கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.
கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.
அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீழே ஆண், மேலே பெண் முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின்போது வாய் வழி உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.
தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.
பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.