ங போல் வளை… யோகம் அறிவோம்!(மருத்துவம்)

Read Time:9 Minute, 15 Second

யோகா என்ற சொல் இன்று உலகம் முழுதுமே அறியப்பட்டிருக்கிறது. உலகின் பெரும்பகுதி மக்கள் கடைப்பிடிக்கும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் முதன்மையானதாக யோகா உருவெடுத்துவருகிறது.

இன்று ஒருவர் தன் கைப்பேசியை எடுத்துத் தேடினாலே யோகம் அல்லது யோகாசனம் பற்றிய ஆயிரம் தகவல்களைத் திரட்டி விடமுடியும். ஆனாலும் யோகாசனம் பற்றியும் யோகம் பற்றியும் நாம் அறியாத அற்புதங்கள் பல உள்ளன என்பதே உண்மை.  யோகம் இந்தியாவின் பாரம்பரிய கலை. உடலை வலுவாக்கி உள்ளத்தை ஞானத்தின் தேடலுக்கான வழியில் தடையின்றி முன்னேற்றுவதற்காக நம் முன்னோர் உருவாக்கினார்கள். ஆனால் இந்த நவீன வாழ்வில் யோகமும் தியானமும் வெறுமனே ஆன்மிக சாதனைகளுக்கான கருவியாக மட்டுமே இருப்பதில்லை. இந்த இகவாழ்வை பழுதற வாழ்வதற்கான ஆரோக்கியமான வழிமுறையாகவும் உருவெடுத்திருக்கின்றன.

நவீன வாழ்வியல் தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு மரபார்ந்த யோக முறைகளும் யோக கல்வியும் தீர்வு அளிக்குமா? அதன் சாதக பாதகங்கள் என்னென்ன?

இதை எல்லாம் எவ்விதப் புனிதப்படுத்தலும், புறந்தள்ளல்களும் இன்றி இந்த நூற்றாண்டுக்கான யோகம் எது? அதன் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்வதற்கான பயணமே இத்தொடர். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, உலகம் முழுவதும் இன்று இரண்டு வகையான யோகக்கல்வி அல்லது பாடத்திட்டங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. முதலாவதும் பெரும்பான்மையானதுமானது ‘நவீன யோகக்கல்வி ‘ இரண்டாவதும் முக்கியமானதுமானது ‘மரபுவழி யோகக்கல்வி’.
இந்த ‘நவீன யோகக்கல்வி’ என்பது ஒரு குறிப்பட்ட பலனைக் கருதி செய்யப்படும் பயிற்சிமுறைகளை உள்ளடக்கியது. உதாரணமாக, ஒருவருக்கு முதுகுவலி இருக்கும்பட்சத்தில் அதற்கான பிரத்யேகமான யோகப் பயிற்சிகளை மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் அந்தப் பிரச்சனை கிட்டத்தட்ட முற்றிலுமாகவோ அல்லது பெருமளவிலோ குணமாகும். இப்படி, ஒரு மாற்று மருத்துவ சிகிச்சை போல இன்று யோகா செயல்படுகிறது.

இது பெரும்பாலும் ஆசனப்பயிற்சிகள் என்பதால், உடல் சீராக்கப்படுவது மட்டுமே இதன் நோக்கமாக இருக்கிறது, இதில் மனதளவில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுவே இவ்வகை உடல் சார்ந்த பயிற்சிகளின் எல்லைகள் என்றும் சொல்லலாம்.இன்று உலகம் முழுவதுமுள்ள யோக பயிற்சியாளர்கள் , மாணவர்கள் , நிறுவனங்கள், மற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முதல் வகை யோக முறையைச் சார்ந்தவர்களே. மேற்குலகில் அவர்களின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை மற்றும் அன்றாட பலன் சார்ந்த அணுகுமுறைக்கு இந்தவகைப் பயிற்சிகள் நேரடி அனுபவமாக  கிடைப்பதால், அவர்கள் இதை வரவேற்றனர். ஆகவே உலகம் முழுவதும் இதே வடிவில் யோகாவை  அணுகியது. இதுவே அறுபது முதல் எழுபது சதவிகித மக்களால் பயிலப்படுகிறது. இதில் யோக மரபின் தத்துவமோ, அதன் படிநிலைகளோ, நம்பிக்கை, மற்றும் சம்பிரதாய முறைகளோ பெரியதாகப்  பேசப்படுவதில்லை.  

இந்தமுறை யோகத்தைப் பயிலும்  மாணவர்களுக்கும்  அதற்கான தேவைகள் இருப்பதில்லை. அவர்கள் எதிர்பார்க்கும்  உலகியல் மற்றும் உடலியல்  சார்ந்த பலன் கிடைப்பதால், அதில் நிறைவும், மகிழ்வும் அடைந்துவிடுகின்றனர். ஒப்புநோக்க, மற்ற சிகிச்சை முறைகள் அல்லது கட்டுப்பாட்டு முறைகளைவிட இவ்வகை யோகம் ஒரு சிறந்த கருவி என்றே சொல்லமுடியும்.

இந்திய  அறிதல் முறைகளான தாந்த்ரீகம், ஆயுர்வேதம், யோகம் ஆகியவற்றில் ஆயுர்வேதமும், தாந்த்ரீகமும் மேற்குலகில் பெரும்பாலும் ஒரு கிளர்ச்சிக்காகவோ அல்லது ஆர்வத்துக்காகவோதான் பேசப்படுகிறது. இம்மூன்றில் யோகம்தான் திசை எங்கும் நீக்கமற கிளை பரப்பி செழித்திருக்கிறது எனலாம்.

‘மரபுவழி யோகா’ எனப்படும் யோகக்கல்வி முறை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் இந்திய மரபில், யோகா என்பதை எவ்வகையில் பொருள் கொள்கிறார்கள் என்பதைச் சிறிது பார்த்துவிடலாம். ‘யோக்-யுஜ்’ என்கிற வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது, இதற்கு, ஒருங்கிணைத்தல் என்று பொருள் கொள்ளலாம். எதை ஒருங்கிணைத்தல்? என்கிற கேள்விக்கு புராண, தத்துவ, அறிவியல், உளவியல் எனப் பல்வேறு தளங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

நமது யோக மரபு இந்த வாழ்வை ஐந்து தளங்களாகப் பிரிக்கிறது. இதனைப் பஞ்சகோஷம் என்பார்கள். கோஷம் என்பதை அடுக்குகள் அல்லது தளங்கள், உறைகள் என்று மொழிபெயர்க்கலாம். இவை முறையே அன்னமய கோஷம், பிராண மய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞான மய கோஷம், ஆனந்தமய கோஷம் என்று வகைப்படுத்துகிறது. அன்னமய கோஷம், உண்ணும் உணவால் அதாவது அன்னத்தால் உருவாகும் உடல் கண்ணுக்கு தெரிவது.

இரண்டாவது பிராணமய கோஷம், பிராண என்றால் சக்தி அல்லது உயிராற்றல் எனலாம், அதாவது இயக்க சக்தி. இது ஒரு தளம். மூன்றாவது மனோமய கோஷம் அதாவது மனம் எனும் எண்ணங்களால் உருவான தளம், நான்காவது, விஞ்ஞான மய கோஷம் எனும், உள்ளுணர்வு அல்லது உயர்நிலை  அறிவின் தளம்.ஐந்தாவதாக, ஆனந்தமய கோஷம் எனும் மெய்யான ஆனந்தநிலை.இவற்றை ஒருங்கிணைத்து அடையப்பெறும் விடுதலை நிலையை, பதஞ்சலி, திருமூலர் முதல் இன்றைய நவீன யோக ஞானிகள் வரை பல்வேறு காலகட்டத்திலும் தொடர்ந்து பேசிவந்துள்ளனர். இன்னும் ஆயிரமாயிரம் வருடங்களானாலும், இது தொடர்ந்து பேசப்படும்.

ஏனெனில், நமது அன்றாடம் எனச் சொல்லிக்கொள்ளும் அத்தனை அனுபவங்களும், மேலே சொன்ன பஞ்சகோஷ தளங்களில்தான் நிகழ்கின்றன. அதிலும் முக்கியமாக முதல் மூன்று கோஷங்கள் நமது தினசரி வாழ்வு என்று தெளிவாகக் காணமுடியும். நமது வலி, வேதனை, துக்கம், சந்தோசம், அமைதி, படபடப்பு என்கிற அனைத்து அனுபவங்களுளையும் உடலாலோ மனதாலோ மட்டுமே பெரும்பாலும்  நாம் அனுபவிக்கிறோம்.

ஒருவர் ஒரு நாளில் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ செய்யும் பயிற்சியில் அவருடைய மனம், உடல், உயிராற்றல் என மூன்றையும் சமன் செய்யக் கூடிய வல்லமை தரக்கூடிய பயிற்சிகள் இல்லை யெனில் அது முழுமையான யோகக்கல்வியாக இருக்க முடியாது.

அப்படி ஒரு யோகக்கல்வி அமையுமெனில் பயிற்சி தொடங்கிய முதல் 90 நாட்களில், ஒருவருடைய உடல் , உயிராற்றல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிக நல்ல தீர்வும் விடுதலையும் கண்டடையபட்டிருக்கும். இப்படி ஒரு யோகத்தைப் பயில்வதே முழுமையான பலனையும் அளிக்கும். அப்படி ஒன்றை தேடிக்கண்டடைவோம் வாருங்கள். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹெல்த்தி மூலிகை ரெசிப்பிகள்!!(மருத்துவம்)
Next post தமிழ் மொழியில் வீட்டை அலங்கரிக்கலாம்!(மகளிர் பக்கம்)