திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 14 Second

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட பத்திரிகையாளராய் (Photo journalist) தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் 27 வயதான சோயா தாமஸ் லோபோ. எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது எனும் திருநங்கை சோயா லோபோ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலகட்டம், கொரோனா நோய் தொற்று பரவல், மக்களின் அன்றாட வாழ்வியல் விஷயங்களை முன்னிறுத்தும் இவரின் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்க்க, சமூக வலைத்தளங்களிலும் சோயாவின் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா, நம்பிக்கையோடு உழைப்பைச் செலுத்துங்கள் எனும் சோயா தனது ஐந்து வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பில் வளர்ந்திருக்கிறார்.

பதினேழு வயதைத் தொட்டபோது, தானொரு திருநங்கை என உணரத் தொடங்கியுள்ளார். தொடர்ந்த நாட்களில் அவரைச் சுற்றி இருந்த சமூகத்தால் பிரச்சனைகள் பூதாகரமாக, வீட்டைவிட்டு வெளியேறியவர், திருநங்கையர் அமைப்பில் தன்னை இணைத்து, ரயில்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். 10 ஆண்டுகளாக ரெயில் சிநேகத்தை தொடர்ந்தவர், தனது எதிர்கால வாழ்க்கை குறித்தும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதிகாலையில் தொடங்கும் சோயாவின் ரயில் பயணம் இரவு வரை நீண்டிருக்கிறது. புதிய புதிய முகங்களை தினமும் ரயிலில் பார்க்கும் சோயாவுக்கு தானொரு புகைப்படக் கலைஞராக வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட, கேமராக் கனவு கலையாமல் பார்த்துக் கொண்டார். புகைப்படக் கலைஞராக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்கியவர், தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் முப்பதாயிரம் ரூபாய்க்கு பழைய கேமரா ஒன்றை வாங்கி, தான் ரசித்த விசயங்களை யதார்த்தமான படங்களாகவே பதிவேற்றியிருக்கிறார். பிறகு யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில் தானெடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்திருக்கிறார். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு, அவரின் புகைப்படங்கள் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டைக் குவித்தது.

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கில் பந்தரா ரயில் நிலையத்தில் அவதிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தனது கேமராக் கண்களுக்குள் படம் பிடித்தவர், அதையும் தனது இணையப் பக்கத்தில் பதிவேற்றினார். சோயா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக, பலரும் அவரின் புகைப்படத்தை பகிரத் தொடங்கினர். சில தனியார் பத்திரிகை நிறுவனங்களும் அவரின் புகைப்படங்களை வெளியிட்டது. கொரோனா காலகட்டம் அவரைக் கைதேர்ந்த புகைப்பட கலைஞராக மெருகேற்றி இருந்தது. சோயா லோபோவின் புகைப்படங்களைப் பார்த்து அசந்துபோன தனியார் பத்திரிகை ஒன்று அவரை தங்கள் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளராக பணியமர்த்தியது.

அதிகாலையிலே கேமராவும் கையுமாக கிளம்பும் சோயா, மாலையே அவற்றை பத்திரிகை அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி ஒப்படைத்து வருகிறார். தற்போது மும்பை வெள்ளம், கொரோனா பரிசோதனை என புகைப்படங்களுக்காக தினந்தோறும் வெயில், காற்று, மழை மற்றும் புழுதிகளோடு கலந்து மகிழ்ச்சியாய் கேமராவும் கையுமாக ஓடிக்கொண்டிருக்கிறார். திருநங்கைகள் சம உரிமை கேட்டு நடத்திய பேரணியை சோயா புகைப்படமாக்க, அதை கவனித்த ஐரோப்பிய பிரஸ் போட்டோ ஏஜென்சியைச் சேர்ந்த மூத்த புகைப்படக் கலைஞர் திவ்யகாந்த் சோலங்கின் அறிமுகம் சோயாவுக்கு ஏற்பட்டு, அவர் புகைப்பட இதழியலின் அத்தனை நுணுக்கங்களையும் சோயாவுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.

‘ஹிஜ்ரா ஷாப் கி வர்தான்’ என்ற தொடரின் முதல் பகுதியை பார்த்தவர் அதிலிருந்த தவறுகள் சிலவற்றை சுட்டிக்காட்டி விமர்சிக்க, சோயாவுக்கு அந்தத் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தொடரில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய சோயாவுக்கு தொடருக்கான விருதும் கிடைத்திருக்கிறது. திரைத்துறையில் திருநங்கைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை எனும் சோயா, நடிகையாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். திருநங்கைகள் வேலை இன்றி கஷ்டப்பட்டு வரும் நிலையில், திரைப்படத்துறை ஆண்களையும், பெண்களையும் திருநங்கைகளாக நடிக்க வைத்து அவர்களுக்கு புடவைகளை உடுத்திக் கொண்டிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார் சோயா.

எங்களைப் பற்றி அறியாதவர்களாகவே குழந்தைகள் வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆண், பெண் பாலினம் பற்றி மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாற்றுப்பாலினம் குறித்து அவர்களிடத்தில் விவாதிப்பதில்லை எனவும் ஆதங்கப்படுபவர், வருங்காலத்தில் மாற்றுப் பாலினத்தவர் குடும்பத்தினரால் கைவிடப்படாமல் அவர்களும் நேசிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் விதைக்sகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)