பாகுபாடுகளை உரக்கச் சொல்லும் டிஸ்னி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
24 வயதாகும் ரியா சைனப், கேரளாவைச் சேர்ந்தவர். தன் தந்தையின் வேலை காரணமாகப் பல நாடுகளில் வசித்து, கடைசியாகக் கனடாவில் வளர்ந்தார். டிஜிட்டல் ஆர்ட் மற்றும் மிக்ஸ்ட் மீடியா கலைஞராக இருக்கும் ரியா, சமூக வலைத்தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் விதமாக ‘ரியா டஸ் ஆர்ட் (riyadoesart)” எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் கலை மூலம் பல உண்மைகளை உரக்கச் சொல்லி வருகிறார்.
லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு அனிமேஷன் படித்து வரும் ரியாவிடம் பேசினோம். ‘‘எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எப்போதும் ஓவியம் வரைந்து கொண்டு இருப்பேன். பொழுதுபோக்காக ஆரம்பித்த ஓவியம் என்னுடைய முழுநேர விருப்பமாக மாறும் என்று எனக்கு அப்போது ெதரியாது’’ என்றவர் தன் ஓவியங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். ‘‘பொதுவாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் பெண்களை பிரவுன் கேர்ள்ஸ் என்றுதான் வெளிநாட்டினர்கள் அழைப்பதுண்டு.
எப்படி கறுப்பின மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறதோ, அதே போல தெற்காசியப் பெண்கள் மீதும் சில ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அவர்கள் சாதனையாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கென ஒரு அடையாளத்தினை அங்கு யாரும் அங்கீகரிப்பதில்லை. இதை நான் கண்கூடாக பார்த்திருக்கேன். நான் நான்கு நாடுகளில் வசித்துள்ளேன். அங்கு இந்தியர்களைச் சந்திப்பதே அரிதாக இருக்கும். அப்படியே அங்கு வசித்து வந்த சில இந்தியர்கள் என் நண்பர்களானார்கள். நாங்களும் மற்ற ஆசிய பெண்களைப் போல் சில பிரச்னைகளை சந்தித்து வந்தோம்.
மற்ற நாடுகளில் நடப்பது போல், எங்களுக்கு எதிராகப் பெரிய வன்முறையோ அல்லது இனவெறி செயல்களோ எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் நுட்பமான சில பாகுபாடுகள் எப்போதுமே இருக்கும். அப்போதுதான், நாம் எவ்வளவு தான் வசதியுடன் அங்கு வசித்து வந்தாலும், மதம் மற்றும் இனம் சார்ந்த சில நுட்ப பாகுபாடுகள் ஏற்படும் போதுதான், எந்த ஒரு வசதிகள் இல்லாமல் வசித்து வருபவர்களில் ஒவ்வொருவரும் தினமும் இந்த பாகுபாடுகளை எவ்வளவு பெரிய அளவில் சந்திக்கிறார்கள் எனப் புரிந்தது.
அதனால் என்னுடைய கலை மூலம், வெளித் தெரியாத சில கறுப்பின மற்றும் தெற்காசியப் பெண்களின் சாதனையை என்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஊக்குவித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. இது தவிர ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறையையும் முன்னிலைப்படுத்தி என் ஓவியம் மூலமாக குரல் கொடுத்து வருகிறேன்’’ என்று கூறும் ரியா டிஸ்னி கதாபாத்திரங்களை தன்னுடைய பாணியில் அழகாக வரைந்து அதை டி-ஷர்டுகள், க்ராப்-டாப்ஸ், காபி கோப்பைகள், நோட் புத்தகங்களில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும், நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு திருமண அழைப்பிதழ்கள், ஸ்டிக்கர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களையும் வடிவமைத்துக் கொடுக்கிறார்.
‘‘ஓவியக் கலையைத் தவிர புத்தகம் வாசிப்பதும், போட்டோகிராஃபியும் என்னுடைய மற்ற இரண்டு பொழுதுபோக்குகள். புத்தகங்கள் என வரும் போது வரலாறு, சமூகவியல் மற்றும் உளவியல் சார்ந்த புத்தகங்களை தான் அதிகம் விரும்பி படிப்பேன். அதேப்போல் உளவியல் எனக்கு மிகவும் பிடித்த துறை. எதிர்காலத்தில் உளவியல் படித்து, ஆர்ட் தெரபியில் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
போட்டோகிராஃபி மட்டுமல்ல பல இடங்களுக்கு பயணம் செய்யவும் எனக்குப் பிடிக்கும். கென்யா, குவைத் என நான் பயணம் செல்லும் இடங்களுக்கு செல்லும் போது அங்கு எனக்கு பிடித்த வனவிலங்குகள், அரிய வகை பறவைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். இந்த 2022 ஆம் ஆண்டு என்னுடைய அனிமேஷன் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் விதமாக அதற்காகவே பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி, அதில் என்னுடைய கலைப்பொருட்கள், புதுவருட பிளானர், காலண்டர்களையும் விற்பனை செய்ய இருக்கிறேன். இது தான் என்னுடைய ஷார்ட் டர்ம் கோல். இதைத் தாண்டி வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் சேர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு” என்று கூறும் ரியா தற்போது கல்லூரி படிப்புடன், ஒரு டிசைன் நிறுவனத்தில் வரை கலை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.