உறுப்பு தானத்தில் ஓர் உன்னதத் தருணம்! (மருத்துவம்)
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 2018 இல் உயர் மின்னழுத்த மின்சார தீக்காயங்களால் இரு கைகளையும் இழந்தார். இதன் பிறகு அன்றாட செயல்பாடுகளுக்குக்கூட அவரது தாயின் ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது. இந்த சவால் இருந்த போதிலும், அவர் கை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை பெறுவது மற்றும் இயல்பான வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் தளரா நம்பிக்கையுடனும் இருந்தார்.
மேலும், அவர் கைஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திலும் (TRANSTAN) பதிவு செய்தார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊனத்துடன் வாழ்ந்த அவருக்கு கடந்த 28 மே 2022 அன்று நல்ல காலம் பிறந்தது. அகமதாபாத்தில் இருந்து ஒருவர் அவருக்கு கை தானம் செய்ய முன் வந்தார். NOTTA மற்றும் TRANSTAN இலிருந்து இந்த விழிப்பூட்டலை அவர் பெற்றபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டார். NOTTA, TRANSTAN, DMS மற்றும் இரு மாநில அரசுகள் ஆகியவற்றின் ஆதரவாலும் விரைவான நடவடிக்கையாலும் பொருத்தப்பட வேண்டிய கை அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு 1800 கிமீ தூரம் பறந்து வந்தது. கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கையைப் பொருத்தும் வேலையில் துரிதமாய் இயங்கினார்கள்.
நோயாளி 14 மணி நேர மாரத்தான் ஆபரேஷன் செயல்முறைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர்கள் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தக் குழுவில் பிளாஸ்டிக், அழகியல் மற்றும் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை மைய இயக்குநரும் மூத்த மருத்துவருமான டாக்டர் எஸ்.செல்வ சீதாராமன் மற்றும் எட்டு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள், நான்கு எலும்பியல் நிபுணர்கள், ஒரு ரத்த நாள அறுவைசிகிச்சை நிபுணர், நான்கு மயக்கவியல் நிபுணர்கள், ஒரு சிறுநீரக மருத்துவர் (உறுப்பு மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சை) மற்றும் 30 துணை மருத்துவப் பணியாளர்கள் அடங்கியிருந்தனர்.
இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மிகச் சிறப்பாக நடந்து முடிந்த பிறகு, பயனாளி மூன்று மாதங்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப் பட்டிருந்தார். இப்போது, முழுமையாகத் தேறிவிட்டார் என்ற நிலையில் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். எதிர்காலத்திலும் சிறிது காலத்துக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த அரிய உறுப்புத் தான நிகழ்வுக்கான பாராட்டு விழாவில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.
”மாநிலங்கள் முழுவதும் இத்தகைய குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களால் இந்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. எனது புரிதலில்,இந்த சிகிச்சை செயல்முறை உண்மையில் கடினமானது, மேலும் இதை சாதிப்பதற்கு மருத்துவர்கள் ஒரு குழுவாக மிகவும் உன்னிப்பாக இதனை அணுகியுள்ளனர். உடல் உறுப்புகளை, குறிப்பாக மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் கைகளை தானம் செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் மக்களைத் தூண்டுவதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என்று பாராட்டியுள்ளார்.
கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் பிளாஸ்டிக், அழகியல் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மைய இயக்குனரும் மூத்த மருத்துவருமான டாக்டர் எஸ்.செல்வ சீதாராமன் சிகிச்சையை விவரித்து கூறுகையில், ‘‘கை மாற்று அறுவைசிகிச்சையைக் கையாள மிக உயர்ந்த அளவிலான துல்லியம் தேவை. இந்த நிலையில், முழங்கைக்கு கீழே இருபக்க கை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இந்த அரிய சாதனை தமிழ்நாட்டில் நாம் செய்திருப்பது ஒரு பெருமை. இந்தியாவிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இந்த மைல் கல்லை அடைவதில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு அளித்தமைக்காக அரசு துறைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”
என்றார்.
நிகழ்வில் இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் அலோக் குல்லர் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்கள் வெற்றிகரமாக கடந்துள்ளன. நோயாளி நன்றாக இருக்கிறார் மற்றும் தீவிர
பிசியோதெரபி மூலம் மீட்புப் பாதையில் இருக்கிறார்.