குளிர்கால சூப் வகைகள்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 44 Second

மழைக்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள், தொற்றுகள் உண்டாகும். அதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது. அதற்கு சூப் வகைகள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். மிக எளிதாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சில சூப் ரெசிபிகளை இங்கே பார்க்கலாம்.

மிளகு – பூண்டு  சூப்

தேவையானவை:

கொரகொரப்பாக  அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
சுக்குப் பொடி – 1 தேக்கரண்டி
பூண்டுப் பல் –  5
தக்காளி  –  1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சின்ன வெங்காயம்  –  2
கொத்துமல்லி, கறிவேப்பிலை  –  சிறிது
உப்பு  –  தேவைக்கேற்ப
நெய்  –  அரை தேக்கரண்டி.

செய்முறை: முதலில் வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள். இப்போது மழைக்கு இதமான மிளகு சூப் தயார்.

பலன்கள்: 
மிளகு – பூண்டு சேர்த்து செய்யப்படும் இந்த  சூப் அருந்தி வர, மழைக்காலத்தில் ஏற்படும் சளி, கபம் பிரச்னை, செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு
தீர்வாக இருக்கும். உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி  ஆரோக்கியமாக வைக்கும்.

மட்டன்  மார்க்கண்டம் சூப்


தேவையானவை:

மட்டன் (மார்க்கண்டம்) -1/4 கிலோ
மிளகு -1/2 தேக்கரண்டி
வெங்காயம் –  1 (சிறியது)
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம் கறிவேப்பிலை – தாளிக்க
 பட்டை, கிராம்பு  – 1  துண்டு.

செய்முறை : வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு 5-6 விசில் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்னர்,  குக்கரை திறந்து வெந்ததும் நீரை வடித்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கறிவேப்பிலை  தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்கி மிளகை தூள் செய்து சேர்த்து பரிமாறவும். சூடான மட்டன் மார்க்கண்டம் சூப் ரெடி.

பலன்கள்:
ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம் உள்ள இந்த சூப், நோயெதிர்ப்பு அளவை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுகளை அகற்றி  குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வெஜிடபிள் சூப்

தேவையானவை:

வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – 2
முட்டைகோஸ் – 100 கிராம்
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 7 அல்லது 8
கார்ன் – 2 மேசைக்கரண்டி
பச்சைப் பட்டாணி – 2 மேசைக்கரண்டி
பால் – ஒரு கப்
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பிரிஞ்சி இலை – ஒன்று
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், முட்டைக்கோஸ் ஆகியவற்றையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி, பிரிஞ்சி இலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு மூடி 4 அல்லது 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி கார்ன், பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து தனியாக வேகவைக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு கலவையிலிருந்து பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு, வெந்த உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதில் பால் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கவும் (மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிதளவு பால் சேர்க்கலாம்). பிறகு அதில் வேகவைத்த மற்ற காய்கறிகளையும் கலந்து, மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.பலன்கள்: உடல்நலம் குன்றியபோது செரிமானத்தைச் சீராக்கி, உடலுக்கு வலுவூட்டி, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி உடல்நலத்தை மீட்க காய்கறி சூப் உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேகம் காக்கும் தேங்காய்! (மருத்துவம்)
Next post பாலின நோய்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)