விளையும் பயிர்! (மகளிர் பக்கம்)
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஆராதயா பேட்மிண்டனில் ஓசையின்றி தடம் பதித்து வருகிறார். பள்ளி மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 40 டிராபிகளை வென்று உள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பி.வி.சிந்து, தனது ரோல் மாடல் எனக் கூறும் இச்சிறுமி, அவரைப்போல் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். பயிற்சி முடித்து திரும்பிய அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம். மழலை மொழியில் மடை திறந்த வெள்ளமாய் பேசினார்…
“என் அப்பா டாக்டர் அவினாஷ். பெரும்பாக்கத்தில் உள்ள எங்க குடியிருப்பில் அப்பா தினமும் பேட்மிண்டன் விளையாட போவார். அப்ப நானும் அவருடன் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். அவர் விளையாடுவதைப் பார்த்த எனக்கும் அந்த விளையாட்டினை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. நானும் என் வயதையொத்த மற்ற சிறுமி, சிறுவர்களுடன் விளையாட ஆரம்பிச்சேன். சில சமயம் அப்பாவும் என்னுடன் சேர்ந்து விளையாடுவார்.
என் ஆட்டத்தையும், அதில் எனக்கு இருக்குற ஆர்வத்தையும் பார்த்து கோச் சகாயராஜ் அவர்கள் மேலும் என்னை ஊக்கப்படுத்தி, எனக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். 8 வயசில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ‘ஏசஸ் அகாடமி’யில் சேர்ந்து முறையாக பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். ஆனால் எடுத்த உடனேயே போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. ஒரு வருஷம் கடுமையாக பிராக்டீஸ் செய்தேன். அதைப் பார்த்து அம்மா விஜயலஷ்மியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
9 வயதில் இருந்து டோர்னமென்டில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். சென்னை கேளம்பாக்கத்தில் 2020-ல் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் முதன் முதலாக கலந்து கொண்டேன். அதில் 2ம் இடம் வந்தேன்.அதன் பின்னர் தொடர்ச்சியாக போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், இதுவரை மாவட்ட, மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று தனிநபர் பிரிவில் 20 டிராபிகளை வென்றுள்ளேன்.
அதைப் போன்று 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் மாவட்ட, மாநில அளவிலான ஏராளமான போட்டிகளில் பங்கேற்று டிராபிகளை ஜெயித்துள்ளேன். இவைத்தவிர, கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றேன். அதில் 7 போட்டிகளில் முதலிடமும், 2 போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றேன்’’ என்றவர், தான் பயிற்சி எடுத்துக் கொள்ளும் முறையினைப் பற்றி விவரித்தார்.
‘‘போட்டியில் ஆட வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை. என்னைப் பொறுத்தவரை முறையாக பயிற்சி எடுத்தாலே எந்த வித போட்டியாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். அதனால் தினமும் காலையில் 5.30 மணி முதல் 7 மணி வரை பயிற்சி எடுப்பேன். அதன் பிறகு பள்ளிக்கு சென்றுவிடுவேன். பிறகு பள்ளி முடித்து, மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் கடுமையாக பயிற்சி செய்வேன். சில நேரங்களில் 8 மணிவரை பயிற்சி இருக்கும்.
டோர்னமென்ட் நெருங்கும் போது பள்ளியில் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்து எக்ஸ்ட்ரா ஸ்டேக்ஸ் கத்துக்குவேன். ஸ்மாஷ் (Smash) செய்வதில் கவனம் செலுத்துவேன். இந்த விளையாட்டுக்கு ஃபிசிகல் டிரெய்னிங் ரொம்ப முக்கியம். ரிஸ்ட், ஷோல்டர் பலமா இருக்கணும். அதுக்காக வாரத்துல ஒரு நாள் அப்பாவுடன் ஜிம்முக்கு போவேன். ஆனால் ஜிம்மிற்கு செல்வதால், எனக்கு உடல் வலி ஏற்பட்டது. அதனால் கோச் என்னை ஜிம்முக்கு போகக் கூடாதுன்னு சொல்லிட்டார். தேவைப்பட்டால் மட்டும் தான் ஜிம்முக்கு செல்கிறேன்.
ஃபிட்னஸுக்காக, கார்த்திகா என்பவரிடம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பயிற்சி செய்து வருகிறேன்.
மற்ற விளையாட்டுகளைப் போலவே இந்த விளையாட்டுக்கும் மன வலிமை ரொம்ப முக்கியம். மேட்சுக்கு போகும் போதெல்லாம் “நீ ஸ்ட்ரெஸ் உடன் ஆடினா, எவ்வளவு சின்ன பிளேயராக இருந்தாலும் நீ தோத்துருவ” என அப்பா சொல்வார். அதனால் “நான் ஸ்ட்ராங்”, “பயப்படக்கூடாது” என நினைத்துக் கொள்வேன். கோச்சும் “தைரியமாய் விளையாடு” என உற்சாகப்படுத்துவார். அதனால் என்னுடைய மனதை ஒருநிலைப்படுத்த என் பாட்டி வீட்டுக்குப் போகும் போதெல்லாம், அவருடன் சேர்ந்து மெடிடேஷன், யோகாசனம் செய்வேன்’’ என்றவர் எதிராளியின் வீக்னெஸ் என்ன என்று தெரிந்து கொண்டு விளையாடினால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்கிறார்.
‘‘மேட்ச்சுல எதிராளியை 3 ஸ்ட்ரோக்ஸ்ல ஜட்ஜ் பண்ணிடுவேன். அவங்களுக்கு ஸ்மாஷ் கஷ்டம்ன்னா நிறைய ஸ்மாஷ் செய்வேன். ஸ்மாஷை ஈசியா எடுத்து விட்டால், ஸ்மாஸ் பண்ணுவது ட்ராப் மற்றும் டாஸ் செய்வது (Toss, ‘எதிராளிக்குப் பின்னால் கார்க்கை தள்ளுவது’) என கவனமாக ஆடி ஜெயிப்பேன்.
ஆனால் வளர வளரத்தான் இந்த டெக்னிக் எல்லாம் மாஸ்டர் ஆகும். என்னதான் நான் பல போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், பள்ளிகளுக்கு இடையேயான, மாவட்ட அளவிலான 2 போட்டிகளை என்றைக்கும் மறக்க முடியாது. அதில் சிங்கிள்ஸ், டபுள்ஸ் என இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தேன். சிங்கிள்சில் நந்தனா என்ற வீராங்கனையை 30-19, 28-30, 30-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்றேன். அதைப் போன்று டபுள்சில் மேகா என்ற வீராங்கனையுடன் சேர்ந்து ஆடி 30-27, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்றேன்.
படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் கவனம் செலுத்துவது சிரமமாகத்தான் உள்ளது. ஆனாலும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறேன். இதுவரை 9,11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் விளையாடி 40 டிராபி, 20 மெடல் ஜெயித்துள்ளேன். பி.வி. சிந்து என்னுடைய ரோல் மாடல். அவர்கள் மாதிரி ஒலிம்பிக்சில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்றார் மழலை குரலில்.