கனவு மெய்ப்பட வேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘நம் மண்ணில் அமர்ந்து.. மண்ணோடு மண்ணாக உழைக்கும் பெண்களை, அவர்களின் உழைப்பை.. அவர்கள் சிந்துகிற வியர்வையை அழகாய் வெளிப்படுத்துவதே என் போட்டோகிராபியின் இலக்கு.கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டோ பினாலேயில் (Chennai Photo Binnale) என் புகைப்படங்கள் தேர்வானது. காணும் கனவை பெண்கள் எவ்வாறு மெய்ப்படுத்துகிறார்கள் என்பதை டாக்குமென்டாக்கும் நோக்கில், “சென்னை போட்டோ பினாலே”யும் “ஸ்டுடியோ-A” நிறுவனமும் இணைந்து தேடிக் கண்டடைந்த ஐந்து பெண்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன்’’ என நம்மிடத்தில் பேச ஆரம்பித்தவர் புகைப்படக் கலைஞர் ரேகா விஜயசங்கர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கிவரும்
தட்சிணசித்ரா பாரம்பரிய அருங்காட்சியகத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர்.
தேர்வான ஐவருக்குமே பெண்கள் தொடர்பான புராஜெக்ட்தான் கொடுத்தார்கள். இதில் நான் “வுமன் அண்ட் நேச்சர்” என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். ஐந்து பூதங்களான நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று, இவற்றுடன் பெண்கள் தங்களை எப்படி தொடர்புஃபடுத்தி உழைத்து, தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள் என்பதை ஆவணப்படுத்த, எனது கேமராவுடன் நகரத்தின் நெருக்கடியை தவிர்த்து, கடை கோடி கிராமங்களில் உழைக்கும் பெண்களை நோக்கி நகர ஆரம்பித்தேன். அப்படி நான் கண்டடைந்த பெண்களை, எனது கேமராவுக்குள் புகைப்
படங்களாகவும், காணொளியாகவும் பதிவேற்றி ஆவணப்படுத்தினேன்.
பெண்களுக்குள் நிறையவே சக்தி இருக்கிறது. குறிப்பாக விளிம்புநிலை பெண்கள் (Grassroot women) வாழ்வதற்காக நிறைய போராடுறாங்க. குடும்பத்திற்காக தியாகங்கள் செய்யுறாங்க. சரியில்லாத கணவனோடு, குழந்தைகளுக்காக வாழ்க்கை முழுதும் வாழப் போராடுறாங்க. வயதான பெண்களிடத்திலும் மன உறுதி இருப்பதை, அவர்கள் உழைப்பைக் காண முடிந்தது.
மிகச்சுலபமாக நாம் வாங்கும் கருவாட்டை, மீனிலிருந்து பதப்படுத்த பல நடைமுறைகள் இருக்கு. அத்தனைக்குப் பின்னாலும் அந்தப் பெண்களின் உழைப்பு இருக்கு. கருவாடு வாடுகிறதோ இல்லையோ அதை நம்பி வாழும் பெண்கள் வாடுகிறார்கள் என்றவர், குளம், குட்டைகளில் இறால் பிடிக்கும் பெண்கள் தண்ணீருக்கு அடியில் சகதிக்குள் அமர்ந்துதான் இறால் பிடிக்கிறார்கள். காத்திருந்து கையில் இறால் சிக்கியதும், தலையோடு கோர்ந்து முதுகில் சுமக்கும் கூடைக்குள் ஒவ்வொன்றாய் போடுவார்கள். கோவளம், கேளம்பாக்கம் பகுதியில் உள்ள
குட்டைகளில் இறால் பிடிக்கும் பெண்களை பார்த்திருக்கிறேன்.
நாற்று நடும் பெண்கள்.. கருவாடு காய வைக்கும் பெண்கள்.. செங்கல் சூளைகளில் வேலை செய்யும் பெண்கள்.. சாலையோரம் வியாபாரம் செய்யும் பெண்கள்.. மண்பானை செய்யும் பெண்கள்.. கூடை முடையும் பெண்கள்.. என நான் காட்சிப்படுத்தியவர்கள் அனைவரும் இந்த மண்ணில் கலந்து வேலை செய்யும் பெண்கள்தான். உழைக்கும் பெண்களின் அழகு அவர்களுக்குத் தெரியாதுதான். என்னைக்கூட இவ்வளவு அழகா எடுத்திருக்கியேன்னு அவர்கள் என்னிடத்தில் சொல்லும்போது அவர்கள் முகம் அத்தனை பிரகாசமாய் இருக்கும்.
நான் எடுத்த புகைப்படங்களை பிரின்ட் போட்டு எடுத்துச் சென்று அவர்களிடம் மீண்டும் கொடுப்பேன்’’ என்றவர், ‘‘என்னோட ஃபேவரைட் உடை எப்போதுமே சேலைதான். புகைப்படங்களை எடுக்கும் போதும் பெரும்பாலும் சேலைதான் உடுத்திச் செல்வேன். காரணம், நான் கிராஸ்ரூட் பெண்களையே அதிகம் நெருங்கி ஆவணப்படுத்துகிறேன். நான் சேலையில் அவர்களை நெருங்கும்போது நிறைய நம்மிடம் மனம் திறக்கிறார்கள். படமெடுக்க ஒத்துழைப்பார்கள்.
வில்லியம் சிஸ்டர்ஸ் எனப்படும் இரண்டு பிரிட்டிஷ் பெண்கள் 1800களில் நமது நாட்டிற்கு வந்து அவர்கள் பார்த்த காட்சிகளை வாட்டர் பெயின்டிங்கில் காட்சிகளாக வரைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பெண்கள் இருவர் 18ம் நூற்றாண்டில் வரைந்ததை, 21ம் நூற்றாண்டில் மீண்டும் பெண்களே போட்டோகிராபியாக்க வேண்டும் என முடிவாகி, கனடாவில் இருக்கும் மெக்கில் (McGill University) பல்கலைக்கழகத்தோடு தட்சிணசித்ரா நிர்வாக இயக்குநர் டெபோரா தியாகராஜனும் இணைந்து “தென் அண்ட் நவ்” என்கிற தலைப்பில், பெயின்டிங்கில் இருக்கும் காட்சிகளை தேடிக் கண்டுபிடித்து போட்டோகிராபியாக்க முயற்சித்தோம். இந்த வேலையும் எனக்கு வழங்கப்பட்டது.
வில்லியம் சிஸ்டர்ஸ் பெயின்டிங்ஸ், மலையும் மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என காட்சிகளை வரைந்திருந்தனர். அதுமாதிரியான இடங்களாகத் தேடிக் கண்டுபிடித்து, ஓரளவு மேட்ச் செய்து புகைப்படமாக்கினேன். மொத்தம் 79 பெயின்டிங்ஸ் இருந்தது. அதில் என்னால் 39 வரை மட்டுமே ஓரளவுக்கு மேட்ச் செய்ய முடிந்தது. எடுத்த புகைப்படங்களை தட்சிணசித்ரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி, ஆவணமாக்கி அப்படியே மெக்கில் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பினோம். இப்போது எனது புகைப்படங்களும் வில்லியம் சிஸ்டர்ஸ் பெயின்டிங்ஸ்சுடன் பல்கலைக்கழகத்தின் ஆர்கேயில் இடம்பெற்றிருக்கிறது’’… புன்னகைக்கிறார் போட்டோகிராபர் ரேகா.
‘‘எந்தவொரு காட்சியும் நாம் பார்க்குற கோணத்தில்தான் பதிவாகும். எங்கு சென்றாலும் கேமராவோடு சென்று, கண்ணில் படும் வித்தியாசமான காட்சிகளை வெவ்வேறு ஆங்கிளில் க்ளிக் செய்து கொண்டே இருப்பேன். தமிழர்களின் பாரம்பரியம்மிக்க கலைகள்.. மண்ணின் மணம் பேசும் திருவிழாக்கள்.. மரபு சார்ந்த நிகழ்ச்சிகள்.. கோயில் விழாக்கள்.. கலைநயம் மிக்க கோயில் சிற்பங்களைத் தேடித்தேடி படமெடுத்து அவற்றைச் சேகரிக்கிறேன். நான் சேகரித்தவற்றை தொகுத்து அவ்வப்போது காட்சியாக்கி என் பிளாக்கிலும், இன்ஸ்டா பக்கங்களிலும் பதிவேற்றி வருகிறேன்.
பாரம்பரியக் கலைகள் பலவும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. என்றாலும் கலைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கிற கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை என் புகைப்படத்தில் அப்படியே கொண்டு வருகிறேன். கேமராவில் புகைப்படம் எடுப்பது தனி கலை. புகைப்படங்கள் மட்டும்தான் நாம் வாழ்ந்த வாழ்க்கையை வெளிப்படுத்தும். அந்த மொமெண்டின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். நிறைய பதிப்பகங்கள் என் புகைப்படங்களையும் பயன்படுத்துகிறார்கள். எனது புகைப்படம் ஒன்று வேளச்சேரி ரயில் நிலைய முகப்பு வாயிலிலும் இடம்பெற்றுள்ளது.
எப்பவும் நான் கேமராவும் கையுமாகவே இருப்பேன். எனது கைகளில் கேமரா இல்லாமல் இருந்தால், “எங்கே உன் கவச குண்டலம்” என நண்பர்கள் கலாய்ப்பார்கள் என்றவர், அழிந்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் தற்போது இருக்கிறேன்’’ என்கிறார்.
‘‘நாம் செய்யும் விஷயங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு நம்மை யாரெனக் காட்டும். நான் செய்யும் புகைப்பட ஆவணங்கள் பின்னாடி வரும் சந்ததியினருக்கு கண்டிப்பாக பயனுள்ளதாய் இருக்கும். எனது காணொளிகளும் வரும் தலைமுறைக்கு சிறந்த ஆவணத் தொகுப்பாக இருக்கும் என்பதே எனக்கு மனநிறைவு.’’
என் பயணம்…
‘‘தட்சிணசித்ராவில் (DakshinaChitra) உதவி லைப்ரரியனாக நுழைந்து இப்போது ஆஸ்தான போட்டோகிராபராகிவிட்டேன். என் குடும்பத்தில் நான்தான் முதல் போட்டோகிராபர் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. என் திறமையை நான் திருமண நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் என கமர்ஷியலைஷ் செய்வதில்லை. நான் பணியாற்றுகிற அமைப்பின் நிறுவனர் டெபோரா தியாகராஜன். இவருக்கும் போட்டோகிராபி நாலேஜ் அதிகம் உண்டு. என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, எனக்கு நிறையவே சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்.
தொடக்க நாட்களில், நான் கேமராவோடு படம் எடுக்க முயலும்போது, எவ்வளவு க்ளோஸாக நின்று எந்த ஆங்கிளில் எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து என்னைத் திருத்திக் கொண்டே இருப்பார். அருகே சென்று படமெடுக்க தொடக்கத்தில் நிறைய சங்கடம் இருந்தது. காரணம், என்னையே எல்லோரும் பார்ப்பது மாதிரியான ஃபீலிங் இருந்தது. ஆனால், அருகே சென்று க்ளோஸ் ஷாட் எடுத்தால்தான், கலைஞர்கள் போட்டிருக்கும் மேக்கப் நமக்கு டீடெய்லாக கிடைக்கும் என்பது புரியத் தொடங்கியது.
ஃபிலிம் ரோல் போட்டு எடுக்கும் நெகட்டிவ் கேமராதான் முதலில் என் கைகளில் இருந்தது. அதில் நிறையவே தவறுகள் வந்தது. 36 படங்களையும் எடுத்து கழுவிப் பார்த்த பிறகுதான் என்ன தவறு செய்திருக்கிறோம் என்பதே தெரியவரும். புகைப்படங்களை கழுவிப் பார்க்குறவரை டென்ஷன் இருந்துகொண்டே இருக்கும். தேர்வெழுதிவிட்டு மதிப்பெண்ணிற்காக காத்திருக்கிற மனோநிலைதான் அப்போது எனக்கு. ஒவ்வொரு முறையும் தவறு செய்யும்போது எது சரியெனக் கற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் போட்டோகிராபி தெரிந்த நண்பர்களிடத்தில் நிறைய கேட்டு கேட்டு தெரிந்து கொண்டேன். புகைப்படக் கலை தொடர்பான இதழ்களை வாங்கியும் கவனிக்க ஆரம்பித்தேன். எந்தவொரு புத்தகத்தை எடுத்தாலும் அதில் உள்ள புகைப்படங்களைத்தான் எந்த ஆங்கிளில் எடுத்திருக்கிறார்களென முதலில் கவனிப்பேன். நான் எடுக்கும் படங்களைப் பார்த்து நண்பர்களும் நிறையவே பாராட்டினார்கள். ஊக்கப்படுத்தினார்கள். நான் டெவலப் ஆகிறேன் என்பது எனக்கே புரிந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் டிராவல் செய்தும் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன்.’’