்கலையில் ஒரு மாணவிதான். என்னுடைய நடனம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் ஒரு கரு என் மனதில் தோன்றியதும் அது குறித்த ஆய்வு செய்வேன். அதில் நான் கண்டறிந்த செய்தியினை மக்களிடம் நடனமாக கொண்டு செல்கிறேன். நான் ஆய்வில் மேற்கொண்ட போது பல அறிஞர்கள் மட்டுமில்லாமல் இலக்கிய துறை, சங்கீத துறைச் சார்ந்தவர்களும் எனக்கு உதவினாங்க. இந்த தேடல் மிகவும் சுவாரஸ்யமானது’’ என்றவர் தன்னுடைய லேட்டஸ்ட் ‘பத்மாவதி’ நடனம் குறித்து விவரித்தார்.

‘‘பத்மாவதி, 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஜெயதேவர் அவர்கள் உருவாக்கிய ஒரு அவதாரம். இவரின் காதல் கவிதையில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரம்தான் பத்மாவதி. ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதையின் இடையே உள்ள காதல் நெருக்கத்தை, கவிஞர் ஜெய தேவர் தன் கற்பனை கதாபாத்திரமான பத்மாவதியாக குறிப்பிட்டுள்ளார். இந்த அவதாரத்தை மட்டுமே எடுத்து அதனைக் கொண்டு நான்கு விதமான நடனங்களை அமைத்தேன்.

சோலக்கியம் கடவுளின் நிலையில் இருப்பது, சாரூப்யம் கடவுளின் அவதாரத்தை குறிப்பது, சாமீப்யம் கடவுளை வந்தடைவது, சாயுஜ்யம் கடவுளுடன் ஒன்றாக சேர்வது. என்னுடைய இந்த நடனத்தில் ராதாவினை பத்மாவதியாக சித்தரித்து இந்த நான்கு நிலையில் அவளின் ஸ்ருங்காரத்தினை வடிவமைத்தேன். இதில் கிருஷ்ணர், பத்மாவதி, ராதா, அவர்களின் குருவான சகி என அனைத்து கதாபாத்திரத்தையும் நானே ஏற்று நடனமாடியிருக்கேன்.

என்னுடைய ஒவ்வொரு நடனமும் தனிப்பட்டு இருக்கும். அதே சமயம் சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் எளிதாக புரியணும். ஒவ்வொரு நடனத்திற்கும் தனிப்பட்ட இசை அமைத்திருக்கேன். அந்த இசையும் என் நடனம் சார்ந்துதான் இருக்கும். குறிப்பாக பிரகதீஸ்வரர் குறித்து நடனம் செய்த போது அதில் நான் இயற்றிய பின்னணி இசையில் தஞ்சையின் மண்வாசனையை உணரமுடியும். அதேபோல் பத்மாவதி ஒடிசாவின் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலில் நடைபெறுவதால் ஷனாய், தப்ளா போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கேன். மேலும் அங்கு நடைபெற்ற காவியம் என்பதால் அந்தக் கோயிலில் பத்மாவதியினை அரங்கேற்றம் செய்ய இருக்கிறேன்.

நடனம் மட்டுமில்லை எந்த ஒரு கலை சார்ந்து பயிலும் போது என்றும் ஒரு மாணவியாக இருக்க வேண்டும். நம்முடைய எண்ணம் மற்றும் அதன் மேல் இருக்கும் ஆர்வம் குறையக்கூடாது. அப்போதுதான் பல விஷயங்களை நம்மால் கிரகித்துக் கொள்ள முடியும். கலைக்கு வானம்தான் எல்லை. நடனக் கலைக்கான என்னுடைய தேடல் என் கடைசி மூச்சு வரை தொடரும்’’ என்றார் பாலா தேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்! (மகளிர் பக்கம்)
Next post சுய இன்பத்தில் இல்லை சுய நலம்… மாறாக மேம்படுமே உடல் நலம்..!! (அவ்வப்போது கிளாமர்)