பத்து பேர் தேவையில்லை…ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 49 Second

எனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் கிடையாது. இருக்கும் ஒன்று இரண்டு ஃப்ரண்ட்ஸுடன் நான் எப்போதும் க்ளோசா இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். அதற்காக அவங்களை நான் தினமும் சந்திப்பேன்னு சொல்ல மாட்டேன். ஆனால் எப்போதும் நாங்க எல்லாரும் டச்சிலே இருப்போம். அதேபோல் என்னிடம் உண்மையான நட்புடன் இருப்பவங்களை நான் மதிப்பேன். நான் இல்லாத போதும், என்னைப் பற்றி தப்பா சொல்லும் போது அந்த இடத்தில் எனக்காக குரல் கொடுக்கும் போதுதான் உண்மையான நட்பு வெளிப்படும். என் முன் சிரிச்சு பேசிட்டு என் முதுகுக்கு பின் என்னைப் பற்றி புறம் பேசுபவர்களை எப்படி ஃப்ரண்ட்ஸுனு சொல்ல முடியும்’’ என்று தன் நட்பு உலகம் பற்றி பகிர ஆரம்பித்தார் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு தொடரின் நாயகி ஸ்ருதி ராஜ்.

‘‘நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. எனக்கு கூட பிறந்தவங்க எல்லாம் யாரும் கிடையாது. அப்பாக்கு மிலிட்டரியில் வேலை. அதனால வீட்டில் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாதான் இருப்பாங்க. சொல்லப்போனா அப்பாவைவிட அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட், என்னை அப்படி பாதுகாப்பா பார்த்துப்பாங்க. நான் சின்னத்திரைக்கு வரக் காரணம் என் அம்மாதான். என்னோட சொந்த ஊர் கேரளா. அங்க வரும் பத்திரிகையில் சாதாரண மக்களின் புகைப்படத்தை அட்டைப்படமா போடுவது வழக்கம். அப்படி ஒரு பத்திரிகையில் என்னுடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்தப் புகைப்படத்தை பார்த்து தயாரிப்பு நிறுவனங்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க, அப்படித்தான் நான் சின்னத்திரைக்கு வந்தேன். ஆரம்பத்தில் மலையாள சீரியலில் நடிச்சிட்டு இருந்தேன். அதன் பிறகு தமிழிலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்படியே தொடர்ந்தது தான் என்னுடைய சின்னத்திரை பயணம்’’ என்றவர் பள்ளியில் படித்த நண்பர்கள் பற்றி பகிர்ந்தார்.

‘‘நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது இருந்தே என்னையும் சேர்த்து நாங்க நான்கு பேர். அன்று ஆரம்பித்த எங்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. நாங்க நால்வரும் ஒரே வரிசையில் தான் அமர்ந்திருப்போம். மேலும் எங்க எல்லாருக்கும் ஒரே சிந்தனை. எங்க நாலு பேருக்குமே சாப்பாடு ரொம்ப பிடிக்கும். அப்புறம் சாக்லெட், ஐஸ்கிரீம். பொதுவாகவே ஒரு நட்பு நமக்கு பிடித்த விஷயத்தில் தான் கனெக்டாகும். அதனால் நாங்க ஊர் சுத்துவோம்னு சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கான சின்னச் சின்ன விஷயங்கள் அதாவது பள்ளி ஆண்டு விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, அரட்டை அடிப்பதுன்னு எங்களுக்கான சந்தோஷ நினைவுகளை வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் விட நாங்க எங்களுக்குள்ளே படிப்பு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் இருந்தோம். எனக்கு கணக்கு சுத்தமா வராது.

என் தோழி ஒருத்தி கணக்குல புலி. அவ எனக்கு கணக்கு தருவா. அதேபோல் நான் அறிவியல், ஹிந்தி நல்லா படிப்பேன். நான் அவளுக்கு சொல்லிக் கொடுப்பேன். கேரளாவில் உள்ள சின்ன கிராமத்தில் தான் நான் வளர்ந்தேன் என்பதால் எங்க வீட்டில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அம்மா என்னை எங்கேயும் தனியா அனுப்பமாட்டாங்க. ஒரு முறை பள்ளியில் டூருக்கு அழைத்து போறதா இருந்தாங்க. என்னுடைய மற்ற ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் போறதா இருந்தாங்க. ஆனா, என் அம்மா அதற்கு பர்மிஷன் கொடுக்கல. இவங்க எல்லாரும் அம்மாவிடம் வந்து பேசியும் பார்த்தாங்க, நாம ஃபேமிலியா போகலாம்னு சொல்லி என்னை அனுப்பவே இல்லை.

எனக்கு நீச்சல் தெரியாது. அதனால எங்க நான் தண்ணீரில் விழுந்திடுவேேனான்னு பயம். அதனால் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் பள்ளி படிப்பு முடிச்சதும் சீரியலில் பிசியாயிட்டேன். என் தோழிகளும் கல்லூரி, கல்யாணம், குழந்தைனு அவங்களின் வாழ்க்கை பயணம் மாறிவிட்டது. ரொம்ப காலம் எங்களுக்குள் பெரிய அளவில் கான்டாக்ட் இல்லை. அப்ப ஒரு நாள் என் தோழி ஒருவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது.

எனக்கு ஒன்னுமே புரியல. அவ்வளவு சந்தோஷமா உணர்ந்தேன். நான் ஊரில் இருப்பதால், எப்படியோ என் நம்பரை கேட்டு வாங்கி எனக்கு போன் செய்தா. அவள் மூலமாக மத்தவங்களும் கனெக்ட் ஆனாங்க. அந்த நொடி என்னால் மறக்கவும் முடியாது, விவரிக்கவும் முடியாது. அப்படி இருந்தது. பல வருடம் அவ்வளவு நட்பாக இருந்தவங்க மறுபடியும் நம் வாழ்க்கையில் வரும் போது அந்த சந்தோஷத்தை மதிப்பிட முடியாது. அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள எல்லாரும் ஒரு நாள் ஊரில் என் தோழி வீட்டில் சந்தித்தோம். அந்த நாள் இப்ப நினைச்சாலுமே அவ்வளவு பசுமையா இருக்கு. அதன் பிறகு நாங்க சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும், வாட்ஸப் மூலம் ஒரு குழு அமைத்து அதில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கிறோம்’’ என்றவர் தன் துறையில் உள்ள தோழிகளைப் பற்றி பேசினார்.

‘‘இந்த துறையை பொறுத்தவரை எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அதில் நான் என்றுமே சார்ந்து இருப்பது இருவரை மட்டும் தான். தேவி அப்புறம் திவ்யா. தேவி என்னோட தாலாட்டு சீரியலில் நடிக்கிறாங்க. அதற்கு முன் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ல நானும் தேவியும் சேர்ந்து நடிச்சோம். அப்பதான் எங்களுக்குள்ள நட்பு உருவாச்சு. அவங்களும் என்னை மாதிரிதான். அவங்க அம்மா, அப்பாவிற்கு ஒரே பொண்ணு. கிட்டத்தட்ட என்னுடைய ஜெராக்ஸ்னுதான் சொல்லணும். அவளுடைய குணாதிசயங்களைப் பார்க்கும் போது என்னை அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போல் இருக்கும். ஆனா, அவ கொஞ்சம் தைரியசாலி. நான் அப்படி இல்லை. பயங்கர சென்சிடிவ்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எல்லாம் நான் எமோஷனலாகிடுவேன். அப்பெல்லாம் அவ என்னை ரொம்பவே திட்டுவா. திவ்யா, ரவுடின்னுதான் சொல்லணும். இவள் எனக்கு ஒரு நடனப் பயிற்சி பள்ளியில்தான் பழக்கம். அதன் பிறகு ரொம்பவே ஃப்ரண்டாயிட்டோம். என்னுடைய பாதுகாப்பு கவசம்னு சொல்லலாம். நான் எமோஷனலா அழுதா, உடனே என்னை சமாதானப்படுத்துவா. தேவியை ஷூட்டிங்ல பார்ப்பேன். ஆனால் திவ்யாவை நான் வருஷத்தில் இரண்டு முறைதான் பார்ப்பேன். எங்களுக்குள் ஒரு அக்ரிமென்ட். எங்க இரண்டு பேர் பிறந்தநாளுக்கு எங்க இருந்தாலும், நாங்க சந்திச்சுக்கணும். அந்த ஒரு மணி நேர சந்திப்பில் அந்த ஒரு வருட விஷயங்களை பேசி தீர்த்திடுவோம். என்னுடைய சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் நாங்க பேசக்கூடிய நபர்கள் இவங்க இருவர் மட்டும் தான்.

இவங்களுக்கு அடுத்து பார்த்தா என்னுடைய தோழி அம்மாதான். அப்பாவின் மறைவிற்கு பிறகு எனக்கு அவங்க, அவங்களுக்கு நான்னுதான் இருக்கிறோம். எங்க இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு கிடையாது. எந்த ஒரு பிரச்னைன்னு வந்தாலும் நான் அவங்களுக்காக இருப்பேன். அவங்களும் அப்படித்தான். நான் வளர்ந்து இருந்தாலும் அவங்களுக்கு நான் இன்னும் குழந்தைதான். எனக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாதான் இருக்காங்க.

அம்மாவை அடுத்து சொல்லணும்னா என் கசின்ஸ். நான் ஊருக்கு போகும் போது எல்லாம் எல்லாரும் வந்திடுவாங்க. அங்க நாங்க பண்ற அராஜகத்துக்கு அளவே இல்லை. இப்பவும் வீட்டில் உள்ள பெரியவங்க எல்லாரும் திட்டுவாங்க. வளர்ந்து இருக்குங்க… ஆனா, கொஞ்சமாவது அடக்கமா இருக்காங்களான்னு. அவங்களோட ரீல்ஸ் செய்றது, தோட்டத்தில் விளையாடுறதுன்னு அவ்வளவு ஜாலியா இருக்கும். சின்ன வயசில் நாங்க எல்லாரும் கூட்டுக் குடும்பமா தான் இருந்தோம்.

அப்ப என்னுடைய அம்மம்மா எங்க தோட்டத்தில் இருக்கும் புளியை உப்புடன் சேர்த்து இடிச்சு வச்சிருப்பாங்க. அது அப்படியே சாப்பிட அவ்வளவு சுவையா இருக்கும். என்னுடைய பள்ளி நண்பர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். வீட்டில் கேட்டா தரமாட்டாங்க. அப்ப என்னுடைய கசின்தான் அவங்க அதை எங்க வச்சிருக்காங்கன்னு பார்த்து ஒரு டப்பாவில் போட்டு எனக்கு தருவா. நான் என் ஃப்ரண்ட்ஸுக்கு கொண்டு போய் தருவேன். இந்த புளிக்கு அவங்க எனக்கு துபாய் முட்டாய் கொடுப்பாங்க. அது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

இப்ப கொரோனா வந்த பிறகு நம்முடைய வாழ்க்கை நம் கையில் இல்லை என்பது தெளிவா புரிஞ்சிடுச்சு. அதுவும் என்னைப்போல சென்சிடிவ்வான நபருக்கு சொல்லவே வேணாம். இந்த இரண்டு வருடம் வாழ்க்கை அவ்வளவுதான். இன்று இருப்பவர்கள் நாளை இருப்பாங்களான்னு சொல்ல முடியல. அதனால அந்தத் தருணத்தை வாழணும்னு முடிவு செய்தேன். என்னோட சின்னச் சின்ன சந்தோஷத்தை நான் ஏன் விட்டுத் தரணும்னு முடிவு செய்தேன். இப்போது அதன்படிதான் என்னுடைய வாழ்க்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அழகாகத்தான் இருக்கு’’ என்றார் ஸ்ருதி ராஜ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முக அழகு கூட்டும் புருவங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post கரும்புச் சாறு தரும் அரும் பலன்கள்!! (மருத்துவம்)