KD vs KG!! (மகளிர் பக்கம்)
‘‘உடல் எடை பருமன் என்பது உலகளாவிய பிரச்சனை. பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்ததுமே வெயிட் போட்டுறுச்சு மேடம் மறு
படியும் குறையலை என்பார்கள். ஆண்கள் என்றால் துறுதுறுன்னு இருந்தேன். வேலை கிடைத்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் எடை பிரச்சனை என்பார்கள். நாம் செய்கிற உடற்பயிற்சிக்கும் எடை குறைப்பிற்கும் சுத்தமாய் தொடர்பில்லை” என்கிற கிருபா தர்மராஜ் KD vs KG எனும் பெயரில் உடல் எடையைக் குறைக்கும் நிறுவனத்தை தொடங்கி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது பெயரின் முதல் எழுத்துக்களான கே.டி.யுடன் (KD) எடையைக் குறிக்கும் கிலோ கிராமை(KG) இணைத்து KD vs KG நிறுவனத்தை துவங்கியவர், உடற் பயிற்சி உடலுக்கு நல்லது அவ்வளவே என்கிறார்.
‘‘சின்ன வயதில் இருந்து நாம் எப்படி சாப்பிட்டோமோ அந்த முறையை மாற்றாமல், தனியாக எதையும் முயற்சிக்காமல் தினமும் நாம் சாப்பிடும் உணவின் மூலம் உடல் எடையைக் குறைப்பதுதான் இதில் ஆகச் சிறந்த ஆச்சரியம். நமது வீடுகளில் அன்றாடம் தயாரித்து உண்ணும் உணவுகளான இட்லி, தோசை, சாம்பார் சாதம் என எதை வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம். ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும், அவற்றுடன் கூடுதலாய் எதை இணைக்க வேண்டும் என்பதில் இருக்கிறது உடல் குறைப்பின் சூட்சுமம்’’ என்கிறார் மிகவும் அழுத்தமாய்.
‘‘யாராக இருந்தாலும் காலையில் இதை சாப்பிடுங்க, மதியம் அதை சாப்புடுங்க, மீண்டும் இரவு இதனைச் சாப்புடுங்க என எதையும் யாருக்கும் நான் லிஸ்ட் செய்வதில்லை. ஒரே மாதிரியான உணவுகளைத் திரும்ப திரும்ப உண்ணும்போது உணவில் ஒருவித சலிப்பு ஏற்படும். அத்தோடு ‘டயட் ஃபுட்’ எனத் தனியாய் சமைப்பது கடினம். சின்ன வயதில் இருந்து நமது குடும்ப பழக்கவழக்கத்தில் சாப்பிட்டு வளர்ந்த உணவுதான் அவரவர் டி.என்.ஏக்கு உகந்தது’’ என்கிறார்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பார்கள். உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றும் மெனு ப்ளானைத் தனியாகக் கொடுக்காமல், அவர்கள் உண்ணும் உணவை சாப்பிடுவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் எனக்கு அனுப்ப வைப்பேன். அதில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்ய வைப்பேன். பெரும்பாலும் நான் சொல்கிற விசயங்கள் எளிமையாய் அனைவரும் அறிந்த விசயமாகவே இருக்கும். சொல்லும்போது இது ஏற்கனவே எனக்குத் தெரியும். நான் இதைப் படிச்சிருக்கேன் என்பார்கள். ஆனால் எவ்வளவு தூரம் அதைப் பின்பற்றுகிறார்கள், நம்மில் எத்தனை பேர் சாப்பிடும்போது டி.வி. பார்க்காமல், மொபைல் பார்க்காமல், புத்தகம் படிக்காமல் உணவை கவனம் வைத்து உண்கிறோம். உணவை கவனித்து பொறுமையாகச் சாப்பிடுகிறோமா? நம்மை அறியாமல் செய்யும் சின்னச் சின்ன விசயங்களில்தான் உடல் எடை பிரச்சனையே இருக்கிறது.
ஸ்விக்கி, ஜொமோட்டோ நிறுவனங்கள் வருவதற்கு முன்பே கடந்த 7 வருடங்களாய் டயட்டீஸியன் மற்றும் நியூட்ரிஸியன்களுடன் இணைந்து ‘லஞ்ச் பாக்ஸ்’ எனும் பெயரில் டயட் பாக்ஸாக ஃப்ரேம் செய்து, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை சென்னை முழுக்க டோர் டெலிவரி செய்த ஹெல்த்தி ஃபுட் இன்டஸ்ட்ரீயில் இருந்திருக்கிறேன். இதில் நமது ஊர் சாப்பாட்டை எப்படி சத்தும், ஆரோக்கியமுமாய் சாப்பிடலாம் என்பதை அனுபவப் பூர்வமாய் உணர்ந்ததால், 6 வயதுக் குழந்தையில் தொடங்கி 80 வயது நீரிழிவு நோயாளி வரை 5 லட்சத்திற்கும் அதிகமான டயட் பாக்ஸ்களை வழங்கிய அனுபவம் ஏற்பட்டது. எதற்காக இந்த மெனு, ஏன் இதைச் சாப்பிட வேண்டும் என்கிற அர்த்தம் புரியத் தொடங்கியதுமே எல்லா மாநிலத்தின் உணவுகள் குறித்தும் ஆர்வத்தோடு தெரிந்து கொண்டேன்.
எனது எடையும் அப்போது இயல்பைவிட 15 கிலோ அதிகமாக இருந்தது. நான் கற்றவற்றை எனக்கே முயற்சித்துப் பார்த்தேன். இதில் 18 கிலோ வரையிலும் எனது எடை குறைந்தது. திடீரென நிகழ்ந்த என் எடைக் குறைப்பு குறித்து நண்பர்கள் என்னிடத்தில் கேட்கத் தொடங்கினர். எனது உணவுக் கட்டுப்பாட்டின் ரகசியத்தை அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க, அவர்களும் முயற்சித்து ரொம்பவே வித்தியாசத்தை உணர்ந்தார்கள். எடை குறைப்பில் எனக்கு இருந்த ஆர்வம் மேலும் மேலிட, லஞ்ச் பாக்ஸ் கேட்டரிங் தொழிலை விட்டுவிட்டு வெயிட் லாஸிங் விசயத்தில் முழுமையாய் களம் இறங்கினேன். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என எனக்கான வட்டம் விரிவடைந்தது. வெயிட் லாஸிங் விசயத்தை முறைப்படுத்தி மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன்.
இதில் முக்கியமான விசயமே அவரவர் வீட்டுச் சாப்பாட்டையே சாப்பிடலாம் என்பதுதான். என்னிடத்தில் நார்த் இந்தியன், சவுத் இந்தியன், பெங்காலி, ஜெயின், சைவம், அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களும் வாடிக்கையாளராய் இருக்கிறார்கள். உணவுப் பழக்கத்தை மாற்றாமல் எளிமையாய் செய்ய வைக்கிறேன். தொடங்கிய இரண்டு மாதத்தில் அவர்களது உடல் எடையில் வித்தியாசம் தெரியத் தொடங்கும். எடை குறைவதை கவனித்த நான்காவது மாதத்திலே என்னிடத்தில் 100 உறுப்பினர்கள் இணைந்தார்கள். இப்போது 150 உறுப்பினர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள். கடல் தாண்டி சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என்றும் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
எதற்காக சாப்பிடுகிறோம் என்கிற தெளிவு இன்மையால்தான் பலரும் தங்கள் முயற்சியை பாதியில் கை விடுகிறார்கள். ஒருசில வொர்க் ஷாப்புகளைத் தவிர, பெரும்பாலும் ஆன்லைன் மூலமே ஆலோசனைகளை வழங்குகிறேன். நியூட்ரிஸியன் ஃபுட் என்றால் என்ன என்பதை நான் விளக்கும்போதே உணவு சமைக்காதவர்களும் சமைக்க ஆரம்பிப்பதோடு, தங்களிடம் இருப்பதை வைத்து எப்படி சிறப்பாய் சமைப்பது எனவும் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். கடைகளில் அவர்கள் உணவுப் பொருட்களை வாங்கும் பார்வையே மாறியிருப்பதாகவும் பலர் என்னிடத்தில் தெரிவித்தனர்.
எடைக் குறைப்பு குறித்து கூகுளில் கிடைக்காத தகவல்கள் இல்லைதான். இங்கே பிரச்சனையே தெரிந்த விசயத்தை எப்படி அவர்களை செய்ய வைப்பது என்பதில்தான் இருக்கிறது. முக்கியமாக இதில் நான்கு விசயங்களை ஒவ்வொரு ஸ்டெப்பாக பின்பற்ற வைக்கிறேன். உறுப்பினரின் உயரம், எடை, உணவுப் பழக்கவழக்கம் என அனைத்தையும் எடுத்த பிறகு, ஒவ்வொரு வாரமும் ஒரு எளிமையான சவாலை அவர்கள் சந்திக்க வேண்டும். முதல் வாரம் உணவுக் கட்டுப்பாடு. இரண்டாவது வாரம் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவை சாப்பிட்டுப் பழகுவது. குறிப்பிட்ட சில வாரங்களில் வீட்டு சாப்பாட்டை சரியான முறையில் சரியான நேரத்திற்கு உண்ணத் தொடங்குவார்கள். நான்காவதாக மன அழுத்தம் இருந்தாலும் உடல் பருமன் கூடும். அது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
நான் சொல்லும் சேலன்ஞ்களை பின்பற்றும்போதே உடல் எடை மெதுவாய் ஆனால் நிலையாக குறைய ஆரம்பிக்கும். குறைந்த எடை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஏறாது என்றவர், அவரவர் உடல் வாகைப் பொருத்தும்(metabolism) எடை குறையும் காலத்தின் அளவு மாறுபடும். 10 கிலோ எடையைக் குறைக்க குறைந்தது 8 முதல் 10 மாதங்கள்வரை எடுக்கும்” என்கிறார் இவர். ‘காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா’ என உடம்பின் மேன்மையை, அக்கறையோடு விளக்கிய திருமூலர் வாக்கை முறையாக முயற்சித்து மெய்யாக்குவோம்.