மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்! (மகளிர் பக்கம்)
தொழில்நுட்பம் வளர வளர இன்றைய நாகரிகமும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கிய இடத்தை நம்முடைய செல்போன் பிடித்துள்ளது. காரணம், நாம் ஒவ்வொருவரும் 75% நம் தேவைகளை அதன் மூலமாகத்தான் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆன்லைன் செயலிகள். இதன் மூலம் உணவு, வீட்டிற்கு தேவையான பொருட்கள், பயணச்சீட்டு, சினிமா டிக்கெட் என அனைத்தும் பெற முடியும்.
இதனைத் தொடர்ந்து இசைப் பிரியர்களுக்காக ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்றாலே இசை நிகழ்ச்சி என்றாகிவிட்டது. அந்த மாதம் முழுதும் அனைத்து சபாக்கள் மற்றும் கோயில்களில் கச்சேரிகள் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் எங்கு எந்த சபாக்களில் நடைபெறுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே ஒரு புதிய வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையை மியூசிக் ஆஃப் மெட்ராஸ் என்னும் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் எந்த சபாக்களில் என்ன இசை நிகழ்ச்சி என்பது மட்டுமில்லாமல், உலகில் எந்த மூலையில் இருந்தும் அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும் பதிவு செய்யலாம். இந்த வலைத்தளம் சென்னையில் இசை விழாவிற்காகவே அறிமுகம் செய்துள்ளது மியூசிக் ஆஃப் மெட்ராஸ் நிறுவனம். கொரோனா காலம் முடிந்த தருவாயில், சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளுக்கு நேரடியாகச் சென்று ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் மக்கள் எளிய முறையில் டிக்கெட் பதிவு செய்ய இந்த நிறுவனம் வழிவகுத்துள்ளது. வலுவான தொழில்நுட்ப திறன் மற்றும் ஐந்தாண்டு கால அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, www.mdnd.in என்ற வலைத்தளத்தினை இந்திய கலைஞர்களுக்கான உலகளாவிய தளமாக உருவாக்கியுள்ளது.
இந்த தளத்தில் சென்னையில் உள்ள பல முன்னணி சபாக்களான பிரம்ம கான சபா, கர்நாடகா, ஹம்சத்வானி, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, கலாலயா அறக்கட்டளை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, நாரதகான சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளுக்கான டிக்கெட்டினை முன்பதிவு செய்யலாம். மேலும் சில சபாக்களை இந்தப் பட்டியலில் சேர்க்க உள்ளனர்.
இதன் மூலம் ரசிகர்கள் ஒவ்வொரு சபாவில் நிகழும் கச்சேரிக்கு ஏற்ப டிக்கெட்டுகளை தேர்வு செய்து ஆன்லைனில் பணம் செலுத்தி பெறலாம். தனிப்பட்ட அல்லது பல டிக்கெட்டுகளை வாங்கும்போது, அதனை உறுதிப்படுத்தி, QR குறியீட்டுடன் ஒவ்வொரு கச்சேரிக்குமான டிக்கெட்டுகள் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அரங்க நுழைவாயிலில் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உள்ளே செல்லலாம்.
சீசன் டிக்கெட் வாங்குபவர்களுக்கு, ஒரு சிறப்பு சீசன் டிக்கெட் வழங்கப்படும், அதை அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த செயலி உலகளவில் செயல்படுவதால், வெளிநாட்டில் இருந்தும், இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோர்களுக்காக வாங்க முடியும். கச்சேரிக்கு வரும் ரசிகர்கள் கேன்டீனில் உள்ள உணவினை சுவைக்கவும் இதே இணையதளத்தினை பயன்படுத்தலாம். மேலும் உதவிக்கு, ரசிகர்கள் வாட்ஸப் மூலம் ‘ஹாய்’ என்று 8072336688 என்ற எண்ணுக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் அனுப்பி டிக்கெட்டுகளை
பெறலாம்.