சிசேரியனுக்கு பின்னும் சுகப்பிரசவம்! (மகளிர் பக்கம்)
‘‘பொதுவாக, முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் தகுந்த சூழ்நிலையும் வசதிகளும் இருந்தால், சிசேரியன் செய்துகொண்ட பெண்களும் இரண்டாவது முறை சுகப்பிரசவத்தில் குழந்தை பெறலாம்’’ என்கிறார் டாக்டர் மாதங்கி ராஜகோபாலன். இவர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவயியல் துறைகளில் 18 வருட அனுபவத்துடன், மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கும் முன், அறுவை சிகிச்சையின் அவசியத்தையும் பதிவிட வேண்டும். பல ஆபத்தான நேரங்களில், தாய்-சேய் இருவரின் உயிரையும் காப்பது அறுவை சிகிச்சைதான். சிசேரியன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பது தான் நிதர்சனம். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்கி, சிக்கலான சூழல்களில், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க அறுவை சிகிச்சையே சிறந்தது. ஆனால், மூட நம்பிக்கைகளுக்காகவும், மருத்துவம் அல்லாத வேறு காரணங்களுக்காகவும் பெண்களும் அவர்கள் குடும்பமும், சிசேரியன் செய்துகொள்ள முடிவெடுப்பதுதான் பிரச்சனையாகிறது.
‘‘சமீப காலமாக சிசேரியன் முறை அதிகரிக்க முக்கிய காரணம், பிறக்கும் குழந்தைகளின் எடை. சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் 2.5 – 3 கிலோ எடையுடன் பிறந்தனர். ஆனால் இப்போது பிறக்கும் குழந்தைகளின் எடை மூன்று கிலோவிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை இயற்கை முறையில் பிரசவிக்க முடியாமல், மூச்சுத் திணறல் போன்ற அபாயம் ஏற்படுவதை தடுக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். பெண் கருவுற்றதும், இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிடணும் என, அதிக உணவைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் திணிக்கின்றனர். எந்த வேலையும் செய்ய வேண்டாம் என ஓய்வெடுக்கும்படி வற்புறுத்துகின்றனர். இதனால், குழந்தையின் எடை கூடிவிடுகிறது.
பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்டு, எப்போதும் போல அதிக சுமையில்லாத வேலைகளையும், உடற்பயிற்சியையும் செய்து வர வேண்டும். தற்போது இளம் பெண்களுக்கு வலியைத்தாங்கும் சக்தியும் பொறுமையும் குறைந்துவிட்டது. அதனாலேயே பலர் சிசேரியன் முறையையே விரும்பு கின்றனர். இதில் எந்த ஆபத்தும் இல்லை என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் பலர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால், நன்மை நடக்கும் என்ற மூடநம்பிக்கை காரணமாக சிசேரியன் முறையை நாடுகின்றனர்.
செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்கள் அல்லது பல வருடங்களாகக் கருத்தரிக்க முடியாமல், காத்திருந்து குழந்தை பெறும் பெண்களுக்கு பிரசவத்தின் போது அபாயம் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் அவசரக் கால அறுவை சிகிச்சையாக, குழந்தை வயிற்றில் நிலை மாறி இருக்கும் போதும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் சமயமும் சிசேரியன் செய்கிறோம்” என்கிறார் டாக்டர் மாதங்கி.
சில வருடங்களாக சிசேரியன் அதிகரிக்க நம்பிக்கையின்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது. பலர் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என்று நம்பிக்கை உத்தரவாதம் கேட்கின்றனர். சாதாரணமாக சாலையை கடக்கும் போதே நம்மை அறியாமல் சில அபாயங்கள் ஏற்படும் போது, மருத்துவத்திலும் அனுபவமிக்க வல்லுநர்களை மீறியும் சில ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அவர்களும் சிசேரியன் செய்து விடுகின்றனர்’’ என்றவர் யாருக்ெகல்லாம் VBAC உகந்தது என்று விவரித்தார்.
‘‘முதல் முறை சிசேரியன் செய்துகொண்டாலும், இரண்டாவது முறை சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம். இதை ஆங்கிலத்தில் Vaginal Birth After Caesarean Section (VBAC) என்று குறிப்பிடுகிறார்கள். VBAC முறையில் குழந்தை பிறக்க, அனுபவமிக்க மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் மிகவும் முக்கியம். சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யும் போது, தேவைப்பட்டால் அவசரக் கால அறுவை சிகிச்சை செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் வசதிகள் அந்த மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
இந்த முறையைச் செயல்படுத்தும் போது, குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய்களுக்குக் கர்ப்பப் பையில் தையல் போடப்பட்டிருக்கும். அவர்களின் அந்த தழும்பு சுகப்பிரசவத்தின் போது பிரிந்துவிடாமல் கண்காணிக்க வேண்டும். 200 பெண்களில், ஒருவருக்குத்தான் இந்த தையல் பிரிந்து போகும் அபாயம் இருக்கும். இது வெறும் 0.5 சதவீதம்தான் என்றாலும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
முதல் முறை பிரசவத்தின் போது, சுகப்பிரசவத்திற்கு முயன்று, எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இதை தாராளமாக முயலலாம். இவர்களுக்கு ஏற்கனவே கர்ப்பப்பை வாய் விரிவடைந்திருக்கும். இதனால் இரண்டாவது முறை சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குழந்தை சரியான எடையிலிருந்து, தாயும் ஆரோக்கியமாக இருந்தால் இரண்டாவது முறை சுகப்பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது.
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், இரட்டை சிசுவுடன் கர்ப்பமாகும் தாய்கள், முப்பத்தி ஐந்து வயதைக் கடந்த பெண்கள், செயற்கை முறையில் கருத்தரித்தவர்கள்… என இவர்கள் அனைவரும் சிசேரியன் முறையில் குழந்தை பெறுவதே உகந்தது. முதல் முறை சிசேரியன் போது, கருப்பையில் கீழே குறுக்காக வெட்டி அறுவை சிகிச்சை செய்திருந்தால், அந்த பெண்களுக்கு இரண்டாம் முறை சுகப்பிரசவம் செய்வது சுலபம். ஆனால் கருப்பை நேரான திசையில் செங்குத்தாக வெட்டப்பட்டிருந்தால், சுகப்பிரசவத்திற்கு முயல்வது கடினமாகும்.
பெண்கள் எல்லோருக்குமே பிரசவத்தின் போது அதீத பயம் இருக்கும். வலி ஆரம்பித்ததும், பலரும் அறுவை சிகிச்சை செய்துவிடும்படி கூறுவார்கள். அதனால், அந்த வலியைத் தாங்கும் வலிமையும், சுகப்பிரசவம் வேண்டும் என்ற முழு விருப்பத்துடன் பெண்கள் இருக்க வேண்டும். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் இரண்டாவது முறை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்கும் போது, விரைவிலேயே குணமடைகிறார்கள். குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே வலி இருந்தாலும், அவர்கள் இயல்பு நிலைக்கு உடனே திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது திசுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெண்களுக்கு வலி தரலாம். சுகப்பிரசவத்தில் இந்த பிரச்சனைகள் இருக்காது.
இதில் பல நன்மைகள் இருந்தாலும், VBAC முயற்சி அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, இதிலிருக்கும் ஆபத்துக்களை உணர்ந்து, அதை எதிர்கொள்ளத் தயாரான பெண்கள் இதை முயல்வதே ஏற்றது’’ என்றார் மகப்பேறு நிபுணர் டாக்டர் மாதங்கி.