சிறகு முளைத்தது வானம் விரிந்தது! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 46 Second

ஒரு குழந்தையிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டர், ஃபேஷன் டிசைனர், போலீஸ் ஆபீசர், வக்கீல்… என பல பதில்களை உதிர்க்கும். ஆனால் விவரம் புரியாத வயதில் கேட்கும் இந்த கேள்விக்கான விடையாக அவர்கள் விஸ்வரூபம் எடுக்கிறார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள். இப்போது பெண்கள் பலரும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும்தான் தனக்கான இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரஞ்சனி. கிடைக்கும் வாய்ப்புகளை அனைத்தையும் தனக்கானதாக மாற்றி அமைத்து அதில் எந்த தடையும் இல்லாமல் பயணித்து வருகிறார்.

பரதம், ஓவியம், அபாகஸ் பயிற்சி, சிலம்பம்… என பல கலைகளை கற்றது இல்லாமல் இப்போது சமூக ஆர்வலராகவும் வலம் வருகிறார். ‘‘என்னுடைய சொந்த ஊர் ஈரோடு. எங்களின் குலத்தொழில் மண்பாண்டம் செய்வது. அவர் காலத்தில் பெரிய வசதி இல்லை என்பதால் அப்பா பள்ளிக்கு எல்லாம் சென்று படிக்கவில்லை. ஆனால் அவர் செய்த தவறை எங்களுக்கு செய்யக்கூடாது என்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். பெண் பிள்ளை என்று என்னை வீட்டில் அடைக்காமல் எனக்கான சுதந்திரத்தை கொடுத்தார். உன்னுடைய வாழ்க்கை உன் கையில்… இந்த வானம் நமக்கானது. அதில் உன்னால் எவ்வளவு உயர சிறகை விரிக்க முடியுமோ அவ்வளவு தூரம் பயணம் செய் என்பார். அவர் தான் என்னுடைய ரோல் மாடல்.

‘‘எங்க வீட்டில் பெரிய வசதி எல்லாம் கிடையாது. ரொம்பவே சாதாரணமான குடும்பம் தான். ஆனாலும் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டுதான் என்னை படிக்க வச்சார். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்னு சொல்லி பல கலைகளை கற்றுக்கொடுத்தார். பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விடுமுறையின் போது நான் ஏதாவது ஒரு கலை அல்லது படிப்பு சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்ள தயாராகிவிடுவேன்.

அப்படித்தான் பரதம், ஓவியம் தீட்டுவது, அபாகஸ் பயிற்சி, கராத்தே, சிலம்பம், கம்ப்யூட்டர்… என கற்றேன். கற்பதற்கு எந்த எல்லையும் இல்லை என்பது என் தந்தையிடம் நான் கற்றுக் கொண்ட பாடம். திருமணமாகியும் என் கணவரின் உந்துதலால் நான் இன்றும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன்’’ என்றவர் இன்றும் பல பெண்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள் என்றார்.

‘‘என் வாழ்க்கையில் நான் பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதில் நான் சந்தித்த பல பெண்கள் தங்களுக்கு என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நான் அபாகஸ் பயிற்சி எடுத்த போது என் தோழிகளை அதில் சேரச் சொன்னேன். அதற்கு அவர்கள் எவ்வளவு தூரம் வர வேண்டும்? அதிகநேரம் ஆகுமா? வீட்டுக்கு வர தாமதமாகுமா? குழந்தைகளை யார் பார்ப்பது? வீட்டுக்காரர் ஒத்துக் கொள்வாரா? என்று பல கேள்விகளை கேட்விட்டு அதற்கான ஒரு தீர்வு பற்றி யோசிக்காமல், இதெல்லாம் எங்களால் முடியாது என்று தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பழகிட வாழ்நாள் முழுதும் அந்த வட்டத்திற்குள்ளே தங்களின் வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள் குழந்தை பிறந்த பிறகு ஓய்வு அவசியம் தான், ஆனால் அதுவே நிரந்தரமாகிவிடாது.

நம்மை நமது குடும்பம் எப்போதும் தாங்கிப் பிடிக்கவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்கிறார்கள். நான் அதை தகர்க்க நினைத்தேன். அதற்காக குடும்பத்தை கவனிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே சமயம் நமக்கான ஒரு பாதை அமைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த 27 வது நாளில் மேடையேறி பரதம் ஆடினேன். அது என்னால் எதையும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை கொடுத்தது. பரதம், அபாகஸ், சிலம்பம்னு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் நான் அதற்காக துவண்டுவிடவில்லை. முதலில் என்னுடைய குடும்பத்தின் பாதுகாப்பு அவசியம். அதே சமயம் இதற்கான மாற்றுப் பாதை என்ன என்று யோசித்தேன். டிஜிட்டல் முறையை தேர்வு செய்தேன். பரதம், சிலம்பம், கராத்தே, அபாகஸ்… அனைத்து பயிற்சியும் என் கணவரின் உதவியோடு டிஜிட்டில் முறையில் மாற்றினேன். ஏற்கனவே கல்லூரியில் பாடம் எடுத்து பழக்கப்பட்டதால், இது எனக்கு எளிமையாக இருந்தது’’ என்றவர் அமைப்பை துவங்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

‘‘சமூகம் நமக்காக நிறைய செய்து இருக்கிறது. அதை நாம் திருப்பி செய்வதுதான் நியாயம். அதனால் என்னுடைய அமைப்பு மூலம் இந்த கொரோனா கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்தேன். குறிப்பாக தினசரி கூலி வேலை மற்றும் சாலையோர வேலைகளில் ஈடுபட்டவர்கள் இந்த கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் திண்டாடினார்கள். அவர்களின் அன்றாட தேவைகளான உணவு இல்லாமல் பலர் கஷ்டப்பட்டனர். அவர்களுக்கு உணவு அளித்தேன். மனிதர்கள் மட்டும் தான் பசியால் கஷ்டப்படுகிறார்கள், தெருக்களில் வசிக்கும் நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களும் உணவின்றி தவித்து வந்தது. அவர்களுக்கும் உணவு அளித்தேன். இந்த ஊரடங்கு காரணமாக குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அவர்களுக்கு கல்வி கற்றுத் தந்தேன். மேலும் இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் மருத்துவ முகாம்கள் அமைத்து அதன் மூலம் மக்களுக்கு சேவையினை செய்து வருகிறோம். மேலும் என் தோழி சஜீனா உதவியோடு, ஈரோடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே அமேசான் போன்ற ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய முயன்று வருகிறேன்’’ என்றவர் சிதம்பரம், மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பரதம் ஆடியுள்ளார். அதற்காக நாட்டியகலா, நாட்டியரத்தினா, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ரஞ்சனி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அனைவருக்கும் விளையாட்டு சமம்! (மகளிர் பக்கம்)