அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)
அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே சிகிச்சைக்குப் பின்னரும் மாதக்கணக்கில் தொட்டுத் தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் இன்ஃபுளூயன்சா(Influenza) எனப்படும் Flu காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், எந்தக் காய்ச்சலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார் தொற்றுநோய் துறையின் முதுநிலை நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன். ஃப்ளூ காய்ச்சலின் தாக்கம் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கிறார்.
இன்ப்ளூயன்சா என்பது வைரஸால் தொற்றக்கூடிய ஒரு காய்ச்சல் ஆகும். அதிகளவு நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வரை இன்ஃப்ளூயன்ஸா கொண்டு செல்கிறது. சுவாசப் பாதை நோய்த்தொற்றுக்கும் இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம். இன்ஃப்ளூயன்ஸா A வைரஸ் உயிரின் தற்காப்பு மூலங்களில் குறித்த காலத்துக்குள்ளாக மாற்றங்களை உண்டாக்குகிற திறனைக் கொண்டுள்ளது. இந்த உயிரின் தற்காப்பு மூலங்களில் ஏற்படும் பெரியளவிலான மாற்றங்கள் தற்காப்பு பெருமாற்றங்கள் எனவும், சிறிய மாற்றங்கள் தற்காப்பு பிறழ்வுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்காப்பு மூலப் பெரு மாற்றங்கள் என்பவை
அதிகளவில் பரவும் தொற்று நோய்களுடனும் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா A-வின் நோய்த்தொற்றுக்கும் காரணமாக உள்ளது.
ஃப்ளூ காய்ச்சல் இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. வட இந்தியாவில் பருவமழை பெய்கிற ஜூலை செப்டம்பர் மாதங்களிலும், தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இன்ஃப்ளூயன்ஸா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இளம் வயதினரை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அதிகளவில் தாக்குகிறது.
மேலும் இதய நாள நோய்கள், கருவுற்ற பெண்கள், சர்க்கரை நோயாளிகள் போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற உயர் ஆபத்துள்ள மருத்துவ பாதிப்புள்ளவர்கள் மத்தியில் உயிரிழப்பும், நோய் பாதிப்பும் கணிசமாக மிக அதிகளவில் காணப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றைத் தொடர்ந்து 3 நாட்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கான இடரை இன்ஃப்ளூயன்ஸா அதிகப்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நுரையீரல் தடை ஏற்படுத்தும் நாற்பட்ட நோய்கள் தீவிர நிலையை எட்டுவதற்கும் இது காரணமாகிறது.
குளிர்காய்ச்சலின் மிக முக்கியமான மற்றும் பொதுவான சிக்கல் என்பது நிமோனியாவாகும். சுவாசத்திறனில் இது ஏற்படுத்தும் பாதிப்புக்களுக்கும் கூடுதலாக இதய தசை அலர்ஜி மற்றும் இதயச் சுற்றுப்பை அலர்ஜி ஆகிய பிற உடல் அமைப்புக்களிலும் பாதிப்புக்களை விளைவிக்கும். இவை அரிதாக ஏற்பட்டாலும் பருவகாலம் மற்றும் நோய்த்தொற்று அதிகளவில் இருக்கும் போதும் இன்ஃப்ளூயன்ஸா சிக்கலை உண்டாக்குகிறது. குளிர்காய்ச்சல் கட்டுப்பாட்டில் இல்லாதபோது பரிசோதனை முறைகள் வழியாக வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வைரசுக்கு எதிரான சிகிச்சை, ஆன்டிபயாட்டிக் சிகிச்சை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றின் மீது பரிசோதனையின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று கருதப்படுமானால் நோயறிதலுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இன்ஃப்ளூயன்ஸாவைக் கண்டறிவதில் பி.சி.ஆர் பெருக்க வழிமுறையைச் சார்ந்த மூலக்கூறு மதிப்பீடுகள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸைக் கண்டறிவதற்கான தர நோயறிதல் வழிமுறையாகக் கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற பரிசோதனைகள் நாடெங்கிலும் தரநிலைப்படுத்தப்பட்ட பரிசோதனையகங்களில் கிடைக்கிறது.
இன்ஃப்ளூயன்ஸா என்பது 1 முதல் 2 நாட்கள் வரையிலான அடைகாத்தல் காலத்தைத் தொடர்ந்து வழக்கமாக தீவிரத்தன்மையுடன் வெளிப்படும். முதலில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து மற்றோரு நபருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தால் போதும். நோய்த்தொற்றுள்ள பிற பொருட்களோடு தொடர்பு ஏற்படுவதன் வழியாகவும் இது பரவக்கூடும். காய்ச்சல், குளிர் ஜூரம், தலைவலி, கடுமையான தலைவலி, உடல்நலக் குறைவு மற்றும் பசியற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும். இத்துடன் வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை வலி போன்ற சுவாசப் பாதை நோய் அறிகுறிகளும் பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும்.
இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு துவக்கத்தில் காய்ச்சல் மிக அதிக தீவிரமானதாக இருக்கும். மூன்று நாட்களுக்குப் பின்னர் அது குறைந்து படிப்படியாக மறைந்துவிடும். சராசரியாக 4 முதல் 8 நாட்கள் வரை இந்நோய் நீடிக்கவும் வாய்புள்ளது. சிவப்பான மற்றும் நீர் தளும்பும் கண்களுடன், மதமதப்பான முகத்தோடும் நோயாளிகள் காணப்படுவார்கள். காய்ச்சலுக்குப் பின்னர் அதிலிருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு சில வாரங்கள் ஆகும். அக்காலத்தில் வறட்டு இருமலும், உடல்நலக் குறைவும் நோயாளியின் மிக முக்கியப் பிரச்னையாக மாறும்.
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதன் கடுமையான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க மிக முக்கியமான உக்தியாக இருப்பது பருவகால இன்ஃப்ளூயன்ஸாவிற்கு எதிராக நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் பருவகால போக்கின் அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு இந்த நோய்த்தடுப்பூசியை வழங்குவதற்கான சிறந்த காலம் என்பது, மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முந்தைய காலமாக இருக்கும். அதாவது அக்டோபர் மாதத்துக்கு முன்னால் நாட்டின் எஞ்சிய பகுதிகளுக்கு அது ஜூன் மாதத்துக்கு முந்தைய காலமாக இருக்க வேண்டும். எனினும் அதிக ஆபத்துக்கு வாய்ப்புள்ள நபர்கள் மற்றும் குழுக்களுக்கு ஆண்டின் எந்த நேரத்திலும் ஃபுளூ தடுப்பூசி மருந்தை வழங்கலாம்.
இன்ஃப்ளூயன்ஸா பரவலான தொற்றுப்பரவலும் மற்றும் குறிப்பிட்ட அமைவிடத்தில் காணப்படும் நிகழ்வுகளும், அனைத்து சமூகங்கள் மீதும் ஒரு கனமான சமூகப் பொருளாதார சுமையை சுமத்துகின்றன. அடுத்த நோய்த்தொற்று எப்போது ஏற்படும் என்பதைக் கணிப்பதும் எளிதல்ல. இருமல் மற்றும் தும்மலுக்குப் பின்னர் கையைத் தூய்மைப்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது, நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுக்கு ஆன்டி வைரஸ் மருந்துகளை வழங்குவதும் இந்த நோயின் ஒட்டுமொத்த சுமையினைக் குறைத்து குணமடைவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்.