அசிடிட்டி தடுக்க… தவிர்க்க! (மருத்துவம்)

Read Time:7 Minute, 38 Second

குடல் மற்றும் கல்லீரலுக்கான மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா

சமீபகாலமாகவே, பெரும்பாலானவர்கள் அசிடிட்டி பிரச்னையால் அவதிப்படுவதை கேள்விப் படுகிறோம். இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னையாக அசிடிட்டி மாறிவரக் காரணம் என்ன.. அசிடிட்டி ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  இரைப்பை குடல் மற்றும் கல்லீரலுக்கான சிறப்பு மருத்துவர்
ஜி.பிரசாந்த் கிருஷ்ணா.

அசிடிட்டி என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது..

பொதுவாக நமது உடலில் இயற்கையாகவே சிறியளவிலான ஆசிட் சுரப்பு இருக்கும். இது எதற்காக என்றால், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கானதாகும். இந்த ஆசிட்டானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போதுதான் அசிடிட்டி ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை சரியான அளவு உணவு உட்கொள்ளாதது மற்றும் தொடர்ந்து மது அருந்துதல், வலி நிவாரணி மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்வது போன்றவற்றினால் ஆசிட் அதிகளவு சுரக்கிறது.
இந்தஅதிகளவிலான ஆசிட் என்ன செய்யும் என்றால் நமது வயிற்றில் உள்ள லேயர்ஸை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கி வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இது இன்னும் ஆழமாக சென்று அரிக்கும்போதுதான் அல்சராக மாறுகிறது.

இந்த அசிடிட்டி ஏற்பட மற்றொரு காரணம், காரம், உப்பு, புளிப்பு மூன்றும் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதனாலும் ஏற்படும். அதுபோன்று நாம் சரியாக சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், செரிமானத்தில் பிரச்னைகள் இருப்பது, புகை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவது,  உடல் எடை அதிகம் இருப்பது, வயது முதிர்தல், வெப்பமான சூழலில் அதிகம் இருப்பது போன்றவையும் அமிலத்தன்மையை பெருக்கி, அசிடிட்டியை உருவாக்கும்.

அசிடிட்டியின் அறிகுறிகள் என்னென்ன..

நெஞ்செரிச்சல் அதாவது வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படுவது, புளித்த ஏப்பம், நாள்பட்ட சளி, வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இதுவே, தொடர்ந்து நீடித்தால், நிறைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது குரல்வளை வீக்கம், நாள்பட்ட வறண்ட இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், நுரையீரல் மற்றும் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் (மிகுந்த வயிற்று எரிச்சலோடு), அல்சர் போன்றவை ஏற்படக்கூடும்.

சிகிச்சைகள்

நெஞ்செரிச்சல் உணர்வு சில நாள்களாக தொடர்ந்து இருக்கிறது என்றால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அசிடிட்டி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் இருக்கிறதா இல்லை அல்சர் கட்டத்தில் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் அசிடிட்டி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதற்கு தகுந்த சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

இந்த அனைத்து கட்டங்களையும் தாண்டி தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைக் கூட மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி பொதுவான சிகிச்சை என்று எடுத்துக் கொண்டால், நாம் முதலில் செய்ய வேண்டியது நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதுதான். தினசரி உணவை நேரத்துக்கு உண்ணுவது, உணவில் காரம் குறைத்துக் கொள்வது, தண்ணீர் நிறைய குடிப்பது, மது பழக்கத்திலிருந்து விடுபடுவது இவற்றை கடைபிடித்துக்கொண்டு, அதன் கூட மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அசிடிட்டி ஏற்பட்டதும் எடுத்துக் கொள்ள வேண்டிய முதலுதவி என்ன..

அசிடிட்டியைப் பொருத்தவரை, முதலுதவி என்று சொல்லுவதைவிட, நெஞ்செரிச்சல் அதிகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு இது அசிடிட்டியினால் ஏற்படும் வலியா அல்லது ஹார்ட் அட்டாக்கிற்கான வலியா என தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் அசிடிட்டி என்று நினைத்து தானாகவே மருந்தகத்தில் மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு, அதன்பிறகும் சரியாகாமல் ஒரு 6 மணி நேரம் கடந்து வரும்போது, காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, வலியை வித்தியாசமாக உணர்கிறார்கள் என்றால் உடனே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. ஏனென்றால் அசிடிட்டி உயிருக்கு ஆபத்தானது கிடையாது. ஆனால், அசிடிட்டி மாதிரியே வலி கொடுக்கிற ஹார்ட் அட்டாக் உயிருக்கு ஆபத்தானது. எனவே, வலி அதிகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

செய்யவேண்டியவை

நெஞ்செரிச்சலாக இருக்கிறது என்று, உணவு உண்பதை தவிர்க்கக் கூடாது. பசி ஏற்படவில்லை என்றாலும், தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி  செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மதுப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். காபி, டீ போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. இவற்றையெல்லாம் கடைப்பிடித்தாலே அசிடிட்டியில் இருந்து விரைவில் விடுபடலாம்.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post ரத்தத்தை சுத்தமாக்க எளிய 7 வழிகள்! (மருத்துவம்)