குழந்தைகளே… சிறகடித்து பறக்க வாங்க! (மகளிர் பக்கம்)
சிறகை விரித்து துள்ளிக்குதித்து பறக்கும் பட்டாம்பூச்சிகள் போல்தான் குழந்தைகளும். ஆனால் ஒரு சில குழந்தைகளால் மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இருக்க முடிவதில்லை. இவர்கள் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும். எங்கேயும் வெளியே செல்லக்கூடாது. அப்படியே சென்றாலும், மற்ற குழந்தைகள் போல் விளையாட முடியாது… இப்படி பல கண்டிஷன்கள். அதையும் தாண்டி அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கியுள்ளார் சென்னையை சேர்ந்த ஸ்டெல்லா.
இவரின் ‘கோல்டன் பட்டர்ஃபிளை’ அமைப்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட குறிப்பாக புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்காகவே இயங்கி வருகிறது. அவர்களின் சின்னச் சின்ன சந்தோஷங்களை பூர்த்தி செய்வது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருகிறது. இதனை நிர்வகித்து வரும் ஸ்டெல்லா அந்த அமைப்பின் செயல்பாட்டைப் பற்றி பகிர்ந்தார்.
‘‘கிட்டத்தட்ட 25 வருஷமா சமூக சேவையில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு காரணம் என் பெற்றோர். அவங்க இருவருமே சமூக சேவை மனப்பான்மை கொண்டவங்க. அந்த தாக்கம் என்னிடம் கொஞ்சம் கூட இல்லைன்னா எப்படி? என்னுடைய அமைப்பு மட்டுமில்லாமல் மேலும் ஐந்து சமூக அமைப்பின் தலைமையாகவும் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன்.
கோல்டன் பட்டர்ஃபிளை அமைப்பை 2018ம் ஆண்டு ஆரம்பிச்சேன். பொதுவா ஒரு தொண்டு நிறுவனத்தை நிர்வகிப்பவர்கள், அவர்கள் சந்தித்து இருக்கும் பிரச்னை சார்ந்து தான் அமைப்பார்கள். எனக்கு அப்படி இல்லை. சின்ன வயசில் இருந்தே தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதே சமயம் நான் செய்யும் வேலை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்ன்னு விரும்பினேன். சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்காக தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. ஆனால் எனக்கும் என் தோழிக்கும் (இப்போது அவள் இல்லை) குழந்தைகள் சார்ந்து செய்ய வேண்டும்ன்னு விரும்பினோம்.
ஆனால் என்ன செய்றதுன்னு தெரியல. அந்த சமயத்தில் எனக்கு தெரிந்தவங்க குழந்தைகள் அரவணைப்பு குறித்து பி.எச்.டி செய்திட்டு இருந்தாங்க. அவங்க குழந்தைகளின் உடல் ரீதியான பிரச்னை சார்ந்து உதவி செய்ய பல நிறுவனங்கள் இருப்பதாகவும், பாலேடிவ் கேர் குறித்து யாரும் கவனம் செலுத்துவதில்லைன்னு சொன்னாங்க. பாலேடிவ் கேர்… நான் அப்பதான் அந்த வார்த்தையை கேள்விப்பட்டேன். அப்படின்னா என்ன என்று கூட எனக்கு தெரியாது. பாலேடிவ் கேர், ஒருவர் வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் அன்பு மற்றும் அரவணைப்பு.
அவர்கள் இருக்கும் காலம் வரை நல்லா பார்த்துக்கணும், சந்தோஷமா வச்சுக்கணும். அவர்களின் கடைசிப் பயண நாட்கள் அதிக தூரமில்லை என்பதை அவர்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்லி அதற்கான மனப்பக்குவத்தை ஏற்படுத்தணும். நாங்க இதனை ஆரம்பித்த போது எப்படி அணுகுவதுன்னு புரியல. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை. ஏற்கனவே அவர்கள் உடல்ரீதியாக பல வலியினை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மனவலியை எப்படி போக்குவதுன்னு தெரியல.
ஆனால் இந்த நிலையில் பல சின்ன சின்னக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட போது என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதில் பெரும்பாலான குழந்தைகள் கீழ்மட்ட குடும்பத்தில் இருப்பவர்கள். மருத்துவ செலவு பார்க்க முடியாத நிலை என்பதால் பலர் சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்கள். மேலும் இவர்களுக்கு மற்ற குழந்தைகள் இருந்தால், அவர்களின் படிப்பும் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட வீட்டில் உள்ள அனைவரும் மனதால் பெரிய அளவில் பாதிப்படைவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யார் ஆதரவு? அந்த ஆதரவினை நாங்க கொடுக்க விரும்பினோம்’’ என்றவர் இவரின் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.
‘‘குழந்தைகளுக்கான ஆதரவு எப்படி கொடுப்பதுன்னு முதலில் யோசித்தோம். அதனால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தோம். அவர்களிடம் குழந்தைகள் பற்றிய விவரங்களை சேகரித்தோம். மேலும் அவர்கள் எங்களுக்கு குழந்தைகளுக்கான பராமரிப்பு குறித்த பயிற்சியினை எங்க அமைப்பில் உள்ள மருத்துவ குழுவினர் எடுப்பாங்க. இதனால் ஒரு குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்கு தெரிய வந்தால், நேரடியாக எங்களின் மருத்துவக்குழு சென்று அவர்களுக்கு முதலுதவி செய்வார்கள். அதிலேயே குழந்தையின் உடல் நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும்.
இல்லாத பட்சத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம். புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை சென்னையில் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் பலர் எங்களை நாடி வராங்க. அப்படி வருபவர்கள் இங்கு தங்கும் போது, அவர்களுக்கு சொற்ப சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. இதனால் வீட்டு வாடகை
மட்டுமில்லாமல், மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைக்கான உணவு என அனைத்தும் அவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. அப்படிப்பட்ட சுமார் 20 குடும்பங்களுக்கு நாங்க மளிகைப் பொருட்கள் மற்றும் கீமோதெரபி கொடுக்கப்படும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவினையும் வழங்கி வருகிறோம். இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை சிகிச்சையினை நிறுத்தக்
கூடாது. அதனால் நோயின் தன்மை குறையும் என்று சொல்லிட முடியாது. ஆனால் அவர்களின் இறுதி நாட்களை கொஞ்சம் தள்ளிப் போடலாம்.
அவர்கள் சிகிச்சையினை தொடர்ந்து வருகிறார்களா மற்றும் அதற்கான உதவியினையும் நாங்க செய்து வருகிறோம்’’ என்றவர் குழந்தைகளுக்கான கேளிக்கை சார்ந்த விஷயங்களையும் அமைத்து தருகிறார்.‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளியே செல்லமாட்டார்கள். மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் தான் இருப்பார்கள். வீட்டில் இருந்தாலும் பெற்றோர்கள் வெளியே அனுப்ப மாட்டார்கள். அது குழந்தையை மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் எங்க அமைப்பு மூலமாக ‘மியூசிக் ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ நிகழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறோம். இது அவர்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது எங்க அமைப்பில் இதற்கான ஒரு பகுதியினை அமைத்திருக்கிறோம். அங்கு குழந்தைகள் வந்து விளையாடலாம், பாட்டு கேட்கலாம். இதை மனதில் கொண்டு தான் நாங்க கடந்த மாதம் ‘அடிதூள்’ என்ற நிகழ்ச்சியினை இந்த குழந்தைகளுக்காக நடத்தினோம். இது ஒரு மேளா. இங்கு விளையாட்டு இருக்கும். உணவு ஸ்டால் இருக்கும் அப்புறம் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஒரு நாள் நடைபெறும் இந்த மேளாவிற்கு குழந்தைகள் வரும் போது அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும் குழந்தைகளுக்கான செலவு மற்றும் அவர்களுக்கு ஒரு கூப்பனும் கொடுத்தோம். அந்த கூப்பனை அவர்கள் மேளாவில் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த ஒரு நாள் அவர்களின் முகத்தில் பார்த்த சந்தோஷத்திற்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் இணையாகாது.
நாங்க புற்றுநோய் மட்டுமில்லாமல், எல்லாவிதமான நோய்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் அரவணைப்பு கொடுக்கிறோம். பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் தருகிறோம். குழந்தையின் உடல் நிலை காரணமாக மனதால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எங்களிடம் மனம் விட்டு பேசும் போது, மனதில் உள்ள பாரம் குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். எல்லாவற்றையும்
விட இது நிகழக்கூடியது. அதை தடுக்க முடியாது. மேலும் அதை ஏற்றுக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளிக்கிறோம்.
காரணம், சிலர் குழந்தையின் மறைவுக்குப் பிறகு மொத்தமாகவே நொடிந்திடுவார்கள். வேலைக்கு செல்ல மாட்டார்கள். அதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கக்கூடும். அவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கிறோம். என்னைப் பொறுத்தவரை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கணும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இது குறித்து பேசுகிறோம். அது அவர்கள் சிகிச்சையினை முன்கூட்டியே எடுக்க உதவியாக இருக்கும்’’ என்றார் ஸ்டெல்லா.