எண்ணத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும். அதை ஒரு சிலர் தான் தட்டி எழுப்பி உயிர் கொடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஜித்தா கார்த்திகேயன். மனதில் தோன்றும் சிந்தனைகளை வார்த்தையாக எல்லாராலும் வெளிப்படுத்த முடியாது. அதை ஓவியமாக வெளிப்படுத்தி வருகிறார் ஜித்தா.
‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவை. சின்ன வயசில் இருந்தே எனக்கு கலை துறை மேல் ஆர்வம் இருந்தது. என் மனதில் தோன்றும் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை ஓவியமாக வரைவேன். இதற்காக நான் எந்த பயிற்சியும் எடுத்துக் கொண்டது இல்லை. ஒவ்வொன்றும் நானே தான் கற்றுக்கொண்டேன். என் மனதில் தோன்றுவதை சின்னச் சின்ன ஓவியமாகத்தான் முதலில் வரைய ஆரம்பித்தேன். எண்ணங்கள் வளர வளர என்னுடைய ஓவியங்களுக்கும் ஒரு முழு உருவம் கிடைக்க ஆரம்பித்தது. எந்த ஒரு செயலையும் உள்மனதோடு செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’’ என்றவர் ஓவியங்கள் சார்ந்து பல பரிசுகளை பெற்றுள்ளார்.
‘‘நான் முதன் முதலில் ஓவியத்திற்காக வாங்கிய பரிசு குறித்த சம்பவம் இன்றும் நினைவில் உள்ளது. அந்த முதல் பரிசு தான் என்னை முழுமையாக ஓவியத்தின் மேல் ஈடுபட செய்தது. ஒரு முறை ஓவியம் தொடர்பான கலர் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க கடைக்கு போனேன். அங்கு அந்த கண்கவர் விளம்பரம் என் கண்ணில் தென்பட்டது. கேமலின் நிறுவனம் நடத்தும் ஓவியப் போட்டி குறித்த விளம்பரம் தான் அது. நாமும் பங்கு பெறலாமேன்னு அதில் உள்ள கூப்பனை பூர்த்தி செய்து, போட்டியில் கலந்து கொண்டேன்.
அந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. அதன் பிறகு ஓவியம் தொடர்பான பல பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. நான் தன்னிச்சையாக கற்றுக் கொண்டதால், இந்த கலையில் ஒளிந்திருக்கும் நுணுக்கங்களை பற்றி தெரியாமல் இருந்தேன். இவர்கள் மூலம் அதை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு அதுவே என்னுடைய வாழ்க்கைப் பாதையாக மாறிப்போனது’’ என்றவர் தன்னை சுற்றி நடைபெறும் சமுதாய பிரச்னைகளை ஓவியங்களாக வரைய ஆரம்பித்துள்ளார்.
‘‘ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் பலதரப்பட்ட பிரச்னைகள் மற்றும் தடைகளை சந்திக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. இதில் ஏதாவது ஒரு பிரச்னையை எல்லா பெண்களும் தங்களின் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார்கள். பெண் சிசு கொலையில் ஆரம்பித்து பாலியல் வன்கொடுமை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் என்னுடைய ஓவியங்களில் பிரதிபலித்து இருப்பது மட்டுமல்லாமல், ஓவியக் கண்காட்சி மூலமாக மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
என்னுடைய கலை மூலம் அந்த மாற்றத்தை உருவாக்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி உண்டு. அதே ேபால் என் ஓவியங்கள் இன்று இல்லை என்றாலும், கண்டிப்பாக எதிர்காலத்தில் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கு. ஓவியக் கலைக்கு எந்த ஒரு வரைமுறையும் கிடையாது அவர்களது எண்ணம் தான் அதற்கான வழிகாட்டல். கடந்த 12 வருடங்களில் 30க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி இருக்கேன். சோஷியல் இம்பாக்ட் விருதும் பெற்றிருக்கேன்’’ என்றவருக்கு ஓவிய பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எதிர்கால திட்டமாம்.