கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 39 Second

நம் முன்னோர் காலத்தில் வீட்டில் பத்து பிள்ளைகள் கூட ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். சந்தோஷமாக – உற்சாகமாக இருந்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டம் ஒன்றிரண்டு பிள்ளைகள், நல்ல ஒழுக்கத்துடன் வளர பெரியோர்கள் நிறைய தியாக மனப்பான்மையுடன் செயல்படத்தான் வேண்டிய நிலை. இது காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய வசதிகள் இல்லாத காலத்தில், உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. எல்லோரும் ஆரோக்கியமாக காணப்பட்டார்கள். பிள்ளைகள் விஷயத்திலும் ஓடியாடி சிறகடித்துப் பறந்தார்கள். பிள்ளைகளைப் பொறுத்தவரை, ஏழை-பணக்காரர், ஜாதி-மதம், இனம்-நிறம் எதுவுமே தெரியாது. தெருக்கள் மைதானமாக காணப்பட்டது. கூடி விளையாடுவது, கும்மியடிப்பது, கோலி விளையாடுவது என அனைத்துமே தெருக்களில் நடந்தன. இப்பொழுது கைபேசியும், கணினியும் அவர்களுக்கு மிகச் சிறந்த நண்பர்கள் ஆகி விட்டன.

பெரியவர்களும் அவரவர் வேலைகளில் மும்முரம் காட்ட வேண்டிய நிலை. பிள்ளைகள் என்னதான் செய்வார்கள். உயிரற்றப் பொருட்களிடம் கூட நட்பு கொள்ள வேண்டிய காலகட்டம். உடற்பயிற்சியும் குறைவு. அப்படியே விளையாட்டில் சேர நினைத்தாலும் அதற்கென நேரமும், பண செலவும் ஒதுக்கிட வேண்டும். ஆறுதலுடன் பேச வீட்டில் யாருமில்லை என்றால் அவர்கள் வேறு பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டிய நிலை. கவனம் வேறு திசைகளில் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மன உளைச்சல் ஏற்பட்டு சிறு வயதிலேயே ‘மன அழுத்தத்திற்கு’ ஆளாகிறார்கள். பெற்றோர் நேரம் செலவிடுவதன் மூலம் பிரச்னை தீர்ப்பது எல்லாம் சாத்தியம்.

படிப்பில் கவனம் இல்லாத ஒரு பையன் மற்ற அனைத்திலும் கவனமாக இருந்தான். அதாவது பாடம் எழுதக் கூட அவனுக்கு ஒரு ஆள் வேண்டும். தேர்வு வந்தால் அவனுக்கு தேர்ச்சி பெறும் அளவுக்கு பாடங்களை கற்றுத் தர வேண்டும். வீட்டுப் பாடம் அவனுக்கு செய்து உதவ வேண்டும். அனைத்திலும் தனக்கு உதவ நிறைய பிள்ளைகளை சரிகட்டி வைத்திருந்தான் அவன். எப்படி என்கிறீர்களா? அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வானாம். சாக்லெட், பிஸ்கெட் வாங்கித் தருவானாம். சில நேரங்களில் சாப்பாடும் வாங்கித் தருவானாம். சில ஏழை பிள்ளைகள் அவன் சொல்வதையெல்லாம் செய்து விட்டு அவ்வப்பொழுது காசும் அவனிடம் வாங்கிப்பார்களாம். இவற்றை பற்றியெல்லாம் ஆசிரியரிடமோ, தலைமை ஆசிரியருக்கோ சொன்னால் அவர்களை சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் பயமுறுத்தி விடுவானாம். அதனால் இவைபற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது.

எப்படியோ குறைந்தபட்ச மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தான். விளையாட்டில் மட்டும் உண்மைப் புலி. மாநில அளவிலான போட்டிகளுக்கு சென்று வென்று வருவான். அதை சாக்காக வைத்துக் கொண்டு கைவலி, கால்வலி என்று சொல்லி ஒரு வாரம் பள்ளிக்கு வரமாட்டான். ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகுதான், அவனின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வந்தது. உடன் உதவி வந்த மாணவர்கள், படிப்பு சுமையால் விலக ஆரம்பித்தார்கள். அவனால் எந்தப் பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஓரளவு வீட்டுப் பாடங்களையாவது செய்து வந்தவன் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது. அவன் பெற்றோரிடம், அவனைப்பற்றி எடுத்துக்கூற வேண்டுமென நினைத்து, பெற்றோரை அழைத்தோம். பிறகுதான் எங்களுக்கு அவனின் குடும்பநிலை, சூழல் அனைத்தும் புரிந்தது.

உன்மையில் அவன் வெகுளியான பையன்தான். அவனின் வீட்டு சூழலும், வளர்ந்த விதமும் அவனை மாற்றியிருந்தது. அவனுக்குத் தாய் இல்லையாம். தந்தை அவனை வளர்ப்பதற்காகவும், பரம்பரை சொத்துக்களை பராமரிப்பதற்காகவும் இரண்டாவது மணம் செய்து கொண்டாராம். சில வருடங்களில் நோயுற்று அவரும் இறந்து விட்டாராம். வளர்ப்பு தாய் படிக்காதவர். சொத்துக்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாராம். உயர்ந்த பள்ளியில் நன்கு படிக்கட்டும் என்றுதான் நினைத்துள்ளார். ஆனால் அவர் பலருக்கு பண உதவி செய்து அதன் மூலம் வட்டியும் பெற்று வந்திருக்கிறார்.

தினந்தோறும் இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்த பையனின் மனதிலும் சில எண்ணங்கள் தோன்றின. தன் வீட்டில் நிறைய பணம் இருக்கிறது. தானும் பணம் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்து ஊன்றியிருந்தது. தினமும் பணம் எடுத்து வந்து, உதவியவர்களுக்கு பொருட்கள் வாங்கித் தந்திருக்கிறான். அவன் உதவ வேண்டும் என்று நினைத்ததில் தவறேயில்லை. ஆனால் பணம் தந்து வேலைகள் பெறுவது என்பது அந்த வயதில் ஒரு தேவையற்ற நெறி என்று கூட சொல்லலாம். அவனுக்கும் வயது முதிர்ச்சி இல்லை. எப்படியோ நம் வேலைகள் நடைபெற வேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது.

சிறு பிள்ளைகள் அறியாத வயதில், அவர்களுக்கு விருப்பமான பொருள் கிடைத்து விட்டால், எந்த உதவியும் செய்வார்கள். “பெரிய ‘சாக்லெட்’ தருகிறேன்” என்று சொல்லி விட்டாலே மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று விடுவார்கள். நிறைய வீடுகளில் பெரும்பாலான அம்மாக்கள் இதைச் சொல்லியே அனைத்து வீட்டுப்பாடங்களையும் செய்ய வைத்து விடுவார்கள். இது எல்லாமே சிறு வயதில்தான் சாத்தியம். உயர்ந்த வகுப்புகளுக்கு வந்து விட்டால், அவர்களுக்கு அனைத்தும் புரியும்.

மேலே சொன்ன பையனின் நிலையிலும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. நண்பர்கள் பெரிய வகுப்பு வந்தவுடன் பொறுப்புடன் தங்கள் பாடத்தில் கவனம் செலுத்தி விட்டார்கள். மேலே சொன்ன பையனால் எதுவும் செய்ய இயலவில்லை. அவனுக்கே புரிந்து விட்டது. இனி தனக்கு நண்பர்கள் பாடம் எழுதித் தரமுடியாது. ‘தன் கையே தனக்குதவி’ என்று புரியும் பொழுதுதான், பணத்தாலும் வேலை நடை பெறாது. கஷ்டப்பட்டு படித்துதான் ஆகவேண்டும் என்பதை புரிந்து கொண்டான்.

பிள்ளைகள் எதிரில் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான், பிள்ளைகள் அவ்வழி நடப்பர். நமக்கே தெரியாமல் நம் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் அவர்களை பாதிக்கச் செய்கிறது என்பதை எல்லாம் எடுத்துரைக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும், இப்பொழுது இது பற்றி எல்லாம் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

குறிப்பிட்ட பையன் பாவம். தந்தையுமில்லாமல், பெற்ற தாயுமில்லாமல் மற்றொருவர் வளர்ப்பில் வளர்ந்ததால் அவன் மனம் அப்படியிருந்தது.ஆனால் வெகு சீக்கிரம் அனைவராலும் விரும்பப்படும் மாணவனாக மாறி விட்டான். ஆசிரியைகளிடம் தாய் அன்பைப் பெற்று விட்டதாகக் கூறினான். விளையாட்டுடன் மட்டுமல்லாமல், பிடித்த விஷயங்களை சிறப்பாகச் செய்ய ஊக்குவித்தால் பெருமையுடன் சாதிக்க ஆரம்பித்தான். சிறு வயதில் எளிதாக அவர்களை திருத்தச் செய்ய முடியும். குடும்ப சூழலும் சரியில்லாமல், அவன் சூழலை புரிந்து அவனுக்கு உதவும் ஆளில்லாமல், கண்டு கொள்ளாமல் விடப்படும் ஒரு சில பிள்ளைகள் மட்டும்தான் வழி மாறுகிறார்கள்.

பெரும்பாலான பிள்ளைகள் சூழல் காரணமாகத்தான் சிறிய சிறிய தவறுகளை தெரியாமல் செய்ய முயல்கிறார்கள். எப்பொழுது அவர்கள் செய்வது தவறு என்று புரிந்து தன்னை திருத்திக் கொள்ள முயல்கிறார்களோ, அப்பொழுதே ஒழுக்கம் படைத்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். இளமைப்பருவம் எதையும் புரிந்து கொள்ளக்கூடிய பருவம். சொல்லி திருத்துவதும் சுலபம்தான். பல வருடங்கள் தவறுகளில் ஈடுபட்டவர்களை திருத்துதல் என்பது சுலபமல்ல. ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை வேண்டுமென எந்தத் தவறையும் செய்ய மாட்டார்கள்.

அவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டு முன், ஒழுக்கத்தில் நல்லவர்களாக இருப்பதில் நம் கவனம் நன்கு இருக்க வேண்டும். முதல் மதிப்பெண் எடுத்து, சுய நலத்தோடு செயல்பட்டால் அது நல்ல குணமாகாது.படிப்பில் சுமாராக இருந்தால் கூட போதும்! ஒழுக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவனுக்கு நல்ல அறிவு கிட்டும். பல மொழிகள் பேசும் மாணவர் கூட்டத்தில், ஒரு பையன் எப்பொழுதும் ஏதேதோ பேசி, மற்றவர்களை மட்டமாக நடத்தியிருக்கிறான்.

அவன் பேசுவதன் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாமல் சிரித்திருக்கிறார்கள். எல்லோரும் சிரிக்கவே தன்னை ஆதரிக்கிறார்கள் என்று நினைத்து மேலும் சில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறான். ஒரு பையனுக்கு அவன் சொன்ன வார்த்தைகளில் ஏதோ சந்தேகம் ஏற்படவே, சிலரிடம் அதன் அர்த்தத்தைக் கூறும்படி சொல்லியிருக்கிறான். அர்த்தம் புரிந்தவர்களுக்கு அதைச் சொல்லக்கூட முடியவில்லையாம். அப்படி ஒரு மோசமான வார்த்தையாம். இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர்களுக்கும், அவ்வார்த்தையை பயன்படுத்திய பையனிடம் வைத்திருந்த அன்பும், அபிப்ராயமும் மாற ஆரம்பித்ததாம். ஒரு நாள் அவனை அழைத்து அவன் இருப்பிடம் – பெற்றோர் பற்றியெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அப்பொழுதுதான் ஆசிரியர்களுக்கும் அவனின் பின்புலம் தெரிய ஆரம்பித்ததாம்.

அந்தப் பையன் மிகவும் புத்திசாலியான, வெள்ளை மனம் கொண்டவன்தான். அவன் இருப்பிடம் அப்படி மோசமான சூழலில் இருந்ததாம். உடன் விளையாடும் பிள்ளைகளும் அதே சூழலில் இருப்பார்களாம். சர்வசாதாரணமாக வேண்டாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக கேள்விப்பட்டோம். பையனின் குடும்ப சூழலும் சரியில்லாத நிலையில் அவனாவது நன்கு படிக்கட்டும் என்று கருதிதான் உயர்ந்த பள்ளியில் சேர்த்திருந்தார்கள். அவனும் படிக்கத்தான் செய்தான். இருப்பினும் வாழும் சூழலும், குடும்ப சூழலும் சரிவர அமையாததால், அவனுக்கு சில குணங்கள் ஒட்டிக் கொண்டன. பின் தனித்து அவனுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தோம்.

அவன் வேறு இடத்திற்கு வீடு மாறினானாம். முன்பு தலை கூட வாறாமல், இஸ்திரி செய்யாமல் கசங்கிய சட்டையுடன்தான் வருவானாம். யாரோ அவனுக்கு(யூனிஃபார்ம்) சீருடை இரண்டு வாங்கித் தந்தார்களாம். மறு ஆண்டு ‘அவனா இவன்’ என்று கேட்குமளவுக்கு மாறியிருந்தான். ‘பளிச்’சென துவைத்து இஸ்திரி செய்யப்பட்ட உடை, நன்கு சீவிய தலைமுடி, ‘பாலிஷ்’ செய்த ‘ஷூ’ என கம்பீரமாக காணப்பட்டான்.

இவற்றில் அவனின் குறைகள் எதுவுமே கிடையாது. தாய், தந்தை ஏதோ சிரமப்பட்டு சாப்பாடு கிடைத்தால் போதும் என்கிற அளவில் குடும்பம் இருந்திருக்கிறது. இப்பொழுது போல் நிறைய நிறுவனங்கள் உதவி செய்ய முன் வந்தனவா… அவர்கள் தொண்டு நிறுவனங்களை அணுகினார்களா என்பதெல்லாம் கூட நமக்குப் புரியவில்லை. முப்பது-நாற்பது வருடங்களுக்கு முன் ‘கைப்பேசி’ ‘வாட்ஸ்அப்’ பற்றியெல்லாம் நாமே அறிந்திருக்க மாட்டோமே! இப்பொழுது இயலாதவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவி செய்யவும், சாப்பாடு வழங்கவும் எத்தனையோ உதவிக்கரங்கள் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு செய்திகள் அனுப்புகின்றனவே!

முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் இப்பொழுது முற்றிலும் மாறி விட்டது. நிறைய விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. கல்வியில் எத்தனைஎத்தனையோ பிரிவுகள் வந்து விட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகள் காணப்படுகின்றனர். படித்தாலும் சுயமாக சம்பாதிக்க எந்தத் தொழிலும் கௌரவமாகக் கருதப்படும் காலம் வந்து விட்டது. அதுவும் ‘கொரோனா’ என்ற கொடிய நோய், கோடீசுவரரையும் தாக்கியது. கோடியில் இருந்தவரையும் கொடுமையில் தள்ளியது. இப்போது மாணவ சமுதாயம் நிறைய மனக்குழப்பத்தில் காணப்படுகிறார்கள். பழைய நிலை திரும்பி எப்பொழுது பள்ளிக்குப் போவோம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் பிள்ளைகளின் பள்ளி வாழ்க்கை என்பது நீண்ட தூர பயணமாதலால், வீடும் பள்ளியும் அவர்கள் வளர்ந்து ஆளாவதற்கான இடமாக அமைந்து விடுகிறது. தங்களுக்குள் ‘நட்பு’ வட்டம் என்பதை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் நிறைய போட்டா போட்டிகள். ஆனால் பெரியவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டைகள் அல்ல அவை. ஆரோக்கியமான உறவுகள் அவர்களிடம் மட்டும்தான் உண்டு.

எவ்வளவு சண்டையிட்டாலும், மன்னிப்பு என்கிற ஒரே வார்த்தையில் அனைத்தும் மறந்து போகும். அதனால், பிற்காலத்தில் அவர்கள் என்னவாக திகழ நினைக்கிறார்களோ அந்தக்கனவை விதைக்க வேண்டும். அது சிறிது சிறிதாக வளர்ந்து தன்னம்பிக்கை என்னும் ஊக்கத்தை ஏற்படுத்தும். சிறிய வயதில் பணம்-காசு, நம் அந்தஸ்து இவைபற்றியெல்லாம் அவர்களிடம் பேசவும் தேவையில்லை. ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒழுக்கத்தை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்த்தால் போதும். அத்தகைய வளர்ப்பு வீட்டில் கிடைத்து பள்ளியிலும் அடைந்து விட்டால், அவனால் சமூகத்தை எதிர்கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்! (மகளிர் பக்கம்)
Next post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-ஸ்வீட் எடு, கொண்டாடு!! (மருத்துவம்)