எக்கோ ஃபிரண்ட்லி நாப்கின்! (மகளிர் பக்கம்)
நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியைப் பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்துப் பயன்
படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியைப் புதைத்து விடுவார்கள். அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்குக் கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்குக் கருப்பை பிரச்சனை வந்ததா? என்கிற கேள்வியோடு, அதற்கான பதிலைத் தேடியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த இஷானா.
“மாதவிடாய் பிரச்சினை எனக்கு ஏற்பட்ட சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்தேன். எல்லாமே சரியாக இருந்தது. அப்பதான் அம்மா ‘இப்ப இருக்கிற நாப்கின்ன விட்டுட்டு, துணி யூஸ் பண்ணி பாரு’னு சொன்னாங்க. எனக்கு அது கம்படபிளா இல்லை. இந்த துணியவே எப்படி பேட் மாதிரி பயன்
படுத்தலாம்னு யூ டியூப் பார்த்து காட்டன் துணியில் பேட்களை தைக்க ஆரம்பித்தேன். கடைக்கு வரும் பெண்களில் சிலர் இதை பார்த்து அவர்களும் சில யோசனை சொல்லி ஊக்குவித்தார்கள்.
அதில் சிலர் இதை எப்படி நாமே துவைத்து மறுபடியும் பயன்படுத்துவதா? என்று முகம் சுளித்தனர். தற்போது மார்கெட்டில் கிடைக்கும் நாப்கின்களை தூக்கி எறிகிறோம். அதை மற்றொருவர் எடுத்து போடுகிறார். நம்மளோடது எடுக்கவே நாம் தயங்கும் போது, அதை மற்றவர் எடுக்கையில் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். இதை ஏன் நாம் சிந்திப்பதில்லை” என்று கூறும் இஷானா, இதை வெறும் உடற்கழிவிற்காக மட்டும் பயன்பாட்டில் கொண்டு வராமல், நாப்கின்களால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகளையும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் வேலை செய்து வருகிறார்.
“நாங்கள் உருவாக்கும் நாப்கினில் லீக் புரூப் வைக்கவில்லை. எந்த ஒரு லீக் புரூப் வைத்தாலும் பிளாஸ்டிக் உள்ளே வருவதால், எக்கோ ஃபிரண்ட்லி போய்விடும். வருடத்திற்கு ஒரு பெண் 60 பேட் பயன்படுத்தும் போது வாழ்நாள் முழுக்க கணக்கு போட்டு கொள்ளுங்கள். அதில் 30 பேடாவது குறைக்க தற்போது உழைக்கிறோம். எங்களிடமிருந்து ஒரு ஆயிரம் நாப்கினில் 333 பேருக்கு ஆறு நாப்கின் என்கிற வீதத்தில் ஒரு வருடம் பயன்படுத்தினால், கிட்டத்தட்ட நான்கு டன் வேஸ்டேஜ் மண்ணுக்குள் வராது.
குளங்களால் சூழப்பட்ட நகரம் தற்போது குப்பைகளால் நிரம்பி குடிநீரின் அளவு குறைந்து வருகிறது. ஒரு நாலு நாப்கின் மண்ணில் கிடக்கிறதென்றால், நாலு பக்கெட் தண்ணீரை உள்ளே போகவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அதில் அரை பக்கெட் தண்ணீர் பயன்படுத்தி நாங்கள் கொடுக்கும் நாப்கினை துவைத்து பயன்படுத்தினால், நீரையும் சேமிக்கலாம், மண்ணையும் பாதுகாக்கலாம். நாங்கள் செய்வது புதுமை அல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன் நம் பாட்டியெல்லாம் எதை பயன்படுத்தினார்களோ அதையேதான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பத்து குழந்தைகளுக்கு மேல் பிறந்தார்கள்.
இன்று ஊர் முழுதும் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிகை அதிகரிப்பதை கண்முன் பார்க்கிறோம். நம் உடலை பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், ஈசி கோயிங் என்கிற கோட்பாட்டிற்குள் வாழ்ந்து வருகிறோம்” என்று கூறும் இஷானா, நீண்ட நேரம் நாப்கின்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறினார். “பள்ளி, கல்லூரி மாணவிகள் நாங்கள் தயாரிக்கும் நாப்கின்களை பயன்படுத்தும் போது, இதை மாத்தவோ, அப்படி மாற்றினால் எங்கு வைப்பது என்கிற சிக்கல் இருக்கிறது என்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோம் என்றால், 60 ரசாயன நாப்கினை 30 ஆக்குவதுதான் முதல் நோக்கம்.
அதனால், இந்த மாதிரி சூழல் அதை பயன்படுத்தி, மற்ற நேரங்களில் காட்டன் நாப்கின்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் எவ்வளவு நேரம் அந்த நாப்கின் பயன்படுத்த வேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதுவரை மட்டுமே பயன்படுத்துங்கள். அதைத் தாண்டி நேரம் போகும் போது, கசியும் ரத்தம் ஜெல்லாக மாறுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம் உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் ஒரே பேடை நாள் முழுக்க வைக்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும்.
ஒரு சிலர் நாங்கள் உருவாக்கி இருக்கும் இந்த நாப்கின் ஹைஜீனிக்காக இல்லை என்கிறார்கள். நாமே நம் கண் முன் இதை துவைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதை நம்பாமல், நமக்கு தெரியாமல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஒன்றை நம்புகிறோம்” என்று கூறும் இஷானா, சானிட்டரி நாப்கின்களோடு குழந்தைகளுக்கான டயப்பர், பெட் போன்ற பொருட்களையும் காட்டனில் தைத்து தருகிறார். ”இப்போது ‘பேண்டி லைனர்’ என்று புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலை நாடுகளில் இதன் பயன்பாடு ஏற்கனவே இருக்கிறது” என்று கூறும் இஷானா, சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தினை முன் உதாரணமாக காட்டி பல பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்.
”எனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு நாளும் குறித்தாகிவிட்டது. என் வேலை காரணமாக அதை கொஞ்ச நாள் தள்ளி போடலாமா என்று மாப்பிள்ளை வீட்டில் தொடர்ந்து கேட்டோம். ஆனால், ‘இது ஒரு சாதாரண கடைதானே அதை அடைத்துவிட்டு வருவதற்கு என்ன?’ என்பது அவர்களது பதிலாக இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு இப்போது வேலைகாரணமாக இங்கு வரமுடியாத சூழல். அதனால் திருமணம் தள்ளி போகிறது. ஒரு வேலைக்கு கொடுக்கும் மரியாதை ஒரு பெண்ணுக்கு தருவதில்லை.
பிசினஸ் பண்ண நினைக்கும் எனக்கு சமூகம் அவகாசம் கொடுக்க தயாராக இல்லை. என்னை போன்ற பெண்கள் தங்கள் கனவுகள் குறித்து கோரிக்கை வைத்தால் அந்த வார்த்தைக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். வாக்கு கொடுத்துட்டோம், சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி கவலைப்படாமல் அந்த கவலை உங்கள் குழந்தை குறித்து இருக்கட்டும்” என்கிறார் இஷானா.