இருளர் குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோ ! (மகளிர் பக்கம்)
இருளர்கள் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் பழங்குடியினர். இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்டது. அதனால் இவர்களை பழங்குடியினர் என இந்திய அரசு அடையாளப் படுத்தியுள்ளது. இன்றும் இவர்கள் தங்களுக்கான ஒரு அடையாளம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக தங்களுக்கான நிலம், குடும்ப அட்டை, அவர்கள் வசிக்கும் இடத்திற்கான முறையான பட்டா மற்றும் மின்சாரம், தங்களின் குழந்தைகளுக்கான கல்வி என அனைத்து சமுதாய அந்தஸ்து வேண்டி போராடி வருகிறார்கள். அதே சமயம் இவர்கள் இனத்தில் இருந்தும் ஒரு சில முத்துக்கள் கல்வி மூலம் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இருளர் இன குழந்தைகளை வைத்து ஒரு ஃபேஷன் ஷோ நடத்தியிருக்கிறார் நிஷா.
இவர் ஆசிரியை, சமூக சேவகி, ஃபேஷன் டிசைனர், அழகியல் நிபுணர் என பன்முகம் கொண்டவர். சென்னை போரூரை சேர்ந்த நிஷா சமூக சேவையில் தான் ஈர்க்கப்பட்ட காரணத்தைப் பற்றி விவரித்தார். ‘‘பொதுவாக பள்ளி நாட்களில் ஆசிரியர் எல்லாரையும், ‘எதிர்காலத்தில் நீ என்ன ஆகப்போகிறாய்?’ என்று கேட்பது வழக்கமாக இருக்கும். எல்லாரும் டாக்டர், என்ஜினியர், லாயர்னுதான் சொல்வாங்க. என்னையும் என் ஆசிரியர் அப்படி ஒரு கேள்வி கேட்டார்.
எனக்கு டாக்டர், என்ஜினியர் எல்லாம் சொல்ல தோணல. பட்டென்று அன்னை தெரசாவா ஆகப்போகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்த வயதில் அன்னை தெரசா அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. அவர் பெயர், அவர் ஒரு சமூக சேவகர் மட்டும் தான் தெரியும். ஆனால் என்ன மாதிரியான சமூக சேவை செய்தார். எங்கு பிறந்தார். இந்த துறைக்குள் எப்படி தன்னை புகுத்திக் கொண்டார் என எந்த விவரமும் எனக்கு அவரைப் பற்றி ெதரியாது. ஆனால் என்னவோ அவரின் பெயரும், அவர் சமூக சேவகர் என்பது மட்டும் என் மனதில் ரொம்ப ஆழமாக பதிந்துவிட்டது. அப்படித்தான் எனக்கும் சமூக சேவையில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.
அந்த சேவை மனப்பான்மை என் ஆழ்மனதில் பதிந்திருக்கும். ஒரு கட்டத்தில் அது வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது’’ என்றவர் முதலில் ஆரிகேமி குறித்த பயிற்சி அளித்துவந்துள்ளார். 2019ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடந்தது. அந்த போரில் இரு தரப்பிலும் பல உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இந்தியர்கள் இறப்புக்காகவும் இந்தியாவில் பாகிஸ்தானியர் இறப்புக்காகவும் கொண்டாடினார்கள். என்ைனப் பொறுத்தவரை இருநாட்டுக்கும் இடையே போர் வருவது, அந்தந்த நாட்டு மக்களை அந்நாட்டு அரசு தற்காத்துக் கொள்வது எல்லாம் அவசியம். ஆனால் ஒரு உயிரின் இறப்பை ெகாண்டாடுவது என்பதை என்னவோ என் மனசு ஏற்கவில்லை.
காரணம், உயிர் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒருவரின் வீட்டில் ஒரு இழப்பு ஏற்படும் போது அதனால் அந்த குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இதை வலியுறுத்தும் வகையில் நம் எதிர்கால சந்ததியினருக்கு ஆரிகேமி வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். நான் ஆரிகேமி கலை குறித்த பயிற்சி எடுப்பதற்கும், அந்தக் கலை உருவாவதற்கும் ஒரு சுவாரஸ்யமான கதையுண்டு.
இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அது. ஜப்பானை சேர்ந்த சடாகோ சசாகீ என்ற சிறுமி அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு 2 வயதுதான். அந்த அணுகுண்டு வீச்சால், அந்த சிறுமி சுமார் 10 வருடங்களாக குருதிப் புற்றுநோயால் அவதிப்பட்டாள். நோயின் பாதிப்பால் அவளின் காதின் பின் பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. கால்களில் ஊதாப்புள்ளிகள் உருவாகிய நிலையில் அவளை பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மரத்துக்கு தாலி கட்டினால் திருமணம் நடக்கும். மரத்தில் தொட்டில் கட்டி தொங்கவிட்டால் குழந்தை பிறக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. அதேபோல் காகிதத்தால் 1000 கொக்குகள் செய்தால், அவர்கள் நினைத்தது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. சடாகோவும் நம்பினாள். அதுதான் ஆரிகேமி கலை மூலம் கொக்குகளை காகிதத்தில் அமைக்க ஆரம்பித்தாள்.
ஆனால் புற்றுநோய் உயிர்கொல்லி நோய் என்பதால், படிப்படியாக அவளின் நோயின் தாக்கம் அதிகமானது. 1955ம் ஆண்டு அக்டோபர் மாதம் சடாகோ உயிரிழந்தாள். இறந்தபோது 644 கொக்குகள் மட்டுமே செய்திருந்தாள். சடாகோவின் தோழிகள், நண்பர்கள் மீதம் உள்ள கொக்குகள் செய்தனர். 1000 கொக்குகளுடன் சடாகோவின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு காரணம் அவள் தன் உயிருக்கு போராடும் நேரத்தில் கூட தன்னைப்போல வேறு எந்த குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது, இனி உலகப்போர் நடக்கக் கூடாது என்று எண்ணிதான் கொக்குகளை செய்தாள்.
அவளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஹிரோசிமா – நாகசாகி நினைவு பூங்காவில் சிலை அமைத்தது. ஆண்டு தோறும் சடாகோவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவள் இறந்த பிறகும் உலக அமைதியை வலியுறுத்தி வருகிறாள். இந்த கதையை சிறுவர், சிறுமிகளுக்கு கூறி உலக அமைதிக்காக ஆரிகேமி வகுப்பு எடுத்து வருகிறேன். நான் சாதாரண குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இந்த ஆரிகேமி வகுப்பினை எடுத்து வருகிறேன். இந்தக் கலையை 1000த்துக்கும் மேலான குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளேன். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு நடனம், ஓவியம், தற்காப்புக் கலைகளையும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்’’ என்றவர் ஃபேஷன் ஷோ குறித்தும் பகிர்ந்தார்.
‘‘ஒரு முறை செங்கல்பட்டு அருகே குன்னப்பட்டு என்ற சிறிய இருளர் கிராமத்திற்கு சென்றேன். அங்கு 15 வயதுக்குட்பட்ட இருளர் இன குழந்தைகளை தேர்வு செய்தேன். அவர்களை வைத்து ஃபேஷன் ஷோ நடத்த திட்டமிட்டேன். தொடர்ந்து நான்கு மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். எப்படி நடப்பது, திரும்புவது, சிரிப்பது என அனைத்தும் ெசால்லிக் கொடுத்தேன். அவர்கள் பழங்குடியினர் என்பதால், அவர்களுக்கு உடை அணியும் முறையும் சரியாக தெரியாது.
அது குறித்தும் சொல்லிக் கொடுத்தேன். அடுத்து மேக்கப் என அந்த குழந்தைகளுக்கு அழகு சார்ந்த அனைத்து விஷயங்களும் எடுத்துரைத்தேன். அதன் பிறகு ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்ற தலைப்பில் அந்த குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோவை நடத்தினேன். கடந்த அக்டோபர் மாதம் செங்கல்பட்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தினேன்.
இருளர்களை நான் தேர்வு செய்ய காரணம். அவர்களுக்கு என ஒரு சின்ன வட்டத்திற்குள் தான் அவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழக அஞ்சுவார்கள். தங்களின் குழந்தைகளையும் அவர்கள் வெளியே அனுப்புவதில்லை. சொல்லப்போனால், அங்கு ஒரு சில குழந்தைகள் தான் பள்ளிக்கு செல்கிறார்கள். மற்றவர்கள் செல்வதில்லை. தங்களின் இடத்தை விட்டு வெளியே செல்ல தயங்குகிறார்கள். இந்த தயக்கம் அடுத்த டுத்த தலைமுறையினருக்கு தொடர்கிறது. அதை போக்க நினைச்சேன். குறிப்பாக வளரும் தலைமுறையினரிடம். அவர்களுக்கு இது குறித்து அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மேலும் குழந்தைகள் பொறுத்தவரை அவர்களை அழகாக காண்பிக்கும் போது அது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதற்கு ஃபேஷன் ஷோ ஒரு தீர்வாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஆரம்பத்தில் இது பற்றி பெற்றோர்களிடம் சொல்லி புரிய வைக்க ரொம்பவே சிரமப்பட்டேன். அவர்களின் முழு சம்மதம் கிடைத்த பிறகுதான் குழந்தைகளுக்கு மூன்று வாரம் பயிற்சி அளித்தேன். குழந்தைகள் மிகவும் திறமைசாலியாக இருந்தார்கள். அவர்கள் வெளி சமூகத்திற்கு வர பயப்படுகிறார்களே தவிர நான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே புரிந்து கொண்டு செய்தார்கள்.
மின்சாரவசதி கூட இல்லாத அந்த குழந்தைகளை மிகப்பெரிய வெளிச்சத்துக்கு கொண்டு வரவே இந்த முயற்சி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படுத்த முடிந்தது. மேலும் அவர்களுக்கு வெளியுலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றியும் புரிய வைக்க விரும்பினேன். அதனால் அவர்களை நகரத்தில் உள்ள மால்களுக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த எஸ்கலேட்டர், லிஃப்டினை மிகவும் ஆச்சரியமாக பார்த்தார்கள். இந்த ஃபேஷன் ஷோ மூலம் மற்ற பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் திறமையினை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுக்க முன் வந்துள்ளனர்.
இருளர்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அவர்களுக்கான சலுகைகளை கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு அதை எப்படி பயன்படுத்துவது கூட தெரியாமல், பின் தங்கிய நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக நான் தனிப்பட்ட அமைப்பு எல்லாம் நடத்தவில்லை. என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
என்னைப் பார்த்து என் நண்பர்கள், உறவினர்களும் தங்களால் முடிந்த உதவியினை செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாமல் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்பட்டு வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த பணியினை செய்து வருகிறேன். என்னால் முடிந்த வரை தொடர்ந்து செய்வேன்’’ என்ற ஸ்ரீநிஷா சிங்கப்பெண் மற்றும் சிறந்த சேவகி போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.