மனம் எனும் மாயலோகம்!! (மருத்துவம்)
போஸ்ட் பார்டம் டிப்ரஷன் நீங்க…
தாய்மை என்பது ஒரு வரம். புதியதொரு உயிரை இந்த பூமிக்குக் கொண்டுவரும் மானுட முயற்சி. ஆனால், எல்லோருக்குமே தாய்மை என்பது குதூகலமானதாக இருப்பதில்லை. சில சமயங்களில் பல்வேறு சூழ்நிலைகளால் கர்ப்பிணிகளுக்கு மனநிலையில் மாற்றங்கள் உருவாகக்கூடும்.ரமாவுக்கு அது முதல் பிரசவம். குழந்தை பிறந்த பிறகு அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான நேரங்களில் ஏனோ எரிச்சலும் கோபமும் உண்டானது. மிகுந்த உடல்சோர்வுடன் காரணமில்லாத அழுகையும் சேர்ந்து கொண்டது. ‘பொதுவாக குழந்தையின் வரவால் மகிழ்ச்சிதானே உண்டாக வேண்டும், ஏன் எனக்கு மட்டும் இப்படி இருக்கிறது?’ என்ற குழப்பமும் தாழ்வுணர்ச்சியும் உண்டானது.
5 % முதல் சுமார் 15% பெண்களுக்கு மகப்பேறுக்குப் பின் மனச்சோர்வு ஏற்படும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. போஸ்ட் பார்டம் டிப்ரஷன்(postpartum depression) என அழைக்கப்படும் இந்த மனச்சோர்வு பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
அறிகுறிகள் எவை?
மிகவும் கவலைப்படுவது, சாப்பாடு மற்றும் தூக்கம் பாதிக்கப்படுவது, வாழ்வில் பிடிப்பற்று இருப்பது, சிந்திக்கும் திறனில் மாறுதல், சிதறிய கவனம், தினப்படி சாதாரண வேலைகளைக்கூட செய்ய முடியாதது, தற்கொலை எண்ணங்கள் என டிப்ரஷன் இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் இருக்கும்.
இவற்றுடன் குழந்தையின் மேல் அக்கறையின்றி இருப்பதும், ‘தான் இப்படி இருக்கிறோமே’ என அதற்காகக் குற்றவுணர்ச்சி கொள்வதும், குழந்தைப் பற்றிய விஷயங்களில் மனப்பதட்டம் கொள்வதும் இருக்கும். இத்தகைய அதீத மனநிலையில் குழந்தைக்கோ தனக்கோ ஆபத்து விளைவித்துக் கொள்ளக்கூடும்.
காரணங்கள் என்ன?
கருவுற்ற காலத்தில் பத்து மடங்காக பெருகி இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரான் ஹார்மோன்கள் பிரசவத்திற்குப் பிறகு சட்டென குறைவதால் இந்த மன அழுத்தம் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இது மட்டுமில்லாமல் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்புகள், குழந்தை சம்பந்தமாக குடும்பத்தினரிடம் ஏற்படும் எதிர்பார்ப்புகள், பொருளாதார தேவைகள் போன்ற விஷயங்களால் அழுத்தம் உண்டாகக்கூடும்.
‘என் உடை எடை மிகவும் கூடிவிட்டதோ, நான் பார்ப்பதற்கு முன் போல் அழகாக இல்லையோ?’ போன்ற எண்ணங்கள்.தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், கணவருடனான பிணைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக ஏற்படும் மாற்றங்களை சரியாக கையாளத் திணறுவதும் இத்தகைய மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.
இந்த மன அழுத்தம் குழந்தையை பாதிக்குமா?ஆம் பாதிக்கும்!
ஏனெனில் உங்கள் குழந்தையுடன் உங்களால் ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது. குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரும். குழந்தையின் தூக்கம் பிரச்சனைக்குள்ளாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் உங்களால் போதிய அக்கறை செலுத்த முடியாது. வளரும் பருவத்தில் உடலியல் சார்ந்த சிக்கல்கள் வரும். வளர்ந்த பிறகு குழந்தைக்கு நடத்தை சார்ந்த பிரச்சனைகள், கற்றல் குறைபாடுகள் வரக்கூடும். அக்குழந்தைக்கு சமூகத் திறன்கள்(social skills) கடினமாக இருக்கக்கூடும்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக பேபி ப்ளூஸ் (Baby blues) என்று அழைக்கப்படும் மிதமான மன அழுத்தம் பிரசவத்திற்கு பின்னான சில நாட்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் இதே மனநிலை இரு வாரங்களுக்கும் மேலாக நீடித்தால் உடனடியாக உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதைப் பற்றிப் பகிர வேண்டும்.மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தத்தை கண்டுபிடிக்க, குறிப்பிட்ட சில கேள்விகளை உங்கள் மருத்துவர் உங்களிடம் கேட்பார். அவர் உங்களுடன் விரிவாக உரையாடுவதன் மூலமாக உங்கள் மனநிலையை கண்டறிவார்.அவருடன் மனம் திறந்து நேர்மையாக உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். ஏனெனில் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற வேண்டியது மிக அவசியம்.
சில சமயம் தைராய்டு சமன்குலைவால் மன அழுத்தம் இருக்கக்கூடும் என்பதால் இரத்தப் பரிசோதனைக்கு பரிந்துரைப்பார்.அவர் தீர்வுகளை நோக்கி உங்களை வழிநடத்துவார். இதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றி அடுத்த இதழில் விரிவாக காண்போம்.