அழும் குழந்தையை சமாளிக்கும் முறை!! (மருத்துவம்)
பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை. அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.
அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.
சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.
இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.
இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.
பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும். தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அல சினால் பொடுகு குணமாகும். இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.