கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகள் வாழ்க்கையில் குறும்புத்தனங்களும், விஷமங்களும் நிறைய காணப்பட்டாலும் நாம் அதை ரசிக்கத்தான் செய்கிறோம். அதே சமயம் பிள்ளைகள் விஷமங்கள்தான் செய்வார்கள் என்கிற முடிவுக்கும் வர முடியாது. அவர்களுக்கு துன்பப்படும் பிள்ளைகளிடம், பெரியவர்களை விட அனுதாபம் உண்டு. அன்பும் அளவுக்கு அதிகமான பிரியமும் கொண்டவர்கள் பிள்ளைகள்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் ஒரு பக்கம் சிரமப்பட்டாலும், அந்த அளவுக்கு உடன்பயிலும் மாணவர்கள் சிரத்தையோடு இவர்களை கவனிப்பர். ஐந்தாம் வகுப்பு வரை எல்லாப் பிள்ளைகளையும் போல் வளர்ந்த சிறுவன் ஒருவன், ஆறாம் வகுப்பிற்குப் பின் கால்கள் செயலற்று, தூக்கி அழைத்து வரும் நிலைமை ஏற்பட்டது. பள்ளி வாசல்வரை வண்டியில் அழைத்து வரும் நிலைமை ஏற்பட்டது. பள்ளி வாசல்வரை வண்டியில் அழைத்து வந்தாலும், அங்கிருந்து அவனை வகுப்பறை வரை தூக்கித்தான் செல்ல வேண்டும்.
அப்பா தூக்கி அழைத்துவர, அம்மா அவனை இருப்பிடத்தில் அமர்த்தி, புத்தகப்பை, சாப்பாடு, தண்ணீர் அனைத்தையும் வைத்து விட்டு, அருகிலிருக்கும் பிள்ளைகளிடம் சொல்லி விட்டுச் செல்வது வழக்கம். அந்தப் பிள்ளை மாலை தாய், தந்தை வந்து அழைத்துச் செல்லும் வரை இயற்கை உபாதைகளைக் கூட பொறுத்துக் கொண்டு அமர்ந்திருப்பான். ஒவ்வொரு ‘பீரியட்’ முடிவிலும் அருகில் இருக்கும் பிள்ளைகள் அந்தந்த பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார்கள்.
அவன் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். வகுப்பில் எதுவும் பேசமாட்டான். பாடங்களை நன்கு கவனிப்பான். எப்பொழுதும் தூய்மையாகக் காணப்படுவான். கணித பாடம் மிகவும் அருமையாக சுலபமாக செய்து விடுவான். அவனுக்கு கால்கள் செயல்பட முடியாது என்பதற்காகவே அவன் வகுப்பை கீழே கொடுத்திருந்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட பையனுக்காக, பள்ளியின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அபரிமிதமாக இருந்தது. பெரிய வகுப்புகளுக்குச் செல்ல செல்ல, அவன் வளர்த்தியும் அதிகமானது. அவனின் தாய் ஒரு தேவதை என்றே கூறலாம். சிரித்த முகத்துடன், அவனை தூக்கி அமரவைக்கும் பொழுது, துளிக்கூட சிரமம் காட்டாமல், தான் ஒரு பொறுப்புமிக்க தாய் என்பது போன்ற பெருமிதத்தைத்தான் காட்டுவார்.
விளையாட்டு நேரம் வந்து விட்டால் எல்லோரும் வகுப்பறையை விட்டு மைதானத்திற்குச் செல்ல வேண்டும். அப்பொழுது அவனைத் தனியே விட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக பிள்ளைகள் தங்களுக்குள் யார் வகுப்பறையில் அவனுடன் தங்குவது என்று பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு விளையாட்டு வகுப்பிற்கும் இரண்டு பிள்ளைகள் அவனுக்குத் துணை தருவது என்று முடிவெடுத்து, அவனுடன் பேசிக் கொண்டே உள்விளையாட்டு ஏதேனும் விளையாடுவர்.
அவனை எந்த விதத்திலும் தனிமைப்படுத்த விடாமல், பார்த்துக் கொள்வதில் பிள்ளைகள் அவ்வளவு அக்கறை காட்டினார்கள். பத்தாம் வகுப்பிலிருந்து, மாணவர்களுக்கு பரிசோதனைக் கூடங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அம்மாணவனின் வகுப்பும் மேலேயுள்ள பரிசோதனைக் கூடமருகில் மாற்றப்பட்டது. அவனை மேலே அழைத்து வருவதற்கு ‘லிப்ட்’ அனுமதி தரப்பட்டது. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ‘லிப்ட்டில்’ தூக்கிக் கொண்டு வந்தாலும் ‘லிப்ட்’ வாயிலிருந்து வகுப்பறைவரை சுமந்துதான் வரவேண்டியிருந்தது.
மாலை அவன் பெற்றோர் வரும் வரை பிள்ளைகள் காத்திருந்து, பெற்றோர் அவனை அழைத்துச் சென்றபின்தான் வெளியேறுவர். பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் சமயம், அவன் அவ்வப்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டான். முகம் ‘டல்’லாகி சோர்ந்து மயங்கி விடுவான். இதைக்கண்ட அவன் நண்பர்கள் கவனம் அவன் மீது பதிய ஆரம்பித்தது. பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு அவனுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டது.
பரீட்சை சமயம் தேர்வாளர்கள் அடிக்கடி திடீர் சோதனையிடுவது வழக்கம். ஊசி கீழே போட்டால் தெரியாத அளவு நிசப்தம். மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். மேலே சொன்ன மாணவனின் நெருங்கிய நண்பன், எங்கே தன் நண்பன் மயங்கி விடுவானோ, அவனுக்குத் தண்ணீர் தேவைப்படுமோ, ஏதாவது வேண்டுமானால் அவன் கேட்கக் கூட மாட்டானே என்றெல்லாம் யோசித்து நண்பனைப் பார்த்து கண்ணால் பேச நினைத்துத் திரும்பினான். அவ்வளவுதான்! பின்னால் வந்த தேர்வாளரிடம் மாட்டிக் கொண்டான்.
தேர்வாளர் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பியவனின் பெயரையும், தேர்வு எண்ணையும் குறித்துக் கொண்டார். பாவம், உதவி மனப்பான்மையில் திரும்பிய அவனுக்கு ‘குபீர்’ என்று வியர்க்க, மனம் ‘படபட’ வென அடிக்க ஒருவித பயத்துடனேயே தேர்வு எழுதி முடித்தான். ‘பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்’ என்பது போல பாதிக்கப்பட்ட மாணவன் நன்கு தேர்வு
எழுதிவிட்டான். அவனைப் பற்றிய அனுதாபத்தில் திரும்பியவன் மாட்டிக் கொண்டான். தேர்வு முடிந்தபின் அனைத்தும் பேசப்பட்டு, அதிகாரியும் உண்மை நிலையை புரிந்து கொண்டார். தன்னால் நண்பனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து மாணவனும் அவன் பெற்றோரும் மனம் வருந்தினர்.
பிள்ளைகளுக்குள் நிறைய தியாக உணர்வுகள் காணப்படுகின்றன. மற்றவரைப் போல் இந்தப் பையனும் தேர்வில் மும்முரமாக எழுதியிருக்கலாம். ஆனால் கால்கள் முடியாத பையன் எப்படி மூணு மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதுவான். அவனுக்குத் தண்ணீர் கூட எடுத்துக் குடிக்க முடியாதே என்ற பாவனையில் கேட்பதற்காகத்தான் திரும்பியிருந்தான். நல்ல எண்ணத்திற்கு கடவுள் அவனை பெரிய பிரச்னையிலிருந்து அனைத்தையும் புரிய வைத்துக் காப்பாற்றி விட்டார்.
பிள்ளைகள் எப்பொழுதுமே நண்பர்களை உடன்பிறப்புக்கள் போன்று தான் பார்ப்பர். அத்தகைய வகையில் மேலே சொன்ன பையனும் தனக்கு உள்ள குறையைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. பள்ளியை முடிக்கும் பொழுது அவன் தாயின் கண்ணீர் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அவனுக்கு சிரமம் இல்லாமல் தரும் கல்வியை பெற்றோர் நிச்சயித்தனர்.
காலத்தின் கோலம், விதியின் கொடூரம் அவன் வாழ்க்கை முடிந்தது. அவனின் நினைவுகள் யாருக்கும் மனதிலிருந்து அழியவில்லை. இப்படியெல்லாம் சில சந்தர்ப்பங்கள் நம் வாழ்வில் மறக்க முடியாமல் நிலைத்து விடுகின்றன. காரணம் பகல் பொழுதின் பெரும்பாகம் நம் வேலை செய்யும் இடத்தில் செலவிடுகிறோம். அதுவே நிஜ வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் நேரத்தில் சுமார் பத்து மணி நேரமாவது இரவுப் பொழுதாகிறது.
அப்பொழுது நம் நினைவலைகள் களைப்பிலும், உறக்கத்திலும் சென்று விடுகிறது. ஆக மொத்தம் கற்பிப்பவருக்கு வாழ்க்கையின் பெரும்பகுதி பிள்ளைகளுடன் தான் அமைகிறது. ஒரு தாயாக அவர்கள் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஒரு ‘நர்ஸ்’ போன்று செயல்பட வேண்டிய சூழல்கள் ஏற்படும். ‘டீன் ஏஜ்’ என்று சொல்லக் கூடிய இளமையில் இவர்களுக்கு உற்ற தோழனாகவோ, தோழியாகவோ செயல்பட்டால் தான், அவர்களை நேர்மையான பாதையில் வழி நடத்திச் செல்ல முடியும்.
வீட்டிலும் கட்டுப்பாடுகள் அதிகமென்றால், அவர்கள் மனநிலையை புரிந்து கொண்டு வழிநடத்துதல் அவசியமாகிறது. பிள்ளைகள் மனதைப் புரிந்து கொள்ள மனோதத்துவம்தான் படித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு கற்பிப்பவராக இருந்து பிள்ளைகளுடன் ஒன்றிப் பழகினாலே, அவர்கள் மனதை புரிந்து கொள்ள முடியும். பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் இவை தேவை.
முதல் மதிப்பெண் எடுக்கும் ஒரு மாணவனின் பாட்டி, அந்தக் காலத்தில் தமிழ் இலக்கியம் படித்தாராம். தன் பேரனுக்கு எல்லா வகையிலும் உதவி ெசய்ய நினைத்து ‘படி-படி’ என்று கூறிக் கொண்டே இருந்திருக்கிறார். எப்பொழுதும் ‘படி-படி’ என்கிற வார்த்தையைக் கேட்டு அவன் வெறுப்படைந்து நாளடைவில் பாட்டி பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் இருக்க, அவன் அம்மாவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாம். அம்மாவுடன் சேர்ந்து பேசினால் பையன் மேலும் வெறுப்படைவான். பையனுக்குப் பரிந்து பேசினால், தன் தாய் வருத்தப் படுவார்கள். இந்த விஷயத்தை ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினோம். பெரும்பாலான வீடுகளில் இது போன்ற பிரச்னைகள் நிறையவே காணப்படுகின்றன. எப்பொழுதும் பிள்ளைகளை ‘படி படி’ என சொல்வதை அவர்கள் விரும்புவதேயில்லை. ரொம்பவும் மும்முரமாக ஏதோ ஒரு விஷயத்தை நாடுகிறார்களென்றால், புரிந்து கொண்டு சிறிது விட்டுப் பிடிக்க வேண்டும். ‘எப்பொழுது தேவையோ அப்பொழுது உதவுகிறேன்’ என்று சொல்லலாம். ‘உனக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், நான் அதை சொல்லித்தருகிறேன்’ என்று கூறினால் போதும். நீங்கள் உதவ தயாராக உள்ளீர்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தால் போதும். கண்டிப்பாக நாடி வருவார்கள்.
ரசுத் தேர்வுக்கு தயார் செய்யும் பொழுது, சில பொதுக்கட்டுரை, தலைப்புகளைத் தந்து தயாரிக்கச் சொன்னோம். முதல் மதிப்பெண் பெறும் மாணவனையும் ‘பாட்டியிடம் உதவி கேட்டு எழுதிவா’ என்றவுடன் அவனுக்கு ஒரே குஷி. ‘ஓ! பாட்டி திறமைசாலி என்பது இவர்களுக்குத் தெரிந்துள்ளதே!’ என ஆச்சரியப்பட்டு, பாட்டியிடம் கேட்டு தயார் செய்ய ஆரம்பித்தான். பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம். உண்மையில் அவர்களும் திறமையானவர்கள்தான்.
முதல் மதிப்பெண் தொடர்ந்து எடுத்து பாட்டிக்கும் பெருமை தேடித் தந்தான். பிள்ளைகள் மனம் எதை நினைக்கிறதோ, அதைத்தான் செயல்படுத்துவார்கள். கண்டிப்பாக பேசுவதை விட, விருப்பத்தை எடுத்துச் சொல்லி, அதனால் கிடைக்கும் சலுகைகளை பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும். எப்பொழுதும் நம் அறிவுறுத்தலுக்காக படித்துக் கொண்டேயிருக்கும் பிள்ளைகள் எல்லோரும் முதல் மதிப்பெண் பெற்றுவிடுவர் என்று கூற முடியாது. ரொம்ப சாதாரணமாக காணப்படும் சிறுவன் மிக அதிக மதிப்பெண் எடுத்து விடுவான். காரணம் அவனுக்கு கேள்வி ஞானமும், ஞாபக சக்தியும் அதிகமாக இருக்கலாம்.
சில பிள்ளைகள் தனித்து அமர்ந்து தன் பாடங்களை பொறுப்புடன் செய்வர். சில பிள்ளைகள் தற்சமயம் ‘சேர்ந்து படித்தல்’ என்கிற பெயரில் நண்பர்களோடு பகிர்ந்து படிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். உண்மையில் தெரியாதவர்கள், தெரிந்த பிள்ளைகளிடம் தேர்வுக்கு முன்பாகக் கேட்டு அறிந்து கொள்வார்கள். பல மாதங்கள் புத்தகத்தில் படித்ததை சில மணி நேரங்களில் நண்பர்களிடம் கேட்டுப் படிப்பர்.
ஒரு சமயம் பள்ளியருகே இருந்த ஒரு நண்பன் வீட்டுக்கு நான்கைந்து பிள்ளைகள் சென்றிருந்தனர். அன்று பள்ளி அரைநாளாக இருந்ததால் ஒரு மணிக்கு முடிந்து விட்டது. மூணுமணி வரை விசேஷ வகுப்பு என்று வீட்டில் சொல்லி விட்டு நண்பன் வீட்டில் குழுமினர். ஒன்று சேர்ந்து ஆட்டம் போட்டதில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை! அவர்கள் பெற்றோர் மூணு மணிக்கு பள்ளி வாசலில் வந்து தேடிய போது காவலாளிக்கு ஒரே பீதி. பள்ளி முழுவதும் காலி. ஒரு ஈ, காக்கா கூட காணப்பட வில்லை. வந்த பெற்றோர்கள் ஒரே அதிர்ச்சியில் உறையவே, காவலாளிக்கு யோசனை ஏற்பட்டது. நாலு வீடுகள் தள்ளி காணப்படும் பையன் வீட்டின் மாடியிலிருந்து, ஒரே பாட்டு சப்தமும், பேசும் இரைச்சலுமாக காணப்பட்டது.
பெற்றோரை நிற்க வைத்து விட்டு குறிப்பிட்ட பையனின் வீட்டின் அருகில் சென்றார். சந்தேகமேயில்லை. இது மாணவர்களின் குரல் என்பதை கண்டுபிடித்து விட்டார். மெதுவே உள்ளே சென்று பிள்ளைகள் பெயரைக் கூப்பிடவும், ஒவ்வொருவராக வெளியே ஓடிவந்தனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு நேரமாகிவிட்டது என்ற நினைப்பும் வந்தது. ஒரு வழியாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். மறுநாள் காவலாளி இந்நிகழ்வை தலைமை ஆசிரியரிடம் கூற, பெற்றோர்கள் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது. பிள்ளைகள் பள்ளி இறுதி நாள் பிரிவுபசார விழாவிற்காக, ஆசிரியர்களைப் பாராட்டி நாட்டிய நாடகம் நடத்த முடிவெடுத்திருந்தனர்.
அதை யாருக்கும் தெரியாத விதத்தில் ‘ஒத்திகை’ நடத்தத்தான் நண்பன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் மகிழ்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணமாக இருந்திருக்கிறது. பெற்றோர் காணாவிட்டால் கவலைப்படுவார்களென்றோ, பள்ளியில் தெரிவிக்காதது தவறு என்பதையோ யோசிக்கவில்லை. இதுதான் பிள்ளைத்தனம் என்பது. அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கம் போல் அன்பான அறிவுரைகள் தரப்பட்டன.
ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்காத குணம் என்பது பிள்ளைகளிடம்தான் காணமுடியும். சாப்பாட்டை பகிர்ந்து உண்பதைப் போல இன்ப துன்பங்களையும் பகிர்வார்கள். ஒரு சிறுவன் விளையாடிவிட்டுப் பசியுடன் ஓடிவந்தான். ஒவ்வொரு சாப்பாடு டப்பாவையும் திறந்து பார்த்தான். அவனுக்குப் பிடித்த உணவு ஒன்றில் இருந்தது. கதவை சாத்தி விட்டு நன்கு ருசித்தான். பின் ‘நன்றி’ என்று எழுதி டப்பாவில் போட்டான். சாப்பிட்ட உணவிற்கு பதில் குறிப்பிட்ட பையன் இடத்தில் சூடான கேண்டின் உணவு இருந்தது! இதுவும் ஒரு திருவிளையாடல்!