அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)
பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும் இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போய் பெண்ணை பார்த்து வருவார்கள். மாப்பிள்ளைக்கு அரசாங்கத்தில் கிளார்க் உத்தியோகம். படித்த மாமனார், மாமியார். அதனால் மகள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள் என நினைத்து வந்தார்கள்.
ஒருமுறை அவர்கள் பரமேஸ்வரியின் புகுந்த வீட்டுக்கு சென்ற போது இருட்டு அறையில் ஒடுங்கி உட்கார்ந்து இருந்தாள். கை, கால்களில் அடிபட்ட வீக்கம் இருந்தது. முகத்தில் சில இடங்கள் கன்றிப் போய் இருந்தது. உடலில் ஒருவித உதறலும் இருந்தது. பரமேஸ்வரியின் பெற்றோர்களுக்கு மகளை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என புரிந்து விட்டது. விசாரித்த போது ஒரு பெரிய தொகையை வரதட்சணையாக வாங்கி வர பரமேஸ்வரியின் மாப்பிள்ளையும் பெற்றோரும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.
திருமணத்துக்கே லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டார்கள். இனி அவர்களிடம் பணம் இல்லை என பதில் சொல்லிவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த மாமனாரும் மாமியாரும் இவளை அடித்திருக்கிறார்கள். ‘நீ இனிமேலும் இங்கே இருக்க வேண்டாம்… வா’ என பரமேஸ்வரியை வீட்டுக்கு கூட்டிப்போக முடிவெடுத்தனர். ‘போனா, அப்படியே போயிடு, திரும்பி வராதே’ என்றனர் கணவன் வீட்டார். இப்போது விவகாரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது.
இப்படி பல பெண்கள் புகுந்த வீட்டில் கணவன் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுவது இந்த நவீன காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கணவன் நல்லவனாக இருந்தாலும், அவனது பெற்றோர் முரட்டுத்தனம் உடையவர்களாக இருந்தால், இவளை கொடுமைப்படுத்துவார்கள். இதனால் தம்பதிகளுக்கிடையே செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும். இருவருக்கும் நல்ல அன்பு இருந்தாலும், கணவனுடைய குடும்பத்தினர் இருவரையும் உறவு கொள்ள விடாமல் பிரித்து வைப்பார்கள். பெண்ணுக்கு பய உணர்வு அதிகமாகி எந்த வேலையையும் சரிவர செய்ய இயலாமல் போகும். கணவனால் தனது பெற்றோரை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத அடிமை நிலையில் இருப்பான்.
சில குணம் கெட்ட ஆண்கள் கணவனாக வாய்த்தால் விரும்பும் போதெல்லாம் மனைவி செக்ஸ் உறவுக்கு வர வேண்டும் என நினைப்பார்கள். ஏதாவது ஒரு நாள் அவள் செக்ஸ் கொள்ளும் மன நிலையில் இல்லையெனில் வர மறுக்கலாம். அப்போது செக்ஸ் உறவுக்கு கட்டாயப்படுத்தி அடித்து உதைப்பார்கள். தன் ஆசைக்கு இணங்கவில்லை என்று சாப்பாடு போடாமல் அறையில் பூட்டி மனைவியை கொடுமை செய்யும் கணவர்களும் இருக்கிறார்கள். குழந்தை பிறக்கவில்லை, சரியாக சமைக்கத் தெரியவில்லை என்று கொடுமைப்படுத்துபவர்களும் உண்டு.
சமூக நலனுக்கு எதிரான மன நிலையில் Deviant personality ஆக உள்ளவர்கள்தான் இப்படி மனைவியை அடித்து கொடுமைப் படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். மனைவியின் மீது வன்முறையை நடத்துவதை தனது தனிப்பட்ட அதிகாரமாக இவ்வகை ஆண்கள் நினைக்கிறார்கள். பெண்கள் எல்லாவற்றுக்கும் பொறுமையாக போவதே இத்தகைய கொடுமைகளுக்கு காரணம். எதிர்த்து கேள்வி கேட்கவும், தனது பெற்றோர்களிடம் ஆரம்ப நிலையிலேயே தெரியப்படுத்தவும் வேண்டும். காவல்துறையின் உதவியையும், சட்டத்தின் துணையையும் நாடலாம்.
கணவனோ, மாமியாரோ வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை எதிரியாக பாவித்து சண்டையிடக்கூடாது. அன்பும் அக்கறையும் மட்டுமே காட்ட வேண்டும். வன்முறையை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. அது எதிர் ஆயுதமாக பயன்படுத்துபவர்களையும் தாக்கிவிடும். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு போய்விட்டால் இனி பெண்ணிடம் நமக்கு உரிமை இல்லை என சில பெற்றோர் நினைப்பார்கள். உங்கள் பெண்ணிடம் ஆயுள் முழுக்க உங்களுக்கு உரிமை உண்டு.
எந்த கொடுமை உங்கள் பெண்ணுக்கு நடந்தாலும் தட்டிக் கேளுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். பெண்கள் உரிமை ஆணையங்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். மகளின் கணவனுக்கு ஏதாவது மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருந்தால் அவர் விரும்பினால் மனநலம் சார்ந்த சிகிச்சை கொடுத்து சரி செய்யலாம்.குடும்ப வன்முறையை ஒருமுறை ஏற்றுக்கொள்ள தொடங்கினால் அது தொடர ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து நில்லுங்கள்.