கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* வெண்டைக்காயின் வழுவழுப்பு மாற, வதக்கும் போது வெண்டைக்காய் மீது மோர் அல்லது புளி கரைத்த நீரை தெளித்தால் போதும்.
* இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
* வெங்காய பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயம், சிறிது இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்தால் வாசனை தூக்கும்.
– யாழினி பர்வதம், சென்னை.
* பனி நாட்களில் தயிர் சாதத்தில் சுக்குப்பொடி சிறிதளவு அல்லது ஓமம் தாளித்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மேலும் சளி பிடிக்காது.
* பிள்ளைகளுக்கு மோர், ரசத்தில் ஓமம் தாளித்துப் போட்டு வைத்து ஊற்றி சாப்பிடச் செய்யலாம். பனி நாட்களில் சளி பிடிக்காது.
* சளியாக இருந்தால் கடுகை வறுத்துப் பொடி செய்து சுடு சாதத்தில் போட்டு நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை இதை செய்யலாம்.
– கே.நாகலட்சுமி, சென்னை.
* வடைக்கு அரைத்த மாவை எண்ணையில் போடுவதற்கு முன், வெறும் வாணலியில் ஒரு கிளறு கிளறினால் ஈரப்பதம் போய்விடும். பிறகு வடை செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது.
* ரவா உப்புமா செய்யும்போது இரண்டு ஸ்பூன் அவல் அல்லது ஒட்ஸ் கலந்து செய்தால் சுவை கூடும்.
* சாலட் செய்யும்போது, கடிக்க கஷ்டமாக இருந்தால் மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி சாப்பிட்டால், சுவையும் இருக்கும். பல் வலிக்காது.
– ஸ்ருதி, சென்னை.
* பிரயாணங்களுக்கு சப்பாத்தி எடுத்துச் செல்லும் போது அவை மிருதுவாக இருக்க அதை வைத்திருக்கும் டப்பாவில் சில இஞ்சித் துண்டுகளை போட்டு வைக்கவும்.
* காய்ந்த வேப்பம்பூ, மற்றும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு இவைகளை வாணலியில் எண்ணை விடாமல் வறுத்து உப்பு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
* கடலை பருப்பு போளிக்கு வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்க மிகச் சுவையாக இருக்கும்.
– இந்திரா கோபாலன், திருச்சி.
* இட்லி மாவு கொஞ்சம், கடலை மாவு, காரப் பொடி, உப்பு, பெருங்காயம், கொத்தமல்லித் தழை கலந்து மொச்சை, பருப்பையும் போட்டு பிசிறி எண்ணெயில் பொரித்தெடுத்தால் ‘மொச்சை பக்கோடா’ கரகரவென்று சூப்பர் டேஸ்டில் தூள் கிளப்பும்.
* மாறுதலாக தயிர் பச்சடி செய்ய வேண்டுமா? ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்த ஆறியதும் தயிர், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கீறிய மிளகாய் சேர்த்து கடுகு தாளிக்கவும்.
* அரை ஆழாக்கு பச்சரிசி, அரை ஆழாக்கு புழுங்கலரிசி இரண்டையும் ஊறவைத்து ஒரு பெரிய உருண்டை சாதத்தோடு சேர்த்து நைஸாக அரைத்து, ஒரு கரண்டி இளநீரில் 1 ஸ்பூன் சர்க்கரையைக் கலந்து அரைத்த மாவில் சேர்த்து துளி சோடா உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மறுநாள் தேங்காய்ப்பால் சேர்த்து கரைத்து ஆப்பமாக ஊற்றினால், பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
* கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் கலந்தால் சுவையான மிருதுவான கேக் தயார்.
* கசப்பு வாய்ந்த காய்கறிகளை நறுக்கி அரிசி களைந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கும்.
* கிழங்குகளை உப்பு கரைத்த நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பின் வேக வைத்தால் சீக்கிரம் வேகும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* ரவை உப்புமா கிளறும்போது தண்ணீரோடு மோர் கலந்து உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.
* உளுத்தம் வடை மாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு கலந்து வடை தட்டினால் வடை அதிக எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.
* வறுவல், கூட்டு, இவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரட் அல்லது ரஸ்க்கை மிக்ஸியில் பொடித்து தூவலாம்.
* கடாயில் சிறிது தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, புளி, பச்சை மிளகாய், கல் உப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, திருச்சி.
பலாப்பழ பணியாரம்
தேவையானவை:
பலாச்சுளை – 15,
பச்சரிசி மாவு – அரை கிலோ,
வெல்லம் – அரை கிலோ,
தேங்காய்த் துருவல் – அரை கப்,
முந்திரி பருப்பு – 10,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 10,
எண்ணெய் – 300 கிராம்.
செய்முறை:
பலாச்சுளைகளைக் கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கி கூழாக அரைக்கவும். தேங்காய் துருவல், முந்திரியை விழுதாக அரைக்கவும். ஏலக்காயை தூளாக்கவும். வெல்லத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி, அதில் பச்சரிசி மாவு, பலாப்பழ கூழ், தேங்காய், முந்திரி விழுது, ஏலக்காய் தூள், நெய் கலந்து நன்கு கெட்டியாக கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவு கலவையை எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் பறிமாறவும்.