பெண்களுக்கு ஊன்றுகோலாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
பெண்கள் பல துறையில் தங்களின் அடையாளத்தினை பதித்து வருகிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை. ஆனால்… அதில் எத்தனை பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு சிறு கையளவுதான். காரணம், இப்போதுள்ள தனியார் நிறுவனங்கள் பெண்களை நியமித்தாலும், அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தருகிறதா என்ற கேள்விக்கான விடைதான் ‘அவதார்’ நிறுவனம் வழங்கிய அவதார் விருதுகள்.
2005ல் சவுந்தர்யா ரஜேஷ், பெண்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கினார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ெபண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார். குறிப்பாக, சில காரணங்களால் வேலையினை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்காகவே இந்த நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
‘‘நான் இந்த நிறுவனத்தை அமைக்க முக்கிய காரணம் என் பாட்டி. அவங்க தான் வீட்டினை நிர்வகித்து வந்தாங்க. அவங்களுக்கு ஆண்-பெண் என்ற பாகுபாடு கிடையாது. எங்க வீட்டில் எல்லா பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. நானும் எம்.பி.ஏ முடிச்சிட்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். மூன்று வருடத்தில் வங்கியில் எனக்கு நல்ல வளர்ச்சி கிடைச்சது. இதற்கிடையில் எனக்கு திருமணமானது. குழந்தை, குடும்பம் என என் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
அதன் பிறகு என்னால் வேலையினை தொடர முடியவில்லை. நான் வேலையை ராஜினாமா செய்த போது என் நிறுவனம் என்னால் ஏன் வேலையினை தொடர முடியவில்லைன்னு யோசிக்கல. நாங்க சந்திக்கும் பிரச்னைக்கும் தீர்வினை நிறுவனங்களாலும் அளிக்க முடியவில்லை. இதற்கான தீர்வினை கொடுக்க வேண்டும் என்பதால் நான் மறுபடியும் வேலைக்கு செல்ல நினைத்தேன். நேர்காணலுக்கு சென்ற போது… நான் என்னுடைய குடும்பம் காரணமாக எடுத்த அந்த இடைவேளை பெண்களால் தொடர்ந்து வேலையில் நிலைத்து இருக்க முடியாது என்றார் அந்த நிறுவன ஊழியர். அவர் பேசியதை பார்த்த போது அவர் எனக்கு வேலை தர வாய்ப்பில்லை என்று நினைத்தேன். ஆனால், என்னை வேலையில் நியமித்தார். ஆனால் நான் முன்பு வாங்கிய சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளம் நிர்ணயித்தார்.
என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில குடும்ப பொறுப்பு காரணமாக வேலையை கைவிடும் பெண்களுக்கு மீண்டும் ஏன் வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்ற சிந்தனை என்னை மிகவும் பாதித்தது. அந்த எண்ணம் தான் பெண்களுக்காக ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. அவதார் உருவாக அதுவும் ஒரு காரணம்’’ என்றவர் பலதரப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார்.
‘‘ஒரு பெண் வேலைக்கு போவது அவ்வளவு எளிதல்ல. காரணம் அவள் வீட்டையும் பார்க்க வேண்டும். அதே சமயம் வேலையிலும் முழு கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கான பாதையினை அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் ஏற்பாடு செய்து தர வேண்டும். பெண்களுக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமைக்கு ஏற்ப 100 சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதினை 2016ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறோம்.
பெண்கள் படிப்பை முடித்துவிட்டு அவர்கள் படிப்பு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்கிறார்கள். நிறுவனங்களும் அவர்களுக்கான சம்பளம் தருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த நிறுவனம் எல்லா விதமான பாதுகாப்பினை கொடுக்கிறதா? அதாவது ஒரு ெபண் திருமணமாகி பிரசவ விடுமுறைக்காக சென்று அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும் போது அவர்களை சரியாக நடத்துவதில்லை. காரணம், இவர்களுக்கு குழந்தைகள் தான் முதன்மையாக இருப்பார்கள். வேலையில் கவனம் செலுத்த முடியாது என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் தாண்டி ஒரு பெண்ணிற்கு ஊன்றுகோலாகவும் சில நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை கவுரவிப்பதற்காகவே நாங்க இந்த விருதினை வழங்கி வருகிறோம். இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றாங்க. அவர்களுக்கு நாங்க ஒரு விண்ணப்பம் அனுப்புவோம்.
அதில் 400 கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு ஒவ்வொரு நிறுவனமும் தகவல்களுடன் பதில் அளிக்க வேண்டும். அதாவது அவர்களின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களில் எத்தனை பேர் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை அவர்கள் தகவல்கள் மூலமாக குறிப்பிட வேண்டும். நாங்க இந்த கேள்வியினை மூன்று பாகமாக பிரித்திருக்கிறோம். அதாவது ஒவ்வொரு நிறுவனமும் அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு என குறிப்பிட்ட கொள்ைக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை பல நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. அந்த கொள்கைகள் இன்றும் நிலையில் உள்ளதா என்பது குறித்த கேள்விகள் ஒரு பாகமாக அமைக்கப்பட்டு இருக்கும். அடுத்து பயன்பாடு.
இந்த கொள்கைகள் சரியான முறையில் பெண்களுக்கான பயன்பாட்டில் உள்ளதா என்பது இரண்டாவது பாகம். கடைசியாக தாக்கம். பயன்பாட்டின் காரணமாக பெண்களுக்கு அவர்களின் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா இது மூன்றாவது பாகம். உதாரணத்திற்கு ஒரு பெண் பிரசவ விடுமுறை எடுத்தால், அவளுக்கான நிறுவனத்தில் நியமிக்கப்பட்டு இருக்கும் கொள்கைகள் நிலைத்து இருக்கணும். அதே சமயம் அவள் திரும்ப வேலைக்கு வரும் போது அவளை சரியான முறையில் நடத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் தங்களின் துறையில் இருந்து உயர் பதவிக்கு செல்லவும் அந்த நிறுவனம் அவர்கள் ஒரு ஊன்றுகோலாக இருக்க வேண்டும்.
இதனை அடிப்படையில் கொண்டுதான் நாங்க சிறந்த 100 நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறோம். இதன் மூலம் நிறுவனங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்த கொள்கை பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ெபாருந்தும். அதையும் அந்த நிறுவனங்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை அறிந்துதான் விருதினை வழங்கி வருகிறோம்’’ என்றவர் இது போன்ற விருதினை நிறுவனங்களுக்கு வழங்கும் காரணத்தைப் பற்றி விவரித்தார்.
‘‘அமெரிக்காவில் 80களில் இது போன்று முயற்சி செய்தாங்க. அதில் பெண்களுக்கான சிறப்பு கொள்கைகளை அமைத்து அதை பின்பற்ற ஆரம்பிச்சாங்க. இதன் மூலம் ஒரு நிறுவனம் பெண்களுக்கு எப்படி நல்ல நிறுவனமா இருக்க முடியும் என்பதற்கு வழி வகுத்தது. விளைவு பெண்களின் வேலைவாய்ப்பு 30%ல் இருந்து 50% ஆக அதிகரிச்சது.
இதே போல் இந்தியாவில் கொண்டு வர விரும்பினேன். ஒரு நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றால் அவர்களை கவுரவப்படுத்தணும். அதன் அடிப்படையில் தான் 2016ம் ஆண்டு முதல் 100 சிறந்த நிறுவனங்களுக்கு விருதினை வழங்கி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த 100 நிறுவனம் 1000, பத்தாயிரம் என்று பெருக வேண்டும். மேலும் வரும் காலத்தில் இவர்கள் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து, பெண்களுக்கான வேலை வாய்ப்பினை பல துறையில் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என்றார் சவுந்தர்யா ராஜேஷ்.