தொழிலுக்கு பாலமாக அமைந்த இரண்டு தலைமுறை நட்பு!(மகளிர் பக்கம்)
செக்கு எண்ணெய் நம் முன்னோர் காலத்தில் இருந்து காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய். ஆனால் சில காலமாக எல்லோரும் ரீபைன்ட் எண்ணெய்க்கு மாறி இருந்தோம். தற்போது மீண்டும் பலர் செக்கு எண்ணெய்க்கு மாற ஆரம்பித்துள்ளனர். அதனை புரிந்து கொண்ட திருப்பூர் தாராவரத்தைச் சேர்ந்த நண்பர்கள் பழனிச்சாமி, சதீஷ்குமார், நவீன்குமார், பல இன்னல்களைக் கடந்து தங்களுக்கு என ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்கள். தரமான பொருட்கள் கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு இந்த மூன்று நண்பர்கள் உதாரணம்.
‘‘நான், சதீஷ்குமார், நவீன் மூவருமே சின்ன வயசில் இருந்தே நண்பர்கள்’’ என்று பேசத் துவங்கினார் பழனிச்சாமி. ‘‘நாங்க மூவருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்க. பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகிறோம். ஒரு கிராமத்தில் எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். ஆனால் எங்க மூன்று குடும்பமும் இணைய காரணம் எங்களின் நட்பு என்று சொல்வதை விட எங்க
அம்மாக்களின் நட்புன்னுதான் சொல்லணும். எங்க மூன்று பேருடைய அம்மாக்கள் ஒரே இடத்தில்தான் கூலி வேலை பார்த்து வந்தாங்க. அப்பாக்களுக்கும் பெரிய வேலை என்று சொல்லிட முடியாது. என்னுடைய அப்பா மாட்டுத் தீவனக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நவீனோட அப்பா டிரைவராக இருந்தார்.
சதீஷுடைய அப்பாவிற்கு வாட்ச்மேன் வேலை. கிடைக்கும் வருமானத்தில் கஷ்டப்பட்டுதான் எங்களை படிக்க வச்சாங்க. காரணம், நாங்க படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு விரும்பினாங்க. நாங்களும் படிச்சோம். பொறியியல் பட்டம் பெற்றோம். நல்ல வேலையில் சேர்ந்தோம். நவீன் சிவில் படிச்சதால், மூன்று வருடம் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து அந்த துறையில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டு 2015ம் ஆண்டு கட்டுமானம் நிறுவனத்தை துவங்கினார்.
நானும் சதீஷும் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தோம். ஆனால் எங்க மூவருக்குமே ஒருவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் செய்ய வேண்டும்னு விருப்பம் இருந்தது. பல தொழில்கள் இருந்தாலும் தரமான உணவு கொடுத்தால் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஐஸ்வர்யம் செக்கு எண்ணெய்’ நிறுவனம்.
ரீபைன்ட் எண்ணெய் பெயரில் கலப்பட எண்ணெயை கொடுக்கிறார்கள் என்றுதான் பலர் செக்கு எண்ணெய்க்கு மாறுகிறார்கள். ஆனால் அதிலும் சிலர் கலப்படம் செய்யத்தான் செய்கிறார்கள். அதனால் எந்த கலப்படமும் இல்லாமல் நல்ல தரமான சுத்தமான எண்ணெயினை கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அந்த எண்ணெயை இங்கு மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் எக்ஸ்போர்ட் செய்ய திட்டமிட்டோம்.
ஒரு தொழில் ஆரம்பிச்சா அதற்கு முதலீடு அவசியம். நாங்க பிசினஸ் உலகத்திற்கு புதுசு. தொழில் நடத்த பணத் தேவைக்காக முதலீடு நிறுவனங்களுக்கு சென்ற போது அவர்கள் எங்களுக்கு பிசினஸ் துறையில் அனுபவம் இல்லை என்ற ஒரே காரணத்தால், கடன் கொடுக்க முன்வரவில்லை. அதனால் எங்க மூவரின் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலீடாக கொண்டு 2018ம் ஆண்டு ஜூன் மாசம் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம். அதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு வருஷம் அந்த துறை பற்றி ஆய்வு செய்தோம்.
செக்கு எண்ணெய் விற்பனை செய்பவர்களை சந்தித்து, இந்த தொழிலில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிசினஸ் குறித்து அலசினோம். அவர்கள் என்ன செக்கு இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள், அதில் தரமானது என்ன என்று ஆய்வு செய்து, செக்கு இயந்திரங்களை ஒன்வொன்றாக வாங்கினோம்’’ என்றவர் தொழிலில் அவர்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து விவரித்தார்.
‘‘ஊரில் எங்களின் தொழில் இயங்கி வந்தாலும், சென்னை பள்ளிக்கரணையில் ஒரு அவுட்லெட் ஆரம்பிச்சோம். காரணம், எந்த தொழிலாக இருந்தாலும், அதற்கான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். ஆனால் நாங்க எதிர்பார்த்தது போல் வளர்ச்சியினை ஆரம்பத்தில் பார்க்க முடியவில்லை. தொழில் துவங்கியதும் நாங்க எதிர்பார்த்த அளவு லாபம் பார்க்க முடியவில்லை. விற்பனையும் குறைவாகத்தான் இருந்தது. தொழில் ஆரம்பிச்சிட்டோம். அதை சமாளிக்கணும்.
பொருள் வாங்க, வேலை செய்பவர்களுக்கு சம்பளம் என கொஞ்சம் கஷ்டமா இருந்தது. தொழில் ஆரம்பிச்சா மட்டும் போதாது, அதை மார்க்கெட்டிங் செய்யணும். அப்போதுதான் மக்களுக்கும் எங்களைப் பற்றி தெரிய வரும். அதற்கு எங்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது விவசாயம் சார்ந்த யுடியூப் சேனல். அவர்கள் எங்களைப் பேட்டி எடுத்து அதன் மூலம் பலருக்கு எங்களைப் பற்றி தெரிய வந்தது. எங்களின் வாடிக்கையாளர்களும் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க. தற்போது 1800 வாடிக்கையாளர்கள் எங்களிடம் மட்டும்தான் எண்ணெய் வாங்குகிறார்கள்’’ என்றவர் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே அதனை அனுப்பி வைக்கிறார்கள்.
‘‘எங்க ஊரில் உள்ள மக்களை மட்டுமே நம்பி நாம் வியாபாரம் செய்ய முடியாது. எல்லா இடத்திலும் டார்கெட் செய்ய வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டோம். முதலில் கண்ணாடி குடுவையில்தான் கொடுக்க திட்டமிட்டோம். ஆனால் பார்சலில் போகும் போது உடைய வாய்ப்புள்ளது. அதனால் டின்களில் அனுப்ப நினைச்சோம். டின் பாத்திரங்களின் விலையும் அதிகம், மேலும் அதை கொரியர் செய்வதற்கான கட்டணமும் அதிகம் என்பதால் அதையும் கைவிட்டோம். இப்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் பேக்கிங் செய்கிறோம். அதுவும் ஃப்ரெஷ்ஷாக பேக் செய்வதால், வாடிக்கையாளர்களின் கையில் எண்ணெய் கிடைச்சதும், அதை ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் அவர்கள் மாற்றி வைத்திடலாம். இதனால் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுப் பொருட்கள் அதிக நாட்கள் இல்லாமல் இருக்கும்.
எண்ணெய் மட்டுமில்லாமல் மசாலா பொருட்களும் இப்போது விற்பனை செய்து வருகிறோம். ரசப்பொடி, சாம்பார் பொடி, பருப்பு பொடி போன்ற மசாலாக்களை நாங்களே தயாரித்து பேக்கிங் செய்து விற்பனை செய்கிறோம். இந்தப் பொடிகளையும் முதலில் பலமுறை நாங்க சமைத்து சரியான சுவை வந்த பிறகுதான் செய்ய ஆரம்பிச்சோம். அதையும் ஆர்டரின் பேரில் கொடுத்து வருகிறோம். எங்களுடைய அம்மாக்கள் இப்போது எங்களுக்கு உதவியா இந்த தொழிலில் ஈடுபட்டு வராங்க. மசாலாப் பொடிகள் தயார் செய்வது முதல் பேக்கிங் செய்வது வரை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
எங்களின் அடுத்தகட்ட திட்டம் சென்னை தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சப்ளை செய்யணும். அதன் முதல் கட்டமாக அமேசான் மற்றும் பிளிப்கார்டிலும் எங்களின் எண்ணெய் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் மாடு கொண்டுதான் செக்கை ஆட்ட நினைச்சோம். ஆனால் அதற்கான மெயின்டனென்ஸ் அதிகம் என்பதால், செக்கு அரைக்கும் குழவி மட்டும் மரத்தில் செய்திருக்கிறோம்.
இதனால் எண்ணெய் அரைக்கும் போது இயந்திரம் சூடாகாமல் இருக்கும். இது கிரைண்டர் போல் வேகமாக எல்லாம் அரைக்காது. அதற்கென ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட கடலை, எள், தேங்காய் எல்லாமே இங்குள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம். இதில் தேங்காய் மட்டும் சல்பர் இல்லாததை பார்த்து பயன்படுத்துகிறோம். எங்களைப் பொறுத்தவரை காசுக்காக விற்பனை செய்யும் போது, அதை தரமானதாக கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறோம். அதை மீறக்கூடாதுன்னு மூவருமே உறுதியாக இருக்கிறோம்’’ என்றார் பழனிச்சாமி.