குழந்தைகளின் ரெப்ளிகா சிற்பங்கள்!! (மகளிர் பக்கம்)
குழந்தைகள் பார்க்க பார்க்க கொள்ளை அழகுதான். பிறந்த குழந்தையின் குட்டி விரல்களும், மென்மையான பாதங்களும் தொட்டுப் பார்க்கச் சொல்லி நம்மை பரவசப்படுத்தும். நாம் தொலைத்த விசயங்களில் நமது குழந்தைத் தன்மையும் ஒன்று. “இத்தனை குட்டியூண்டு டிரஸ்ஸா போட்டிருந்தேன்” என விழிகள் விரிய.. குட்டீஸ்ல அம்மா நமக்குப் போட்ட க்யூட் குட்டி உடைகளை பார்ப்பதே நமக்கு பரவசம்.
உடைக்கே இப்படின்னா!? குழந்தையில் இருந்த நமது குட்டி விரல்கள்.. குட்டி குட்டி நகம்.. கை கால்களில் இருந்த அழகான கோட்டு வடிவ ரேகைகள், விரல்களை மடித்து வைத்துக் கொள்ளும் அந்த அழகு, மென்மையான பஞ்சு பாதங்கள் என அவற்றை அப்படியே பதிவு செய்து வைத்தால் எத்தனை அழகாய் இருக்கும். வாழ்க்கை முழுவதும் இது என்னோட குட்டி கை, என்னோட குட்டி கால், என்னோட குட்டி விரல் என பார்த்து பார்த்து ரசிக்கலாம்தானே. அப்படியான விலைமதிப்பற்ற உணர்வை நமக்குத் தருவதற்காகவே ‘பீரிஷியஸ் இம்ப்ரஷன்’ (Precious impressions) என்கிற நிறுவனத்தை தொடங்கி குழந்தைமையின் நினைவுகளை பதிவேற்றித் தருகிறார் தரணிப்ரியா ஹரிகிருஷ்ணன்.
எப்படி இந்த எண்ணம் என்ற நம் கேள்விக்கு..? எனக்கு ஊர் பொள்ளாச்சி. திருமணத்திற்கு பின் கணவரோடு கோவைக்கு மாறினேன். நாங்கள் இருவருமே ஐ.டி.துறை. என் பொண்ணு குழந்தையா இருந்தபோது எதேச்சையாக இந்த விசயம் குறித்து தெரியவர, வடமாநிலங்களில் இது அப்பவே ரொம்ப பிரபலம். முக்கியமான விஐபிக்களின் கை, கால்களை அப்படியே அச்சு அசலாகப் பதிவு செய்து அவர்களின் வாழ்நாள் நினைவாக பரிசளிப்பார்கள். மிகச் சமீபத்தில்கூட நமது பாரதப் பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினி, தனுஷ் போன்ற செலிபிரேட்டிஸ் கை கால்களை வடநாட்டவர்களால் பதியப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்பாய் கொடுக்கப்பட்டது.
நாமலும் இதை ட்ரை பண்ணுவோம் என நினைத்து நானே அதை முயற்சித்து என் மகளின் குட்டி கைகளையும், கால்களையும் நகல் எடுத்து அத்தோடு, அவள் பிறந்த போது இருந்த எடை, பிறந்த தேதி, பிறந்த நேரம், குழந்தையில் எடுத்த போட்டோ என ஒன்றாக்கி ஒரு கண்ணாடி பிரேமுக்குள் அழகாய் அடைத்து எங்கள் குட்டி தேவதை நினைவாய் வைத்துக் கொண்டோம். நாளை அவள் திருமணமாகி கணவனோடு செல்லும்போது இதுதான் நீ குழந்தையில் இருந்தது எனப் பரிசாகத் தரும்போது.. அந்தத் தருணம் அவளுக்கு மறக்க முடியாத மொமெண்ட்தானே என்றவர், இதை அப்படியே என் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் சிற்பமாக்கி த்ரீ டைமன்ஷன்ல பரிசாகக் கொடுக்க ஆரம்பித்தேன். அவை சமூக வலைத்தளங்
களில் பதிவேற்றப்பட்டு இப்ப நான் ஃபேஸ்புக், இன்ஸ்டாவென பிரபலம் என்றவர், ஐ.டி. வேலையை விட ரெப்ளிகா(Replica) சிற்ப வேலை பிடித்துப் போக, இதையே முழு நேரத் தொழிலாகவே மாற்றிக் கொண்டதை விவரிக்கிறார் புன்னகைத்து.
நமது புகைப்பட ஆல்பங்கள் நம் நினைவுகளை மட்டும்தான் மீட்டெடுக்கும். ஆனால் நான் பரிசாகத் தரும் இந்த ‘ரெப்ளிகா சிற்பங்கள்’ தரும் உணர்வு வேற லெவல் என்றபடியே, தான் உருவாக்கிய ஒரு குட்டீஸின் குட்டியூண்டு கைகளையும், பாதங்களையும் நம் உள்ளங்கைக்கு மாற்றி அந்த உணர்வை நமக்கும் ஏற்படுத்தி பரவசப்படுத்தியவர், சமூக வலைத்தளங்களில் என் வேலையை மக்கள் அட்மியர் பண்ண ஆரம்பித்ததுமே ஐ.டி.வேலையை விட்டுவிட்டு 2018ல் இதில் முழு நேர பிஸினஸாக இறங்கினேன் என்கிறார்.
என்னோடது ஹோம் பேஸ்டு வொர்க் என்றாலும் பேபியோட கை கால்களைப் பதிவு எடுக்க குழந்தைகள் இருக்கும் இடம் தேடி நானே செல்ல ஆரம்பித்தேன். இதற்காக தமிழ்நாடு முழுவதும் டிராவல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பத்தே நிமிடத்தில் பதிவு செய்யுற வேலை சிம்பிளாக முடிஞ்சுறும். அதன் பிறகு பதிவேற்றியதை மோல்டில் இருந்து எடுத்து காயவைத்து, அதன்மீது கோல்டன், சில்வர், ஆன்டிக் பிரான்ஸ் அல்லது பிரான்ஸ் கலர்களில், விரும்பிய வண்ணத்தை அதன் மீது தீட்டி, அத்துடன் பிறந்தபோது குழந்தை கையில் கட்டிய டேக், தொப்புள் கொடியோடு வரும் பிளாஸ்டிக் கிளிப், ப்ரகனன்ஸிய கன்ஃபர்ம் செய்த ப்ரகனன்ஸி கிட், பிறந்த தேதி, நேரம், குழந்தையின் எடை, பெயர் என எல்லாத்தையும் உள்ளே வைத்து கம்ப்ளீட் செய்த பிரிஸியஸ் பாக்ஸாக அது தயாராகும். இதற்கு இரண்டு மாதங்கள்வரை எடுக்கும் என்கிறார்.
சமீபத்தில் மனோரமா ஆச்சிம்மாவின் பேரக்குழந்தை கை கால்களை பதிவு செய்ய அவர் வீட்டுக்குச் சென்றேன். அப்ப ஆச்சிம்மாவை மிஸ் பண்ணிட்டோமே என மனசுக்குள் தோணுச்சு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார், பாடும் நிலா எஸ்.பி.பி. சார், மனோரமா ஆச்சி இவர்களெல்லாம் எத்தனை பெரிய லெஜன்ட்ஸ். இவர்களின் கை கால்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் இப்போதும் எனக்குண்டு என்றவர், முக்கியமான தலைவர்களின் நினைவு இல்லங்களுக்கு போகும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தி இருப்பாங்க. அதில் சிலவற்றை பார்க்க நமக்கே ஆச்சரியமா இருக்கும்.
சமீபத்தில் வ.உ.சி இழுத்த செக்கினைப் பார்த்தபோது அதில் இருக்கும் சுதந்திரப் போராட்டத்தின் வீரமும், சோகமும், சுமையும் உணர்வா எனக்குள் வெளிப்பட்டது என்றவர், என் விருப்பம் எல்லா செலிபிரேட்டிஸ் கை கால்களையும் அவர்கள் நினைவாய் பதிவு செய்து அதை அப்படியே கேலரி ஆக்க வேண்டும் என்பதே என்கிறார். வெளிநாடுகளில் இதையே மிகப் பெரிய பிஸினஸாகச் செய்கிறார்கள். ஆனால் அவர்களது பேட்டனே வேறு என்கிறார்.
ஒரு மெமரியா பதிவு செய்ய நினைத்தால் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து மோல்டு எடுக்கலாம். பிறந்த குழந்தையில் தொடங்கி 95 வயது பாட்டிவரை நான் பதிவு எடுத்திருக்கிறேன். தற்போது மேடையில் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றி அணிவதை ஜோடிகள் இணைத்து பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நமது வீட்டு வயதானவர்களின் கை கால்களை ஆசிர்வதிப்பதுபோல் நகல் எடுத்தும் பதிவு செய்து கொடுத்து வருகிறேன். என்னோட இன்ஸ்டா பக்கங்களில் 850 போஸ்டுகளுக்கு மேல் ரெப்ளிகா சிற்பங்கள் குறித்து இருக்கு. அதில் பெரும்பாலும் செலிபிரேட்டிஸ் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கடந்த 2 வருடத்தில் 1700 பேபிஸ் இம்ப்ரஷன் எடுத்ததற்காக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனக்கு விருது கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். மிகச் சமீபத்தில் இந்தியன் கிரிக்கெட் டீமின் பவுலர் நடராஜன் சாரை அவர் கையில் கிரிக்கெட் பால் இருக்கிற மாதிரி பவுலிங் ஸ்டைலில் பதிவெடுத்து கொடுத்திருக்கிறேன் என்றவர் ஃபேஸ் மோல்டு செய்வதற்கான முயற்சியில் இருப்பதையும் நம்மிடம் தெரிவித்தார். அன்பின் மிகுதியில் சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கால்களையே பதிவெடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்றவாறு விடைபெற்றார்.