கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி செல்லக் கூடிய பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்பது இல்லாமல் இருந்தது. இருந்தாலும் அவர்கள் முன்னேற்றம் பாதிக்கப்படாத வகையில் குடும்ப சூழல்களும் இருந்தன. எளிதாகப் பேசி அனைத்தும் சரிசெய்யப்பட்டன. ஆனால் இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது. ‘கணினி யுகம்’ என்று சொல்வதற்கேற்றபடி பிள்ளைகள் பிறந்தவுடனேயே புத்திசாலித்தனம் தெரிய ஆரம்பிக்கிறது.
நடுத்தர வயதைக் கடந்தவர்கள், இன்றைய பிள்ளைகளிடம் தொழில் நுட்பத்தைக் கேட்டு தெரிந்து ெகாள்ளும் விதத்தில் மதிநுட்பம் மிகுந்தவர்களாக அவர்கள் காணப்படுகிறார்கள். அதனால் சில விஷயங்களில், நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, வீடுகளில் கணவன்-மனைவி பேசிக் கொள்வதில் கூட அதிக கவனம் தேவைப்படுகிறது. மனைவியோ, கணவனோ யார் கோபப்பட்டாலும், கடின வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக் கொண்டிருந்தாலும், அதன் தாக்கம் பிள்ளைகளுக்கு பாதிப்பையே உண்டாக்குகிறது.
பெரும்பாலும் பெரியவர்களின் அணுகுமுறை எப்படி உள்ளதோ, அது தான் பிள்ளைகள் மனதில் பதிகிறது. “தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை” என்பார்கள். நமக்கே தெரியாமல், நம் செயல் முறைகள், செய்கைகள் பலரால் கவனிக்கப்படலாம். ஒரு சிறுவன் தலைவாராமல், துணியை இஸ்திரி செய்யாமல், தூங்கி எழுந்தபடி வந்திருக்கிறான். அவன் கூறும் காரணம்- இரவு முழுவதும் அப்பா, அம்மா சண்டையாம். இவனும் சாப்பிடப்பிடிக்காமல் தூங்குவது போன்று நடித்துவிட்டானாம். வீட்டிலிருந்தால் அந்த சூழல் தொடருமென நினைத்து பள்ளிக்கு ஓடிவந்து விட்டானாம்.
எவ்வளவு வேதனை தரும் விஷயம். அவன் சொன்னதால், விஷயம் புரிந்து, மேற்கொண்டு அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்க இயலும். சில பிள்ளைகள் சொல்லத் தெரியாமல் தவித்து, மனதிலேயே அடக்கிக் கொள்வதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. எந்தப் பிரச்னைகளையும் பிள்ளைகள் எதிரில் குமுறாமல், நாம் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறோம் என்பது போல அவர்களிடம் முழு அக்கறை காட்டுதல் அவசியம். அது தான் உண்மையும் கூட. எப்படிப்பட்ட கடின அல்லது மோசமான சம்பவங்களாக இருந்தாலும், மனம் திறந்து பிள்ளைகள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மனம் திறந்து பேசும் பொழுது, பிள்ளைகளும் தாய் தந்தையுடன் நட்புணர்வு கொண்டு பழக ஆரம்பிப்பார்கள். கண்டிப்பாக பிரச்னைகள் குறைய வாய்ப்பு ஏற்படும். பெற்றோர் மட்டுமல்ல, ஆசிரியரும் சமயங்களில் பின்புலத்தை ஆராயாமல் பேசி விட்டால், அதுவும் சங்கடம் தான். வார்த்தைகளைப் பார்த்து பிரயோகம் செய்ய நேரலாம். ரொம்பவும் குறும்புத்தனம் செய்து எல்லோரிடமும் சண்டையிட்டு, தொல்லை தரும் சிறுவன் ஒருவன் அவன் பின்புலத்தை ஆராய்ந்தால் பரிதாபம்.
அவன் இதயத்தில் ஓட்டை இருந்ததால், அறுவை சிகிச்சைக்காக பலரிடம் பணம் திரட்டிக் கொண்டிருந்தார்களாம். முழு தொகை வந்தவுடன், அவன் அறுவை சிகிச்சை நாள் நிச்சயிக்கப்படுமாம். இதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரின் பார்வையும் அவன் மேல் கருணை பொழிய ஆரம்பித்தது. விஷயம் தெரிந்தவுடனேயே பலரும் உதவி புரிய முன்வந்தனர். நல்ல நிபுணர் மூலம் அவனுக்கு புனர் ஜென்மம் கிடைத்தது. போட்டி போட்டுக் கொண்டு பலர் அவனுக்கு வேண்டிய மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொண்டனர். தற்சமயம் ஏதோ ஒரு நாட்டில் சிறந்த வழக்கறிஞர் அவன். இதுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்றும் ஒரேபோல் இருப்பதில்லை. சிறுவயதில் காணப்படும் குறும்புத்தனத்திற்கும், புத்திசாலி தனத்திற்கும் சம்பந்தமில்லாத வகையில் கூட அவர்களின் எதிர்காலம் அமைந்து விடுகிறது. சமயங்களில் குடும்ப சூழல் காரணமாகக் கூட அவர்கள் தங்களின் கனவை நனவாக்க முடிவதில்லை. அந்த சமயத்தில், கிடைத்த வாழ்க்கையை சிலர் ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள். கிடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சமயத்தில்தான், மன அழுத்தம் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் என்று நினைக்கிறேன். நாம் படித்த காலத்தில் நடந்த சம்பவம். எட்டாம் வகுப்பில் படித்த ஒரு சிறுமி அங்குள்ள பிரபல பத்திரிகையாளரின் பெண் என்று சொன்னார்கள். பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிந்திருந்தால் தனி கவனமும் செலுத்தினார்கள். திடீரென அவள் படிப்பில் மாற்றம் ஏற்பட்டது. முதல் ஐந்து இடங்களை அவள் என்றுமே தாண்டியதில்லை. ஆனால் திடீரென கிட்டத்தட்ட வகுப்பில் கடைசி மதிப்பெண்ணாம்.
தினமும் பள்ளிக்கு காலையில் நேரம் கழித்து வருவதும், மாலை மணி அடித்தவுடன் வீட்டின் பக்கம் ஓடுவதுமாக இருந்திருக்கிறாள். முடிக்காத பாடப்பகுதியை மாலை எழுதிமுடிக்க வேண்டும் என்றும், அதை கண்காணிக்க ஒரு தலைவியையும் ஆசிரியர் நியமித்தார். ஆனால் அவளோ பாடத்தையும் முடிக்காமல், வீட்டுப் பக்கமும் போகாமல் வேறு திசையில் ஓடுவதாக தலைவி வந்து குறை கூறினாள். இப்படியாக பல நாட்கள் கழிந்தன. அவளின் படிப்பிலும் முன்னேற்றம் காணப்படவில்லை. செய்கைகளும் அப்படியே தொடர்ந்தன. ஒவ்வொரு பாட ஆசிரியைகளும் அவளைப்பற்றி பேச ஆரம்பித்தனர். எல்லாப் பாடப் பகுதியிலும் அவள் அப்படித்தான் என்கிற நிலை ஏற்பட்டது. ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து தலைமையாசிரியரிடம் விஷயத்தை முன் வைத்தனர். அவர் அது பற்றி தான் அப்பெண்ணிடம் பேசுவதாகக் கூறினார். மறு நாள் பள்ளி அலுவலகத்திலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
மாணவியை தலைமையாசிரியர் ஒரு ‘பெஞ்ச்’-ல் அமரச் சொன்னார். பின் மெல்ல வார்த்தையைத் துவங்கி, எப்படிப் படிக்கிறாள், வீடு எங்கே போன்ற பொதுவான கேள்விகளைக் கேட்டபின், மறு நாள் மாணவியை அவள் தந்தையுடன் வந்து, தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று அவள் சொல்லவே, ‘சரி உன் அம்மாவை அழைத்து வா’ என்றார். ‘அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை, இருவரும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார்கள்’ என்று சொல்லி விக்கி அழ ஆரம்பித்தாள். உடன் இரண்டு ஆசிரியைகள் அவளை ஆசுவாசப்படுத்தி, கொஞ்சம் பழச்சாறு தந்து அழ வேண்டாமென ஆறுதல் கூறி, பொறுமையாக விஷயத்தைச் சொல்லச் செய்தனர். ஒரு நாள் மாலை, அலுவலகம் சென்றிருந்த அவள் அப்பா வீடு திரும்பவில்லையாம். அலுவலகத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம்.
உடன் இருந்தவர்கள், அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, வீட்டிற்கு வந்து விஷயம் சொன்னார்களாம். அவளின் அம்மா மறுநாள் உடம்பு சரியில்லாமல் அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாராம். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், ஆபரேஷன் நடந்து அவளுக்கு ஒரு தம்பி பிறந்துள்ளதாம். வீட்டில் ஏற்கனவே இரண்டு தம்பிகள் உள்ளனராம். ஒரு வயதான பாட்டியும் அவர்களுடன் இருக்கிறாராம். வேறு உதவிக்கு ஆள் கிடையாதாம். இந்தப் பெண் காலையில் சீக்கிரம் எழுந்து சாப்பாடு செய்து தம்பிகளுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களை குளிக்க வைத்து, துணி உடுத்திவிட்டு மாலை வரைக்குமான உணவுகளை தயார் செய்து வைத்து பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு, தன்னை பள்ளிக்கு தயார் செய்து கொள்வாளாம்.
நேரே ஆஸ்பத்திரிக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு பள்ளிக்கு ஓடி வருவாளாம். சமயங்களில், கூட்ட நெருக்கத்தில் மாட்டிக் கொள்வதால், பள்ளிக்கு வர நேரமாகிவிடுமாம். மாலை பள்ளி முடிந்ததும், ஆஸ்பத்திரிக்கு ஓடுவாளாம். அம்மாவுடன் சிறிது நேரம் பேசி விட்டு, வேறு இடத்தில் உள்ள அப்பாவைப் பார்ப்பாளாம். இதைச் சொல்லும் பொழுது அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்ததாம்.
அப்பா உடல்நலம் தனக்குக் கவலையளிப்பதாகக் கூறி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறாள். இரவு எட்டு மணி வரை அவருடன் இருந்து விட்டு வீடு திரும்புவாளாம். அதற்குள் தம்பிகள் தூங்கி விடுவார்களாம். மறுநாள் ஆஸ்பத்திரிக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டு, ஏதேனும் இருப்பதை சாப்பிட்டு தூங்குவாளாம். சில நாட்களாக அவளின் தினசரி வாழ்க்கை முறை இதுதானாம். பள்ளிப் பையிலிருந்து புத்தகம் எடுத்துப் பார்க்கக் கூட நேரம் கிடையாதாம். வகுப்பறையில், கரும் பலகையில் ஆசிரியர் எழுதும் பொழுதெல்லாம் அவள் அம்மா, அப்பா மட்டும்தான் கண்ணில் தெரிவார்களாம். எப்பொழுது பள்ளி முடியும், ஓடிப் போய் அப்பா-அம்மாவை பார்க்கணுமே என்று தவித்துக் கொண்டிருப்பாளாம். கேட்ட நமக்கே உடல் புல்லரித்தது.
ஒரு பன்னிரண்டு வயது சிறுமி, ‘குருவி தலையில் பனங்காய்’ என்பார்களே. அது போன்று துள்ளிக் குதித்து ஓடியாட வேண்டிய வயதில் இப்படியும் ஒரு குடும்ப சுமையா? பின்புலங்களை ஆராயும் பொழுது தான் ஒவ்வொருவரின் மன வேதனை தெரிய வருகிறது. அவளைப் பார்த்து அக்கம்பக்கம் முழுவதும் பரிதாபம் பேச்சுதான். ஆனால் அவளோ தன்னைப்பற்றி கவலையே படவில்லை. வீட்டின் பொறுப்பை சுமந்து கொண்டு ஒரு தாயைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தாள். வீட்டில் தம்பிகளை பற்றிய கவலை. அப்பா-அம்மா உடல் நலம் பெற்று வர வேண்டுமே என்கிற ஆதங்கம்!. இத்தனைக்கு நடுவில், அவள் பள்ளிக்கு வருவதே பெருஞ்செயல், படிக்க முடியாவிட்டாலும், பள்ளி வருவதை கடமையாகக் கொண்டாள்.
இப்படிப்பட்ட சூழலில், பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளும் பிள்ளைகள் கண்டிப்பாக எதிர்காலத்தில் நல்ல சமூக சேவகர்களாக செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. சூழ்நிலையால் அவளால் படிக்க முடியவில்லையே தவிர, கட்டுப்பாட்டுடன் பள்ளிக்கு வந்து போவது தன் கடமை என்பதை உணர்ந்திருந்தாள். படிப்பில் கவனம் குறைந்து விட்டது என்பதற்காக அவளை குறைகூறிக் கொண்டிருந்தால் நாம் நம் கடமையில் சிறிது மாறுபட்டிருப்போம். அதனால்தான் எதையும் அலசி ஆராய்ந்து காரணங்களைக் கண்டுபிடித்து விட்டால், எதுவுமே சிரமம் கிடையாது. அந்தச் சிறுமியின் குடும்பப் பொறுப்பை பாராட்டி, அனைவரும் அவளுக்கு ஆறுதல் அளித்தனர்.
ஊக்கமளித்து வேண்டிய உதவியைச் செய்தனராம். அப்பொழுதுதான் ஆசிரியைக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்ததாம். அவள் பாடம் செய்வதை கவனிக்க ஒரு தலைவியை நியமித்தாரே. அவள் தினமும் சிறுமி மணி அடித்தவுடன் வீட்டுப்பக்கம் கூட போகாமல், எங்கோ ஓடுகிறாள் என்றாளே, அது ஆஸ்பத்திரிக்குத்தான் என்று தெரிந்ததும் மனம் கலங்கியதாம். உண்மை புரியாமல் அந்தப் பெண்ணைப் பற்றி ஏதேதோ நினைக்கத் தொடங்கினோமே எவ்வளவு முட்டாள்தனம் என யோசித்தார்களாம்.
ஒரு நீதி போதனை வகுப்பில் பலவிதமான கருத்துக்களைப் பற்றி பிள்ளைகளுக்குள் கலந்துரையாடல் நடந்ததாம். யாருடைய குணத்தையோ, அறிவையோ சரியாக புரிந்து கொள்ளாமல், ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பக்கூடாது என்றெல்லாம் ஆசிரியர் அறிவுரை வழங்கினாராம். அந்த சமயம் மற்றொரு பெண் எழுந்து தன் கதையை கூற ஆரம்பித்தாளாம். அவளின் அப்பா ஒரு விபத்தில் அகால மரணமடைந்தாராம். கொஞ்சம் விவசாய நிலம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்ததாம்.
அவள் அம்மா தினமும் காலையில் இட்லி கடை நடத்தி வருகிறாராம். அவளும், அவள் தம்பியும் தினமும் காலை சைக்கிளில் இட்லி, சட்னி, சாம்பார் எடுத்துச் சென்று சில வீடுகளுக்கு வாடிக்கையாக கொடுப்பார்களாம். கடைக்கு வருபவர்களுக்கு அம்மா காலையுணவு தருவார்களாம். தம்பியும் அவளும் பாத்திரங்களை காலி செய்து எடுத்து வந்து அம்மாவிடம் தந்து விட்டு, பள்ளிக்குக் கிளம்ப தயாராவார்களாம்.
மாலையில் அம்மாவுக்கு மாவாட்ட உதவி செய்து விட்டு, தங்கள் வீட்டுப் பாடங்களை செய்வார்களாம். இவற்றை மிகவும் பெருமையாகத்தான் சொல்லிக் கொண்டாள். காரணம், ஆசிரியையும் “யார் யாரெல்லாம் பெற்றோருக்கு உதவி செய்வீர்கள்?” என்று கேட்டிருந்தார். அவள் படிப்பிலும் சுறு சுறுப்பாகத்தான் காணப்பட்டாள். இவ்வளவு உதவிகரமாக இருக்கிறாள் என்பது அவள் சொன்ன பிறகுதான் புரிந்தது. எங்களின் நன்மதிப்பு மேலும் அவள்பக்கம் அதிகமாயிற்று. ஏதோ, எல்லோரும் படிக்க வந்தவர்கள், வசதியானவர்கள் என்று நினைத்து ஒரே மாதிரி கற்பித்து விட முடியாது. மனநிலை என்பது வேறுபட்டது. வளரும் சூழல், வளர்க்கப்படும் விதம் அனைத்தும் மாறுபட்டது.
உடல் கோளாறு என்று மருத்துவரிடம் செல்கிறோம். முதலில் நம் உடல் கோளாறு புரிந்து மருந்து தருகிறார். சரியாகா விடில் பல ‘டெஸ்ட்டு’கள் எடுத்து, கண்டு பிடித்து அதற்கேற்ற சிகிச்சையைத் தருகிறார். நலமடைகிறோம். பிள்ளைகளிடம் வித்தியாசம் தெரியும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்திப் பார்க்கிறோம். பலனில்லை என்று தோன்றினால், அவர்களின் பின்புலம், குடும்ப சூழல் இவற்றை ஆராய்ந்தால், மாற்றத்திற்கான காரணம் புலப்படும். சரியான நேரத்தில் நாம் தரும் ஆலோசனைகள் கண்டிப்பாக முன்னேற்றத்தைத் தரும். அதற்கான பொறுமையும், கையாள்வதற்கான திறனும் இருந்தால் போதும். எந்த பிள்ளையும் நம் பிள்ளைதான் நல்ல பிள்ளையும் கூட.