உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!(அவ்வப்போது கிளாமர்)
ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், சொல்லப்படாத வன்புணர்வுக் கதைகள் சொல்லத் தெரியாத மழலைகள் மனதிலும் புதைந்து கிடக்கிறது.
பெரும்பாலும் இப்படியான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆண்களின் வயது 40, 50 என பொறுப்பான வயதில்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பாலியல் குற்றவாளிகளாக மாற்றுவது எது, ஏன் என நாம் யோசித்து அதற்குத் தீர்வு காண
வேண்டியுள்ளது.
இனிமையாகக் கொண்டாடப்பட வேண்டிய காமம் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி புணர்வதால் கிடைத்திடுமா? அந்த ஆண் மனதை அது வாளாய் மாறிக் கீறிடாதா? தன் வாழ்வில் அப்படியொரு அனுபவத்தை தாண்டும் பெண்ணின் அன்றைய வலி, தாம்பத்ய வாழ்வில் அவள் சந்திக்கும் சிக்கல்கள் எப்படி இருக்கும்?இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று மனநல மருத்துவர் காட்சன் பேசுகிறார்…
பாலியல் ரீதியான நேரடித் தாக்குதல்களில் இளம் வயதினரும், மறைமுகத் தாக்குதல்களில் நடுத்தர வயது ஆண்களும் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இளம் வயதினர் ஒருவித பதற்றத்துடனும், நடுத்தர வயதினர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதற்கு உளவியல் காரணங்கள் உண்டு. பதின் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடல் மற்றும் மன ரீதியான பாலியல் விருப்பங்களைக் கட்டமைக்கிறது. பாலியல் குறித்து கிறுக்குத்தனமான ஆசைகள் எல்லாம் இந்த வயதில் சாத்தியம்.
ஆணின் ஆளுமைத்தன்மையை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன், ஒரு பெண்ணின் மீதான காதல், காமம் மட்டுமல்லாது முரட்டுத்தனமான தாக்குதல்களுக்கும் காரணமாகிறது. ஆனால், இதனால்தான் ஒரு ஆண், பெண்ணின் மீது பாலியல் வன்மத்துடன் நடந்துகொள்கிறான் என்று அதை நியாயப்படுத்திவிட முடியாது. இதுவும் ஒரு காரணம்.
மரபணுக்களால் தீர்மானிக்கப்படாத ஒரு நடத்தையை வாழ்க்கைச்சூழலும், சமுதாயத்திடமிருந்து கற்றுக்கொள்ளலும் நிச்சயமாக நிறைவேற்றிவிட முடியும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அப்பாவைப் போலவே மகனும் இருப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமே. சிறு வயதிலிருந்தே குடும்ப வன்முறைகளைக் கண்ணெதிரில் பார்த்து வளரும் சிறுவர்கள் பிற்காலத்தில் பிறர் மீதும் உடல் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்களில் அதிக அளவில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
குடித்துவிட்டு அம்மாவை அப்பா அடிக்கும் காட்சிகளைப் பார்க்கும் மகன் இதுபோன்று நான் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பான் என்பதே நமது கணிப்பு. ஆனால், இதற்கு நேர்மாறாக அந்தச் சிறுவனும் பிற்காலத்தில் மற்றவர்களை விட போதைப் பழக்கத்திற்கு எளிதில் ஆளாவதற்கு காரணம் மரபணுக்கள் மட்டுமல்ல, சிறு வயதில் ஆழ்மனதைக் காயப்படுத்திய சம்பவங்களும்தான்.
சிறுவயதில் அதிகளவில் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளான சிறுவர்கள், சிறுவயதிலேயே போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்கள், பிறரைத் துன்பப்படுத்திவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி அற்றவர்கள் பெண்கள் மீதான நேரடிப் பாலியல் வன்மத்தை தயக்கம் இன்றி வெளிப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே சிறுவயதில் சகபாலினத்தவராலோ அல்லது எதிர்பாலினத்தவராலோ பாலியல் சீண்டல்களுக்கும், தூண்டுதல்களுக்கு ஆளான சிறுவர்கள் வளர்ந்த பின்பு பாலியல் உறவுகளில் நாட்டம் இல்லாதவர்களாகவும், வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு சாரார் இயற்கைக்கு மாறான பாலியல் தேர்வு கொண்டவர்களாகவோ, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்பப்படுத்திப் பார்க்கும் மனநிலை உடையவர்களாகவோ மாறவும் வாய்ப்பு உள்ளது.
பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன்புணர்வு என்ற வரைமுறைக்குள் மட்டும் அடங்கியதல்ல. பாலியல் நோக்கத்துடன் கூடியப் பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். இதுபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் இருப்பார்கள்.
அவர்களின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடைபோடுவது கடினம். இவர்கள் கடைநிலையில் இருக்கும் சாதாரண ஆணிலிருந்து, சமுதாயத்தின் முக்கிய நபராக வலம் வருபவர் வரை இருக்கலாம். பெண்களை தங்கள் பாலியல் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாகப் பயன்படுத்துவதே இவர்களின் அடிப்படை மன நிலையாகும். பெண்கள் இதுபோன்ற மறைமுகத் தாக்குதல்களை உடனே வெளியில் சொல்ல மாட்டார்கள் அல்லது அடிபணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்ற சூழல்தான் இவர்களுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது.
ஆரம்ப நிலையில் பெண்கள் பொறுமையாக இருப்பது, எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதை, ‘அவர்களுக்கும் இதில் சம்மதம் இருக்கிறது’ என்று ஆண்கள் தங்களுக்கு சாதகமான முடிவையே எடுத்துக்கொண்டு தங்கள் பாலியல் சீண்டல்களைத் தீவிரப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பெண்களின் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள், தனிமை, ஆதரவற்ற தன்மையைத் தெரிந்துகொண்டு இப்படிப்பட்ட பெண்களை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்று முயற்சி செய்வதுண்டு.
சிலர் ஒருபடி மேலே சென்று தான் அடைய விரும்பும் பெண்ணிற்கு அவர்களின் பிரச்சனைகளில் ஆறுதலாக இருப்பது போன்று காண்பித்து உணர்ச்சிப்பூர்வமான சந்தர்ப்பங்களில் அவர்களை வீழ்த்த முயற்சிப்பது, வேலை பார்க்கும் இடங்களில் குறிப்பிட்ட பெண்களுக்கு அதிக முன்னுரிமை மற்றும் சலுகைகளைக் கொடுப்பது, முடியாவிட்டால் அதிக வேலைப்பளுக்களைக் கொடுத்து பழி வாங்குவது போன்ற செயல்களிலும் ஆண்கள் ஈடுபடுவது உண்டு.
இன்றைய காலக்கட்டத்தில், போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசப்படங்களுக்கு அடிமையாதல், பெண்ணை ஒரு உயிராகப் பார்ப்பதை விட தன்னுடைய விருப்பங்களைத் தீர்த்துக்கொள்ளும் போகப்பொருளாகப் பார்க்கும் மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. நிஜவாழ்க்கையையும், கற்பனை உலகத்தையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாதவர்கள், சினிமாக்களில் சில நிமிடங்களில் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் தன்வசப்படுத்தும் ஹீரோக்களைப் போல முயற்சித்துப் பார்க்க விரும்புவதும் எல்லை மீறிய பாலியல் சீண்டல்களுக்குக் காரணமாகிறது.
சில நேரங்களில் மனச்சிதைவு நோய், மன எழுச்சி நோய், மனவளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு, இங்கிதம் தெரியாமல் செக்ஸ் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அளவிற்கு அதீத செக்ஸ் உணர்ச்சிகள் அல்லது விருப்பங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை மழுங்கிப்போதல் போன்றவைகளால் பெண்களைப் பாலியல் தொந்தரவுகள் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், இவர்கள் சமுதாயத்திலிருக்கும் மறைமுக சமூகவிரோதிகளை விட ஆபத்தானவர்கள் அல்ல. மனநல சிகிச்சைகள் மூலம் இவர்களைக் குணப்படுத்த முடியும்.
Paedophilic என்று அழைக்கப்படும் குழந்தைகள் மீது மட்டும் பாலியல் நாட்டம் அதிகம் கொண்டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. பெரும்பாலும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பக்கத்து வீட்டுக்காரராகவோ, உறவினராகவோ, அன்றாடம் பழகும் நபராகவோதான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் குற்றச்செயல்களை யாராவது கண்கூடாகப் பார்க்கும் வரையில் அவர்களை அடையாளம் காண்பது கடினம். அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு சலுகைகள் கொடுப்பது, கட்டி அணைப்பது, மடியில் அடிக்கடி தூக்கிவைத்துக் கொள்வது, அந்தரங்க உறுப்புகளில் தற்செயலாகக் கைகள் படும்படி நடந்துகொள்வது போன்றவைகள் இவர்களிடம் வெளிப்படையாகக் காணலாம். நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மட்டுமே இவர்களை வித்தியாசப்படுத்தி அறிய உதவும்.
மாற்றுவழிகளில் தங்களின் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளும் இன்னொரு கூட்டமும் இருக்கிறது. இவர்களுக்கு உடலுறவை விட பெண்களின் உடல் உறுப்புக்கள், உள்ளாடைகள், ஆபரணங்கள் மற்றும் அணிகலங்கள் ஆகியவற்றின் மீதுதான் அதிக நாட்டமும் திருப்தியும் இருக்கும். பெண்களை அந்தரங்கமாக நோட்டம் விடுவது, கூட்டநெரிசல்களில் உரசுவது மட்டுமே சிலருக்கு பாலியல் கிளர்ச்சியைக் கொடுக்கும். இவர்களால் பெண்களுக்கு அன்றாடம் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இப்படி பலவிதமான பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் ஏராளம். முதலில் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மீளவே நாட்களாகும். தூக்கமின்மை, எரிச்சலுணர்வு, மனப்பதற்றம், பய உணர்வு, கெட்ட கனவுகள் தொந்தரவு போன்றவை ஏற்படும். மேலும் பின்வரும் மனநிலை மாற்றங்களில் சிலவற்றால் பாதிக்கப்படலாம்.
எனக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை அல்லது ஏன் இப்படி ஒரு பாலியல் தாக்குதலுக்கு ஆளானோம் என்ற குழப்பநிலை, இதில் எனது தவறும் இருக்கிறதோ என்ற குற்ற உணர்ச்சி, ஒருவேளை நன்கு அறிமுகமான நபரால் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், ‘இவரா இப்படி நடந்துகொண்டார்’ என்ற நம்ப முடியாமை மற்றும் அதிர்ச்சி, கடவுள் ஏன் எனக்கு இப்படி ஒரு நிலையை அனுமதித்தார் என்று கடவுளின் மீதும், குடும்ப உறுப்பினர்களின் மீதும் கோபம், உலகமே பாதுகாப்பு அற்றதாகத் தோன்றுவது, எல்லோர் மீதும் சந்தேகப்பார்வை,
எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமான உணர்வு, யாரிடமாவது இதைச் சொன்னால் தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம், தனது உடலே அருவெறுப்பானதாகத் தோன்றுவது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, நம்பிக்கை முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் தற்கொலை எண்ணங்கள் மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது எனப் பலவிதமான துன்பங்களைப் பெண்கள் அடைகின்றனர்.
பிற்கால பாதிப்புகள்
ஒரு பெண்ணிற்கு பாலியல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள், புண் ஆறினாலும் மாறாத தழும்புகளைப் போல பல எதிர்கால பாதிப்புகளை ஏற்படுத்தும். திருமணத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள், திருமண வாழ்க்கையை வெறுப்பதுடன் இன்னொரு ஆணின் அடக்குமுறைக்கு வாழ்க்கை முழுவதும் ஆளாக நேரிடுமோ என்ற பயத்துக்குள்ளாவார்கள். எல்லா பெண்களும் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் லேசான மனநல பாதிப்புகளுக்கும் சிலர் அதிக பாதிப்புகளுக்கும் ஆளாக வாய்ப்பு உள்ளது.
படிப்பு மற்றும் வேலைதிறன் பாதிக்கப்படலாம். திருமணம் ஆன பின்பு கணவனின் ஆசைகளுக்கு இணங்க மறுப்பது, செக்ஸ் என்றாலே அருவெறுப்பான ஒன்று என்ற எண்ணத்தில் அதை வெறுப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு கணவன் உடலுறவுக்கு முயற்சிக்கும்போது தொடைகளின் உள்பகுதி மற்றும் பெண்ணுறுப்பு விரல்களால் கூட பிரிக்கமுடியாத அளவிற்கு இறுக்கமாக (Vaginismus) மாறிவிடும்.
இது அவர்களது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் மனநல பாதிப்பு என்றே சொல்லலாம். கடந்தகால பாலியல் வன்முறைக்குள்ளான காட்சிப்படிமங்களுடன் கூடிய கனவுகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்கள் என்றாலே வெறுப்பு ஏற்படும். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற பொதுப்படுத்தும் தன்மை அவர்களது திருமண உறவை பாதிக்கும்.
ஹிஸ்டீரியா
குழந்தை பருவத்தில் மற்றும் பதின்பருவத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்களுக்கு நனவிலி அல்லது ஆழ்மனதில் பதிந்த ஞாபகங்கள் பலவித உடல்நோய் அறிகுறிகளாக வெளிப்பட வாய்ப்பு உண்டு.
இதற்கு ஹிஸ்டீரியா என்று பெயர். திடீரென ஏற்படும் மயக்கம், வலிப்பு நோய், கை கால்கள் விறைத்துக் கொள்ளுதல் அல்லது செயலிழத்தல், மூச்சுவாங்குதல், சாமி இறங்கியது போலவோ அல்லது வேறு யாரோ அவர்கள் உடலில் புகுந்துவிட்டது போலவோ பேசுவது மற்றும் செயல்படுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
இவர்களுக்கு எந்த உடல் பரிசோதனைகள் மேற்கொண்டாலும் நோய் அறிகுறிகளுக்கு ஒத்த பாதிப்பு இருக்காது. மருந்து மாத்திரைகளால் முன்னேற்றமும் இருக்காது.
ஏனென்றால் இது உடல்நல பாதிப்பாக வெளிப்படும் ஒரு மனநல பாதிப்பாகும். மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் மட்டுமே பலன் கொடுக்கும்.இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானவர்களுக்கு சமுதாயம் அளிக்கும் பரிதாபப் பார்வை தேவையில்லை. அவர்களும் சக மனிதர்களாகப் பாவிக்கப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் ஒரு ஆண் தன்னை அணுகுகின்றார் என்று உணர்ந்தால் எச்சரிக்கை
யுடன் இருப்பது மட்டுமல்லாமல், அவரை எச்சரிக்கை செய்யவும் தவறக்கூடாது.
பெற்றோர்களும் தங்கள் பெண்பிள்ளைகள் சொல்வதின் உண்மைநிலையை தெரிந்துகொள்ளத் தவறக்கூடாது. எந்தப் பிரச்சனையானாலும் நமது பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற பாதுகாப்பான மனநிலையை ஏற்படுத்தினால் மட்டுமே பிள்ளைகள் பெற்றோரிடம் இதைப்பற்றி வெளிப்படையாகக் கூறுவார்கள். மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் சிகிச்சையும் அவசியம்.
பெண் மீது ஆணுக்கான பாலியல் இச்சை என்பது இயல்பான ஒன்று. ஆனால், அதில் பல்வேறு வரைமுறைகள் இருக்கின்றன. வயது, சமூக வரைமுறைகளை மீறி அத்துமீறலாக ஆண்கள் ஈடுபடுவதற்கான காரணம் வெளியில் தெரியவா போகிறது என்ற எண்ணமே!
பெண்ணின் இயலாமையான சூழலை, நெருக்கடிகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு பெரிய அதிகார பலம் இருக்கிறது என்ற எண்ணத்தில் இது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். மீ டூ ஆண்களின் இந்த மனநிலையை மெல்ல உடைத்தெறிந்துள்ளது.
இனி ரகசியக் கேமராக்கள் வைத்துப் படம் எடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் அப்படியொரு கருவியாக மொபைல் உள்ளது. ஹை டெக் ஸ்மார்ட் போன்களைப் பெண்கள் தன்னைப் பாதுகாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும். ஆண் அத்து மீறிப் பேசினால் அதையும் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்ய முடியும். ஆண்கள் அனுப்பும் பாலியல் இச்சையைத் தூண்டும் குறுந்தகவல்களை ஆதாரங்களாகவும் பயன்படுத்த முடியும்.
இனிமையாகக் கொண்டாட வேண்டிய காமம் பெண்கள் மீது சுமத்தப்படும் வன்முறையாக மாறும்போது, பெண்ணும் தன்னை தற்காத்துக் கொள்ளும் கேடயமாக இதுபோன்ற சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நிறைவாக ஒரு நிபந்தனை… Me Too என்பது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த மிகப்பெரிய வாய்ப்பை எந்தப் பெண்ணும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. தங்களுக்குப் பிடிக்காத ஆணை அவமானப்படுத்தும் உத்தியாகவோ, பழிவாங்குவதற்காகவோ பெண்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அப்படி செய்வது உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்ணுக்கு, ஆண்கள் இழைக்கும் அநீதியைவிட பெண்களே இழைக்கும் பெரும் அநீதியாகிவிடும்!